articles

img

2023 பட்ஜெட் தொடரின் போது நாடாளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணி

ஆர்எஸ்எஸ்/பாஜக ஒன்றிய ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம், மக்களைப்பாதுகாப்போம் எனக் கோரி செப்டம்பர் 5 (திங்கள் கிழமை) புதுதில்லியில் உள்ள தல்கொடோரா ஸ்டேடியத்தில் சிஐடியு-அகில இந்திய விவசாயிகள் சங்கம்-அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாபெரும் சிறப்பு மாநாடு நடைபெற்றது. சிறப்பு மாநாட்டிற்கு கே.ஹேமலதா (சிஐடியு), அசோக் தாவ்லே (அகில இந்திய விவசாயிகள் சங்கம்), ஏ.விஜயராகவன் (அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்), தலைமை வகித்தனர். சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லா, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.வெங்கட்,  சிறப்புரையாற்றினர். இந்திய வங்கி ஊழியர் சங்கம் (பிஇஎப்ஐ) தலைவர் தேபாசிஷ் பாசு, பிஎஸ்என்எல்இயு பொதுச் செயலாளர் பி.அபிமன்யு, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் பொதுச் செயலாளர் ஸ்ரீகுமார், மற்றும் தோழர்கள் அம்ராராம், அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் டி.ரவீந்திரன், பரசார், சுமித் தலால், சுனில் அதிகாரி, லலிதா பாலன், வெங்கடேஸ்வரன் முதலானவர்களும் உரையாற்றினார்கள். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் வருமாறு:

இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள், விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்களாகிய நாம், இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் அறைகூவலுக்கிணங்க, 2018 செப்டம்பர் 5 அன்று நடத்தப்பட்ட வரலாற்றுச்சிறப்புமிக்க மஸ்தூர் கிசான் சங்கர்ஷ் பேரணி (தொழிலாளி- விவசாயி சங்கமப் பேரணி) (MazdoorKisan Sangharsh Rallyயின் நான்காம் ஆண்டுதினமான இன்று, நாட்டின் செல் வத்தை உற்பத்தி செய்திடும், தொழிலாளர்கள், விவ சாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களாகிய நாம் நம் நலன்களைப் பாதுகாத்திட நம்முடைய ஒன்றுபட்ட போராட்டத்தை மேலும் வலுவுள்ளதாக மாற்றிட நம் உறுதி யைப் இந்த சிறப்பு மாநாட்டில் பிரகடனம் செய்கின்றோம். நாடு சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளைச் சமீபத்தில் நிறைவு செய்த நம் நாட்டிலுள்ள உழைக்கும் மக்க ளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாம்,  தங்கள் உடல்- பொருள்-ஆவி அனைத்தையும் தியாகம் செய்து நாட்டின் சுதந்திரத்தை நமக்கு அளித்துச் சென்றுள்ள நம் முன்னோர்கள் வழிநின்று, நம் அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளை நம் மக்கள் அனு பவிப்பதற்காக, சுதந்திர இந்தியாவில் மக்களின் பசி- பஞ்சம்-பட்டினி, வறுமை, வேலையின்மை, எழுத்தறி வின்மை முதலானவற்றிலிருந்து விடுதலை பெறவும், ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக, சோசலிசக் குடியரசை நிறுவுவதற்காக மீண்டும் உறுதியேற்போம்.

போராளிகளின்  கனவுகளை அழிப்பதா?

சுதந்திரம் பெற்றபின் கடந்த 75 ஆண்டுகளில் நம்மு டைய உழைப்பின் மூலமாக, நம்முடைய போராட்டங்க ளின் மூலமாக, நம்முடைய தியாகங்களின் மூலமாக, கொஞ்சம் கொஞ்சமாக நாம் பெற்ற உரிமைகள் அனைத்தையும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிடும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி இப்போது அழித்துக்கொண்டிருப்பதை மிகவும் வேத னையுடன் பதிவுசெய்கிறோம். மோடி தலைமையிலான ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சி யானது, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களிடமிருந்து மட்டுமல்ல; சாதி, மதம், பாலினம் முதலான அனைத்து விதமான ஒடுக்குமுறைகள் மற்றும் பாகுபாடுகளிலி ருந்தும் நாட்டை விடுவித்து, ஒரு சுதந்திரமான மற்றும் கண்ணியத்துடனான வாழ்க்கையை நாட்டு மக்க ளுக்கு அளித்திட வேண்டும் என்பதற்காகத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட போராளிகளின் கனவுகளை, காலில் போட்டு மிதித்துக்கொண்டிருக்கிறது. நம்முடைய பொருளாதாரம், கடினமாக உழைத் துப் பெற்றிட்ட நம்முடைய உணவுப் பாதுகாப்பு மற்றும் உற்பத்தித் திறன்கள், நம்முடைய ஜனநாயகம், மதச் சார்பின்மை மற்றும் கூட்டாட்சி அரசியல் அமைப்பு, நம்முடைய அரசமைப்புச்சட்ட உரிமைகள், நாடாளு மன்ற நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் என அனைத்துமே கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக் கின்றன.

1 லட்சம் விவசாயிகள் தற்கொலை

கோவிட்-19 என்னும் கொரோனா பெருந்தொற்று நாட்டைப் பீடிப்பதற்கு முன்பே நம் நாட்டின் பொருளா தாரம் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது. மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி இருந்தார்கள். மோடி அரசாங் கம் கொரோனா பெருந்தொற்றைக் கையாண்ட விதம் நிலைமைகளை மேலும் மோசமாக்கியுள்ளது. கடந்த எட்டாண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவ சாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். தினக்கூலித் தொழிலாளர்கள் தற்கொலைப் பாதை யில் செல்வது நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது 2020ஆம் ஆண்டில் 38 ஆயிரமாக இருந்தது, 2021ஆம் ஆண்டில் 42 ஆயிரமாக அதிகரித்திருக் கிறது. தேசியக் குற்ற ஆவணங்கள் மையத்தின் கணக் கின்படி 2021இல் மொத்தம் உள்ள 1 லட்சத்து 64 ஆயிரத்து 033 தற்கொலைகளில் நான்கில் ஒருவர் தினக்கூலித் தொழிலாளர் ஆவர். விவசாய நெருக்க டியும், கிராமப்புற வேலையின்மையும் நகர்ப்புறங்க ளில் இருப்பவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே ஊதியம் பெற்று வருவதும் நிலைமைகளை மிகவும் மோசமாக்கி இருக்கின்றன.

ஊதியத்தின் உண்மை  மதிப்பு கடும் வீழ்ச்சி

விலைவாசிகள் உயர்ந்துகொண்டிருக்கின்றன, ஊதியங்களோ குறைந்துகொண்டிருக்கின்றன. ஊதி யங்களின் உண்மை மதிப்பு மிகவும் கீழ்மட்டத்திற் குச் சென்றுவிட்டன. விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலைகளைப் பெற வில்லை. விவசாயம் செய்வது சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்குக்  கட்டுப்படி யாகாத நிலைக்குச் சென்றுவிட்டது. கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கான வேலைகளும் மிகவும் குறைந்துவிட்டன. நகர்ப்புறங்களிலும் நாக ரிகமான விதத்திலும், கவுரவமான ஊதியத்துடனும் வேலைகள் கிடைக்கவில்லை. வேலையின்மையும், வேலைகள் இழப்பும் பல்கிப் பெருகிக் கொண்டி ருக்கின்றன. வேலை நிலைமைகள் சீர்கேடு அடைந்து கொண்டிருக்கின்றன. பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கின்றன.

அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கின்றன. மோடி அரசாங்கத்தின் வரி விதிப்புக் கொள்கைகளின் காரணமாகவும் இதர கொள்கைகளின் காரணமாகவும் விலைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக் கின்றன. மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் பெரிய கார்ப்பரேட்டுகள் மற்றும் வர்த்தகப் புள்ளிக ளுக்குப் பயன் அளிக்கும் விதத்திலேயே அமைந்தி ருக்கின்றன. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் இதர எரிபொருள்களின் விலைகள் அநேக மாக நாள்தோறும் உயர்ந்துகொண்டே இருக்கின்றன. இவை அனைத்துப் பொருள்களின் மீதும், பொதுப் போக்குவரத்து மற்றும் இதர சேவைகளின் மீதும் தொடர் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

கொடிய ஜிஎஸ்டி வரிகள்

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்து அத்தியாவசியப் பொருள்கள் மீதும் ஜிஎஸ்டி வரிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மயான செல வினங்கள், மருத்துவமனை அறைகள், எழுதும் மை போன்றவற்றிற்கும்கூட ஜிஎஸ்டி வரிகள். மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை வங்கியிலிருந்து காசோலை மூலம் எடுப்பதாக இருந்தால், அதற்குக்கூட ஜிஎஸ்டி  வரி 18 சதவீதம் அளித்திட வேண்டும்.  ஆனால் அதே சமயத்தில் ஆடம்பரப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.

காணாமல் போகும்  நிரந்தர வேலைகள்

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (சிஎம்ஐஇ) அறிக்கையின்படி, 20 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் வேலையின்மை 42 விழுக்காடு அளவிற்கு உயர்ந்திருக்கிறது. கிராமப்புற பெண்கள் வேலையின்மையால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்கள் வேலையில் ஈடு படுவது என்பது 10 விழுக்காட்டிற்கும் கீழே சென்றிருக்கி றது. லட்சக்கணக்கான நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்த ரத் தொழில்கள் மூடப்பட்டிருக்கின்றன. இதன் விளை வாக கோடிக்கணக்கானவர்கள் வேலைகளை இழந் துள்ளார்கள். நிரந்தர வேலைகள் என்பதே காணாமல் போய்விட்டது. ஆபத்தான வேலை முறைகள் அதி கரித்திருக்கின்றன. மோடி ஆட்சியின் கீழ் முதலாளி கள் தொழிலாளர்களை கேசுவல் முறையிலும், ஒப்பந்த முறையில் வேலை வாங்குவதற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் வேலைகளுக்கான தேவை அதி கரித்துள்ள அதே சமயத்தில், மோடி அரசாங்கமோ அதற்கான ஒதுக்கீட்டைக் குறைத்திருக்கிறது. 1,498 கோடி ரூபாய் பல மாதங்களாக, இச்சட்டத்தின்கீழ் வேலை செய்த தொழிலாளர்களுக்கு அளிக்கப்படா மல் நிலுவையில் இருக்கின்றன. அதிகாரப்பூர்வ கணக் கின்படியே 1 கோடியே 47 லட்சம் பேருக்கு (சுமார் 20 விழுக்காடு) வேலை அளிக்க மறுக்கப்பட்டிருக்கிறது.

நான்கு சட்டத் தொகுப்புகள்

மோடி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் (Labour Codes), தொழிலாளர்களுக்குக் கடும் கேடுகளாகவே வந்தி ருக்கின்றன. தொழிலாளர் வர்க்கம் கடந்த நூறு ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களின் விளைவாக பெற்ற உரிமைகள் அனைத்தும் இந்தச் சட்டத்தொகுப்புகள் மூலம் பறிக்கப்பட்டிருக்கின்றன. எட்டு மணி நேர வேலை பறிக்கப்பட்டுவிட்டது. குறைந்த பட்ச ஊதியம் பறிக்கப்பட்டுவிட்டது, சமூகப் பாதுகாப்பு பறிக்கப்பட்டுவிட்டது, எல்லாவற்றிற்கும் மேலாக சங்கம் வைக்கும் உரிமை, கூட்டுபேர சக்தி பறிக்கப் பட்டிருக்கின்றன. இந்த சட்டத் தொகுப்புகள் இன்ன மும் அரசாங்கத்தால் அமல்படுத்தப்படுவதற்காக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், இதனை விரைவாக நிறைவேற்ற அரசாங்கம் துடித்துக்கொண்டி ருக்கிறது. பசி-பட்டினித் துயரம் நாட்டில் அதிர்ச்சியளிக்கும் நிலைக்குச் சென்றிருக்கிறது. 2021ஆம் ஆண்டில் உலகப் பசி-பட்டினி அட்டவணையில், (Global Hunger Index of 2021), உலகில் மொத்தம் உள்ள  116 நாடுகளில் இந்தியா 101ஆவது இடத்திற்குத் தள்ளப் பட்டிருக்கிறது. ஆனாலும் அரசாங்கமோ ஊட்டச்சத்து, மதிய உணவு போன்றவை அளிக்கும் ஐசிடிஎஸ் (ICDS) மற்றும் மதிய உணவுத் திட்டங்களுக்கான செலவினங்க ளைக் குறைத்திருக்கிறது. அவற்றை முற்றாக விலக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.

விலை பேசப்படும்  தேசியச் சொத்துகள்

நாட்டின் வளமான சொத்துக்கள் அனைத்துமே, பொ துத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், சுரங்கங்கள், ராணுவ உற்பத்திப் பிரிவுகள், பெரிய அளவிலான துறைமுகங்கள், டெலிகாம் டவர்கள், எண் ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குழாய்கள், ரயில்வே, நெடுஞ்சாலை, விமான நிலையங்கள், விமான நிறுவ னங்கள், மின்சார வாரியங்கள், உருக்கு மற்றும் அஞ்சல் சேவைகள் என அனைத்துமே பெரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க் கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தேசிய பணமாக்கும் திட்டம் (National Monetisation Pipeline) மூலமாக நாட்டின் சொத்துக்கள் அடிமாட்டு விலைக்கு விற் கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவை மக்கள் மீதான சுமைகளை ஏற்றுவது மட்டு மில்லை, இதுநாள்வரையிலும் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்ற மக்கள் பிரிவினர் அனுபவித்து வந்த இட ஒதுக்கீடுகளுக்கும் மோடி அரசு  சாவு மணி அடித்துள்ளது. இப்போதே அரசின் பல பணிக ளில் ஒப்பந்த வேலைகள் மற்றும் அவுட்சோர்சிங் அமலில் இருந்தபோதிலும் இவையும் கூட தனியாரிடம் தாரை வார்க்கத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. அக்னிபாதைத் திட்ட மானது ராணுவத்திலும் ஒப்பந்தமுறையைக் கொண்டு வரவும், மதவெறி நடவடிக்கைகளுக்காகத் தனியார் ராணு வத்தை அமைத்திடவும் வழிவகை செய்திருக்கிறது. அதே சமயத்தில் மோடி அரசாங்கம் பெரும் ஏகபோக நிறுவனங்கள், அம்பானி, அதானி வகையறாக்களுக்கு சலுகைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. அவர்க ளின் கார்ப்பரேட் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டிருக்கின் றன. செல்வ வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பெருந்தொற்றுக் காலத்தில்கூட பெரும் பணக்காரர்கள் அபரிமிதமாக செல்வத்தைப் பெருக்கினார்கள். நாட்டில் ஏற்றத்தாழ்வு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. நாட்டில் 1 விழுக்காடாக உள்ள பணக்காரர்கள், நாட்டின்மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 70 விழுக்காட்டைப் பெற்றிருக்கும் அதே சமயத்தில், நாட்டில் கீழ்நிலையில் உள்ள 50 விழுக்காட்டு மக்கள் 10 விழுக்காட்டுக்கும் குறைவாகவே பெற்றிருக்கிறார்கள்.

மோடி அரசாங்கமானது கடந்த எட்டு ஆண்டுகளில் தன்னுடைய கூட்டுக்களவாணி கார்ப்பரேட் முத லாளிகள் வங்கிகளில் வாங்கியுள்ள 10.72 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகைகளைத் தள்ளுபடி செய்திருக்கிறது. உலகில் பொருளாதார நெருக்கடியும் ஏகாதிபத்திய யுத்தங்களும் அதிகரித்துக்கொண்டுள்ள நிலையில் இந்த நிலைமைகள் நாட்டை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. எனவேதான், இவற்றுக்கு எதிராக தொழிலாளர்கள், விவ சாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தங்களது ஒன்றுபட்ட போராட்டத்தை மேலும் வலுவான முறையில் முன்னெடுத் துச் செல்ல இந்த சிறப்பு மாநாடு கோரிக்கைகளையும், போராட்டத் திட்டங்களையும் திட்டமிட்டிருக்கிறது.

நவம்பர்-டிசம்பரில் பிரச்சாரம் 
2023 ஜனவரியில் சிறப்பு மாநாடுகள் 
பட்ஜெட் தொடரின்போது பிரம்மாண்ட பேரணி

கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற சிஐடியு, விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் அனைத்துக் கிளைகளும் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் விரிவான அளவில் கோரிக்கைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 
 

இப்பிரச்சாரங்களை 2022 நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் மாநில அளவில் 2023 ஜனவரியில் சிறப்பு மாநாடுகள் நடத்திட வேண்டும். துண்டுப்பிரசுரங்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள், குழுக் கூட்டங்கள் நடத்திட வேண்டும். கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரப் பயணங்கள் (ஜாதாக்கள்), பேரணிகள் நடத்திட வேண்டும். நாடாளுமன்ற பட்ஜெட் அமர்வு நடக்கும்போது தில்லியை நோக்கி மாபெரும் பேரணிக்குத் திட்டமிட வேண்டும்.
 

நாட்டைப் பாதுகாத்திட, மக்களைப் பாதுகாத்திட சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மேற்கொண்டுள்ள இந்த அறைகூவலுக்கு நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு, ஜனநாயக மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மக்கள் அனைவரும் தங்கள் ஆதரவை அளித்திட வேண்டும் என்றும் சிறப்பு மாநாடு கேட்டுக்கொண்டுள்ளது.
 

தமிழில்: ச.வீரமணி


 

 

;