articles

img

ஓய்வுபெற்ற பின்பும் ஓயுதல் இல்லை...

தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக ஜாக்டோ-ஜியோ அமைப்பை உருவாக்கித் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கோரிக்கைகளின் பால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பிப்ரவரி முதல் வாரத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தப் போவதாகஅறிவித்துள்ளனர்.

மற்றொருபுறத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசு கண்டும் காணாமல் அலட்சியமாகவே உள்ளது. பல்வேறு கோரிக்கைகளின் மீது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அவை நடைமுறைக்கு வரவில்லை. இந்தச் சூழலில் ஓய்வூதியர்கள், சங்கம் அமைத்து தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஓய்வூதியர்கள் ஓய்வறியாப் போராளிகள்... தன்னலம் கருதாதவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர்.குறிப்பாகச் சென்னை பெருவெள்ளம், கஜா புயல்,கொரோனா தடுப்புப் பணி, கேரள வெள்ளம் ஆகியவைநிகழ்ந்தபோது பல லட்சக்கணக்கான ரூபாய்களை மட்டுமல்ல, லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்களையும் வழங்கி மக்களைப் பாதுகாத்துள்ளனர். தமிழகத்தில் ஓய்வூதியர்களுக்கு எனப் பல அமைப்புகள் உள்ளன. வட்டார அளவில், மாவட்ட அளவில், மண்டல அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சங்கங்கள் பெரும்பாலும்  கருவூலத்தில் அவ்வப்போது சில வேலைகளைச் செய்துவருகின்றன.தமிழகம் முழுவதும் உள்ள ஓய்வூதியர்களை ஒன்றிணைத்து பொதுவான கோரிக்கைகளைத் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறது. அதில் முன்னணியில் நிற்கிறது தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்.

சங்க அங்கீகாரம் வழங்குக!
தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் முதல் மாநாடு 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி வேலூரில் நடைபெற்றது. அன்றைக்கு 20 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டிருந்த அமைப்பில் தற்போது 70 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்தச் சங்கம் தனதுஐந்தாவது மாநிலப் பேரவையை டிசம்பர் 29-ஆம் தேதி மதுரையில் நடத்துகிறது. அடுத்த மாநிலப் பேரவைக்குள் உறுப்பினர் எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயரும், உயர்த்துவோம்.
அதிக உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் பெரிய சங்கமாக உள்ள தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தைத் தமிழக அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும். அனைத்து அரசாணைகளிலும் சங்கத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.

அரசுத்துறையைத் தனியாரிடம் கொடுக்காதே!
எங்களது முதல் கோரிக்கை அரசுத்துறைகளைத் தனியார் மயமாக்கக்கூடாது. அரசுத்துறைகள் அரசுத்துறைகளாகவே நீடிக்கவேண்டும். பொதுத்துறைகள் பொதுத்துறைகளாகவே நீடிக்க வேண்டும். அப்போதுதான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்; சமூகநீதி நிலைநாட்டப்படும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி, வருவாய், கிராம ஊழியர், வனத்துறை காவலர், ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

கருவூலத்தைத் தனியார்மயமாக்காதே!
ஓய்வூதியர்களுக்குத் தற்போது ஐஎப்ஹெச்ஆர்எம்எஸ் (IFHRMS) திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஓய்வூதியர்கள் பலன் பெறுவதற்குக் காலதாமதம் ஆகிறது. கருவூலங்களில் அடிப்படை வசதிகள் செய்து என்ஐசி (NIC) மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கருவூலங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்.ஓய்வூதியர்கள் 33 சதவீத பணத்தைக் கம்யூடேசனாகப் பெறுகிறார்கள். கம்முடேசன் பிடித்தம் செய்யும் காலத்தை 12 ஆண்டுகள் அல்லது 70 வயது என மாற்ற வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஓய்வூதிய முரண்பாடுகளைக் களைந்துஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வூதியத்தை உயர்த்தவேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமானவரி செலுத்துவதி லிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் அரசு
தணிக்கைத்தடை, ஒழுங்கு நடவடிக்கை எனக் காரணம் காட்டி ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்களின் பணப்பலன்கள் நிறுத்தப்பட்டுள்ளன, இதற்கெதிராக மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டு ஓய்வூதியர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த பின்னரும் உத்தரவை அமல்படுத்த அதிகாரிகள் மறுக்கின்றனர். தீர்ப்பை அமலாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறிக்கையை வெளியிட மறுப்பதேன்?
ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைய ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தலைமையிலான குழு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து 
ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட டி.எஸ்,.ஸ்ரீதர் தலைமையிலான குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கைகளைத் தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை. அதை உடனடியாக வெளியிட வேண்டும்.ஒரு வருடம் பணி முடித்தும் வருடாந்திர ஊதிய உயர்வுபெறாமலே ஊழியர்கள் பணி ஓய்வு பெற்று வந்தனர்.தற்போது சங்கத்தின் முயற்சியால் பல ஆயிரக்கணக் கானோர் பயன்பெறும் வகையில் வருடாந்திர ஊதிய உயர்வைக் பெற்றுக்கொடுத்துள்ளோம்.ஓய்வூதியர் கூட்டமைப்பை உருவாக்கி போக்குவரத்துத் துறை ஊழியர்கள் உட்பட பல்வேறு துறை ஊழியர்களுக்கு பென்ஷன் பெற்றுத்தருவதற்கான நிதி ஒதுக்கீட்டில் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

காசில்லா மருத்துவம்
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். காசில்லா மருத்துவம் ஓய்வூதியர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வழங்கவேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அவர்களுக்கான முழுத் தொகையையும் அரசு வழங்குவதில்லை. 50 சதவீதம் மட்டுமே வழங்குகிறது. தனியார் மருத்துவமனை களுக்குத்தான் காப்பீட்டுத் தொகையை வழங்குவோம் என அரசு பிடிவாதமாக உள்ளது. காப்பீட்டுத் திட்டத்தில் அரசு மருத்துவமனைகளை இணைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளை இணைக்க ஏன் மறுக்கிறீர்கள் எனக் கேட்டால், அரசு மருத்துவமனையின் டீன் அதற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்கின்றனர். காசில்லா மருத்துவம் என்பதை உறுதி செய்ய வேண்டும். பிரீமியத்தை ரூ.150-ஆகக் குறைக்க வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்திலிருந்து ஆஞ்சியோ கிராம் உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைக் கட்டணங்களையும் காப்பீட்டு நிறுவனமே முழுமையாக ஏற்க வேண்டும்.

உடலை ஒப்படைக்க மறுப்பது அநீதி
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனை யில் சிகிச்சை பெறும் ஓய்வூதியர் இறந்துவிட்டால் முழுச்செலவுத் தொகையையும் செலுத்தினால்தான் உடலை ஒப்படைப்போம் எனக் கூறுவது அநீதி. பணம் ஏதும் பெறாமல் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.சத்துணவு, அங்கன்வாடி, உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள், கிராம ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறப்பு ஓய்வூதியர்களையும் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும்.

போக்குவரத்து-மின் ஊழியர்கள்
போக்குவரத்து ஊழியர்களுக்கான பென்ஷனை மாநில அரசே வழங்க வேண்டும். மின் ஊழியர்கள் தங்களது ஓய்வூதியம் தனியார் மயமாக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். மின்வாரிய ஓய்வூதியர்களின் பென்ஷன் தனியாரிடம் செல்வதை அரசு தடுக்க வேண்டும். மின் ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும்.ஆண்டுக்கணக்கில் நிலுவையிலுள்ள மூத்த குடிமக்களின் வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவாகமுடிக்கத் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும்.

மறைமுக இந்தித் திணிப்பு
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குக் குறுஞ்செய்திகள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் வருகிறது. ஆங்கிலம், இந்தி தெரியாத ஓய்வூதியர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் இது. அனைத்துத் தகவல்களையும் தமிழிலேயே கொடுக்கவேண்டும். மத்திய அரசின் மறைமுக இந்தித் திணிப்பிற்குத்தமிழகம் துணைபோகக் கூடாது.ஓய்வூதியர்கள் பலருக்குச் சொந்த வீடுகள் இல்லை. வீடில்லாத ஓய்வூதியர்களுக்கு வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும். அரசின் சார்பில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குறைந்த கட்டணத்தில் வீடு வழங்க வேண்டும்.பெறும் ஓய்வூதியத்தில் 30 சதவீதத்தை மருத்துவத்திற்கும், 30 சதவீதத்தை வீட்டு வாடகைக்கும் செலவழிக்கும் நிலையில் ஓய்வூதியர்கள் உள்ளனர். 100 ரூபாயில் 60 ரூபாய்இந்த இரண்டிற்கும் போய்விட்டால் எஞ்சியுள்ள 40 ரூபாயை வைத்து வாழமுடியாத சூழலில் 80 சதவீத ஓய்வூதியர்கள் உள்ளனர்.மத்திய-மாநில அரசுகள் தொடர்ச்சியாக ஏதாவது ஒரு வகையில் பென்ஷனை சீரமைத்துக்கொண்டே இருக்கின்றன. முதியோரை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற உணர்விற்கு மாறாக செயல்படுகின்றனர். பென்ஷன் குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். தற்போதுள்ள விலைவாசி நிலையில் சேமிக்க முடியாவிட்டாலும் பென்ஷனில் உயிர்வாழ்வதை பெரும் சவாலாகஅரசுகள் மாற்றியுள்ளன.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஓய்வுக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க, அவர்கள் கௌரவமாக வாழ வழிவகைச் செய்ய வேண்டிய தார்மீகக் கடமை தமிழக அரசிற்கு உள்ளது. அதை உரத்துச் சொல்லிவருகிறது தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்.வெறும் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு காலம் கடத்துவது எங்கள் நோக்கமல்ல, மக்கள் நலனிலும், பண்பாட்டுத்தளத்திலும் எங்களது பணி தொடர்கிறது.எங்கள் கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல... அரசுத்துறைகளில் காலியாக உள்ள 5.50 லட்சம் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் அரசாணை 56-ஐ ரத்துச் செய்ய வேண்டும்.தமிழகம் வளமான பாதையில் வளர்ச்சியை நோக்கிச் செல்லவேண்டும் என்பது எங்கள் நோக்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் நோக்கம். தனியார்மய, தாராளமய, உலகமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய அரசின் பாதையில் தமிழக அரசும் சென்று கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் புதிய பென்ஷன்திட்டம். பணியில் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள்குருவிகள் போல் சிறுக சிறுக சேகரித்த பணத்தைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து சூறையாட முயற்சிக்கிறது. இதை அனுமதித்தால் எதிர்காலத்தில் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

அதேபோல் பிஎஸ்என்எல், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் நாட்டையே கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடகுவைக்க மத்திய அரசு முயல்கிறது.கோடிக் கைகள் இணைவதன் மூலமே கோரிக்கைகள் நிறைவேறும். கோரிக்கைகள் நிறைவேறுவதற்கான போராட்டத்தில் தமிழக உழைப்பாளி மக்களுக்குத் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்  பக்கபலமாக நிற்கும்.சங்கத்தின் ஐந்தாவது மாநிலப்பேரவையை வெற்றிகரமாக நடத்துவதற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பணியாற்றிவரும் மதுரை மாவட்டத் தலைவர்குரு.தமிழரசு, மாவட்டச் செயலாளர் பி.பாலசுப்பிர மணியன், மாவட்டப் பொருளாளர் என்.ஜெயராமன், வரவேற்புக்குழுத் தலைவர் எம்.பரமேசுவரன் உள்ளிட்ட குழுவினருக்கு மாநில மையம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.ஓய்வூதியர்கள் ஓய்வறியாப் போராளிகள் என்பதை மதுரையில் நடைபெறவுள்ள பேரவை நிரூபிக்கும்.

கட்டுரையாளர்:  என்.ஜெயச்சந்திரன், மாநிலப்பொருளாளர், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்

;