articles

img

பன்முக திறன் கொண்ட தலைவர் தோழர் பி.இராமமூர்த்தி.....

இந்தியாவின் பிரபல சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் தலைவரும் இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் புகழ்பெற்ற தலைவருமான பி.ராமமூர்த்தி 1908ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி சென்னையில் பிறந்தார். இந்து உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே தேசிய இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அவர் காங்கிரஸ் கூட்டங்களில் தவறாமல் பங்கெடுப்பார்.

 1920ம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாடு, மாணவர்கள் அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெறும் பள்ளிகளை விட்டுவிட்டு தேசியப் பள்ளிகளில் அதாவது தேசியத் தலைவர்கள் நடத்திய சிறப்புப் பள்ளிகளில் பயில வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதால் ராமமூர்த்தி தன் படிப்பை கைவிட்டு  அலகாபாத்தில் ஜவஹர்லால் நேருவும் புருஷோத்தமதாஸ் தாண்டனும் நடத்தி வந்த தேசியப் பள்ளியில் சேர முடிவு செய்தார். 

இதைத் தொடர்ந்து,வீட்டில் யாரிடமும் சொல்லாமல் பயணச்சீட்டு வாங்காமல் ரயிலில் ஏறி அலகாபாத் சென்றார். அங்கே தேசியப் பள்ளியில் சேர்ந்தார். அங்கே நேருவும் மற்ற தலைவர்களும் தேசிய அரசியல் , உலக அரசியல், பொருளாதாரம், வரலாறு போன்றவற்றை கற்பித்தனர். இரண்டாண்டு அங்கிருந்த ராமமூர்த்தி , இனியும் அங்கிருப்பது பயனற்றது என்று கருதி திரும்பி வந்து மீண்டும் இந்து உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். இதனால் அவருக்கு இரண்டாண்டு காலம் வீணானது. 
பள்ளி இறுதி வகுப்பில்  அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்ற ராமமூர்த்தி சென்னை ராஜதானி கல்லூரியில் சேர்ந்தார். அதே நேரத்தில் காங்கிரஸ் ஊழியராகவும் இருந்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த கல்லூரி முதல்வரான ஆங்கிலேயர் பைசன் என்பவர் ராமமூர்த்தியை மிரட்டினார். இதனால் வெறுப்படைந்த ராமமூர்த்தி அங்கே படிப்பைக் கைவிட்டு காசியிலிருந்த வித்யா பீடத்தில் சேர்ந்து படித்தார். 1927ம் ஆண்டின் இறுதியில்  சைமன் கமிஷன் செயல்படுவதை எதிர்க்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தது. எனவே ராமமூர்த்தி காசியில் தன் சக மாணவர்களைத் திரட்டி சைமன் குழுவினர் அங்கே வந்தபொழுது கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார். 1930ம் ஆண்டில் தனது பி.எஸ்.சி. இறுதித் தேர்வை எழுதிய ராமமூர்த்தி அடுத்த நாளே அந்நகரில் அந்நியத் துணிகளை எரித்து சிறை சென்றார். அவருக்கு ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 

தண்டனை முடிந்து சென்னை திரும்பிய  ராமமூர்த்தி அங்கே காங்கிரஸ் கட்சியின் போராட்டங்களை நடத்துவதில் இறங்கினார். எனவே அவர் கைது செய்யப்பட்டு ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். 1933ம் ஆண்டில் கல்கத்தாவில் காங்கிரஸ் கட்சிஎஸ்பிளனேட் பகுதியில் தடையை மீறி மாநாடு நடத்தியபோது, ஆங்கிலேய அரசாங்கம் குதிரைப் படையை ஏவி அந்தக் கூட்டத்தை கலைத்தது. காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆளுக்கொரு பக்கமாக ஓடினர். ஆனால், கால் ஊனமான ராமமூர்த்தி ஓட இயலாததால் மூன்று, நான்கு குதிரை போலீசார் அவரை சுற்றி நின்று சவுக்கால் அடித்து, சட்டையை கிழித்து,  இரத்தக் காயங்களை உண்டாக்கினர். அவர் நொண்டிக் கொண்டே ஓடி ஒரு செருப்புக் கடைக்குள் புகுந்து தன்னைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. 

1932ம் ஆண்டில் மகாத்மா காந்தி அரிஜன சேவை இயக்கத்தை துவக்கியபோது ராமமூர்த்தியும் அதில் தீவிரமாக பங்கெடுத்தார். அச்சமயத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்தர்ம கர்த்தாக்களுக்கான தேர்தல் நடைபெறவிருந்தது. அந்த விதிகளைப் படித்த ராமமூர்த்தி நான்கு அணா சந்தா செலுத்தும் வைணவர்கள் யாரும் அந்தத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்றிருப்பதை கண்டு அந்தப் பகுதியிலிருந்த செருப்பு தைக்கும் வைணவர்களை வாக்காளர்களாக பதிவு செய்தார். இதைக் கண்ட வைணவ பழமைவாதிகள் இதற்கெதிராக நீதிமன்றம்  சென்றனர். ராமமூர்த்தியும் தங்கள் சார்பில் வழக்கறிஞர்களை நியமித்து வாதாடச் செய்தார். நீதிமன்றம் அந்த செருப்புத் தைக்கும் வைணவர்களுக்கு வாக்களிக்க உரிமை உண்டு என்று தெளிவாகத் தீர்ப்பளித்தது. எனவே அவர்கள் அனைவரும் தர்மகர்த்தா தேர்தலில் வாக்களித்தனர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தலித் மக்களுக்கு சட்டப்பூர்வ உரிமையை பெற்றுத் தந்தது ராமமூர்த்தியே ஆவார். இந்தத் தீர்ப்பை படித்த மகாத்மா காந்தி அதைப் பாராட்டி ‘ ஒரு ருசிகரமான தீர்ப்பு’ என்ற தலைப்பில் தனது ‘அரிஜன்’ ஏட்டில் ஒரு பக்கம் செய்தி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1934ம் ஆண்டில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்த  ராமமூர்த்தி அக்கட்சியின் முடிவுப்படி தொழிற்சங்கங்கள் மற்றும் இதர அமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.  அவருடன் ப.ஜீவானந்தம், ஏ.எஸ்.கே.அய்யங்கார், சி.எஸ்.சுப்ரமணியம், கே.முருகேசன் போன்றோரும் இப்பணியில் ஈடுபட்டனர். 

இவற்றை கவனித்த கம்யூனிஸ்ட் தலைவர்களான பி. சுந்தரய்யாவும், எஸ்.வி. காட்டேயும் இவர்களை ஒன்றிணைத்து 1936ம் ஆண்டில் தமிழகத்தில் முதல் கம்யூனிஸ்ட்குழுவை உருவாக்கினர். அன்று முதல் அவர் இறுதி நாள் வரை அவர் மார்க்சிய லட்சியத்தில் தன்னை முழுக்க முழுக்கஈடுபடுத்திக் கொண்டார். 1940ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கம் பி. ராமமூர்த்தி, சி.எஸ். சுப்ரமணியம், மோகன் குமாரமங்கலம் மற்றும் ஆர். உமாநாத் போன்றோர்களை கைது செய்து சென்னை சதி வழக்கு நடத்தியது. இதில் ராமமூர்த்திக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால் 1942ம் ஆண்டு ஜுலை மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்த தடையை ஆங்கிலேய அரசாங்கம் நீக்கியதை தொடர்ந்து ராமமூர்த்தி விடுதலை செய்யப்பட்டார். 

வெளியே வந்த ராமமூர்த்தி தமிழகத்தில் குறிப்பாக மதுரை, கோவை, விக்கிரமசிங்கபுரம், நெல்லிக்குப்பம் போன்ற இடங்களில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை உருவாக்குவதில் தன்னை முழுக்க முழுக்க ஈடுபடுத்திக் கொண்டார்.  1948ம் ஆண்டில் கட்சி தடைசெய்யப்பட்ட பொழுது தலைமறைவான ராமமூர்த்தி 1951ம் ஆண்டு இறுதியில் பிடிபட்டார். மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.அச்சமயத்தில்  இந்தியாவின் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெறத் துவங்கியது. 1952ம் ஆண்டின் ஆரம்பத்தில் தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சி ராமமூர்த்தியை மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கான தனது வேட்பாளராக நிறுத்தியது. அவர் சிறையில் இருந்தவாறே பெரும் வெற்றி பெற்றார்.பின்னர் விடுதலையான ராமமூர்த்தி சென்னை சட்டமன்றத்தின் கம்யூனிஸ்ட் குழுவின் தலைவராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் ஐந்தாண்டுகள் செயல்பட்டார். நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம் உருவாக்கப்படவும், சேலம் உருக்காலை தமிழகத்தில்  நிறுவப்படவும் அவர் அரும்பாடுபட்டார். தமிழக மக்களின் கனவுகளை நனவாக்கினார். 

1953ம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது  அகில இந்திய மாநாட்டில்அவர் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1956ம் ஆண்டில் அவர் கட்சியின் மத்தியக் குழுப் பணிக்காக தில்லிக்கு அழைத்துக்கொள்ளப்பட்டார் . அங்கே அவர் கட்சியின் ஆங்கில வார ஏடான ‘நியூ ஏஜ்’ ஏட்டின் ஆசிரியராகச் செயல்பட்டார். ஏராளமான கட்டுரைகள் எழுதினார். 1934ம் ஆண்டிலிருந்து தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ராமமூர்த்தி வெகு விரைவில் இந்தியாவின் பிரபல தொழிற்சங்கத் தலைவர்களுள் ஒருவரானார். பல சங்கங்களுக்கு தலைவராகச் செயல்பட்டார். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கவும் பலப்படுத்தவும் அவர் பெரிதும் பாடுபட்டார். 
1970ம் ஆண்டில் புரட்சிகர தொழிற்சங்க அமைப்பான சிஐடியு உருவாக்கப்பட்டபொழுது அதன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பல ஆண்டுகள் செயல்பட்டார். பின்னர் அதன் உதவித் தலைவரானார்.1962ம் ஆண்டில் இந்திய -சீன எல்லை மோதலின் போது பல மாத காலம் அவர் பாதுகாப்புக் கைதியாக கடலூர்சிறையில் அடைக்கப்பட்டார்.1964ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்ட அவர் 1966ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிறையில் இருந்தார். 

1967ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் மதுரை மக்களவை தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி குழுவின் துணைத்தலைவராக செயல்பட்டார்.  இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் மொத்தம் 14 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் தலைவராகவும் மக்களவையில் அதன் உதவித் தலைவராகவும் அவர் செயல்பட்டார். ஏராளமான மக்கள் பிரச்சனைகளில்  அற்புதமான உரைகளை நிகழ்த்தினார். காலிஸ்தான் பிரச்சனை, அசாம் பிரச்சனை, பம்பாயில் தமிழர்கள் மீது சிவசேனை தாக்குதல், மேற்கு வங்கத்தில்மார்க்சிஸ்ட் கட்சி மீதான கொடூரத் தாக்குதல் போன்றவற்றை அவர் நாடாளுமன்றத்தில் விரிவாக எடுத்துரைத்தார்.  பொருளாதாரத்தில் ஆழ்ந்த புலமை கொண்ட ராமமூர்த்தி நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் பொருளாதார போலித்தனத்தை அம்பலப்படுத்தி உரையாற்றியுள்ளார். பல்வேறு பிரச்சனைகள் குறித்து பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.  

அவரது குடும்பம் முழுவதுமே கட்சிக் குடும்பமாகும். அவரது துணைவியார் அம்பாள், புதல்விகள்  டாக்டர் பொன்னி மற்றும் வழக்கறிஞர் வைகை ஆகியோர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்கள்.தன் கடைசி ஆண்டுகளில் பல முறைநோய் வாய்ப்பட்டராமமூர்த்தி 1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ம் தேதி காலைசென்னை பொது மருத்துவமனையில் உயிர் நீத்தார். டிசம்பர் 16ம் தேதி நடைபெற்ற அவரது இறுதி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். 2007ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதியன்று மதுரையில் நடைபெற்ற அவரது நூற்றாண்டு விழாவில் அவரது ஆளுயர வெண்கலச் சிலையை பிரகாஷ் காரத்  திறந்து வைத்தார். 

==என்.ராமகிருஷ்ணன் ===

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தீக்கதிர் பொன்விழா மலரிலிருந்து...

;