articles

img

கோவிட் - 19 இரண்டாவது அலை... மக்களின் சுகாதாரம், வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடுக... (பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம்)

கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா மிகப்பெரிய அளவில் பேரழிவு நிலையை எதிர்கொண்டிருக்கிறது. ஏப்ரல் 4ஆம் தேதியன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதைப் பார்த்தோம். ஒவ்வொரு நாளும் 1,03,709 பேர் பாதிக்கப்படுவதாகப் பதிவுகள் வந்திருக்கின்றன. அதன்பின்னர் மூன்று நாட்கள் கழித்து, ஏப்ரல் 7ஆம் தேதியன்று, இந்த எண்ணிக்கை 1,26,260 என உயர்ந்திருக்கிறது. இது உலகிலேயே நாள்தோறும் எண்ணப்படுவதில் மிகவும் உச்சத்தில் இருக்கும் எண்ணிக்கையாகும். இறப்போர் விகிதமும் மலைபோல் உயர்ந்துகொண்டிருக்கிறது.  

இவ்வாறு அதிகரித்துவருவதைத் தடுப்பதற்காக, அரசாங்கம் எவ்விதமான தயாரிப்புப்பணிகளிலும் ஈடுபடவில்லை என்று கூறுவதுகூட குறைபாடுடைய ஒன்றேயாகும். உண்மையில் இதற்கு முற்றிலும் மாறாக, நாட்டில் இதுதொடர்பாக மோசமாக இருந்த நிலைமை ஜனவரியிலேயே சரியாகிவிட்டது என்பது போலவும், பொருளாதாரமும் மிகவும் சிறப்பான முறையில் மீட்கப்பட்டுவிட்டது என்பதுபோலவும் மோடி அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது.மக்களுக்கு சுகாதார வசதிகளைச் செய்து கொடுப்பதிலும், அதேபோன்று பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் நிவாரணம் அளிப்பதிலும் மோடி அரசாங்கம் மிகவும் அலட்சியமானவிதத்திலேயே நடந்து கொண்டது. இது அதன் 2021-22 பட்ஜெட்டில் பிரதிபலித்தது. பட்ஜெட்டில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுகாதாரத்துறைக்கு என்று 137 சதவீத உயர்வுடன் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டபோதிலும், உண்மையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான 2021-22க்கான பட்ஜெட் ஒதுக்கீடு என்பது 2020-21இல் இருந்த செலவினத்தைவிடவும் 9.6 சதவீதம் குறைவாகவே ஒதுக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

சுகாதார கட்டமைப்புக்காக...
அதேபோன்று இந்தியாவில் சீரம் இன்ஸ்டிட்யூட்டினால் (Serum Institute), கோவாவாக்ஸ் (Covovax) விரைவுபடுத்த வேண்டியிருப்பதால், கோவாவாக்ஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட வேண்டிய நிலை இருக்கிறது. அதேபோன்று மத்திய அரசாங்கம், ஆரம்ப, இடைநிலை மற்றும் மூன்றாம்நிலை சுகாதார அமைப்பு முறைக்காகவும், இதர பொது சுகாதார வசதிகளுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ள  ஆத்மநிர்பார் ஸ்வஸ்த்யா பாரத் யோஜனா என்னும் தன்னுடைய திட்டத்திற்காக, தேவையான பணத்தை உடனடியாக ஒதுக்கிட வேண்டும். இந்தத் திட்டத்திற்கான செலவினம் ஆறு ஆண்டு காலத்திற்கு 64,180 கோடி ரூபாய் ஆகும் என்று திட்டமிடப்பட்டுள்ளபோதிலும், பட்ஜெட்டில் இந்தத்திட்டத்திற்காக எவ்விதமான ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. இந்தத் திட்டத்திற்காகப் போதிய நிதி ஒதுக்கி இதனை உடனடியாக செயலுக்குக் கொண்டு வந்திட வேண்டும். அதன்மூலம் பொது விநியோக முறைக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்.

பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் கூறிவருவதற்கு முற்றிலும் விரோதமான முறையில் பொருளாதார வளர்ச்சி என்பது ஸ்தம்பித்து நின்றுகொண்டிருக்கிறது என்பது நன்கு  தெரிகிறது. முக்கியத்துறைகள் (core sector) அனைத்தும் கடந்த ஆறு மாதங்களில் செங்குத்தான முறையில் சுருங்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தொடங்குவதற்கு முன்பே உற்பத்திப் பிரிவுகளும் கடந்த ஏழு மாதங்களில் மிகவும் கீழான நிலைக்குச் சென்றிருக்கிறது.  இப்போது, இரவு ஊரடங்குகள், வார இறுதி நாட்களில்சமூக முடக்கங்கள், மக்களின் நடமாட்டத்தில் கட்டுப்பாடுகள் போன்றவற்றைக் கொண்டுவர இருப்பதன் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் மேலும் மோசமாகும். முழுமையான சமூக முடக்கம் தவிர்க்கப்பட்டபோதிலும், கொரோனா வைரஸ் தொற்றால் அதிகரிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சில்லரை வர்த்தகம், உணவு விடுதிகள் மற்றும் ஓட்டல்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளன.

நேரடி நிதி வழங்கல்
கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை காலத்தின்போது, மக்களின் துன்ப துயரங்களைப் போக்குவது குறித்து, மோடி அரசாங்கம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் பொறுப்பின்றி இருந்தது. இந்த சமயத்தில் அறிவிக்கப்பட்ட நிதி ஊக்குவிப்புத் தொகுப்பு என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  வெறும் 1.5 சதவீதமேயாகும். அமெரிக்கா, கிரேட் பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளில் எல்லாம் மக்களுக்கு கணிசமான அளவிற்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. அதுபோன்று இந்தியாவில் மக்களுக்கு எவ்விதமான நிதி உதவியும் அளிக்கப்படவில்லை. மாறாக மோடி அரசாங்கம், அற்ப அளவில் ஏதோ உதவி செய்தது. நாட்டிலுள்ள சிறிய வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எவ்விதமான ஆதரவினையும் அளித்திட மறுத்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல லட்சக்கணக்கானவர்கள் – ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் – உணவு இன்றி, தங்குமிடமின்றி பல மைல்கள் தூரம் நடந்தே சென்றார்கள். இது அரசாங்கம் எந்த அளவிற்கு மனிதாபிமானமற்ற முறையில் மக்களிடம் நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கான மோசமான அடையாளமாகும்.

இப்போது இரண்டாவது அலை காலத்தில் வரவிருக்கும் நெருக்கடியை எதிர்கொள்ள இப்போதாவது அரசாங்கம் துல்லியமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். இதன் முதல் நடவடிக்கையாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்கு 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் அளித்திடுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும். இதில் 10 கிலோ கிராம் இலவசமாக இருந்திட வேண்டும்.முன்பு, அரசாங்கம், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் வரையறைக்குள் வரும் அனைத்துக் குடும்பத்தினருக்கும் இலவசமாக 5 கிலோ அரிசி/கோதுமை மற்றும் ஒரு கிலோபருப்பு இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆயினும் இதுவும் 2020 நவம்பர் வரை மட்டுமே நீடித்தது.

2021 மார்ச் 1 தேதி வாக்கில், இந்தியாவில் உணவு தானியங்கள் மிகப்பெரிய அளவில் சுமார் 9.2 கோடி டன்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமாகக் கொள்முதல் செய்வதைவிட இது மூன்று மடங்கைவிட அதிகமாகும். எனவே மத்திய அரசாங்கம் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குறைந்தபட்சம் 10 கிலோ உணவு தானியங்களை இலவசமாக அளித்திட வேண்டும்.

11 கோடிப் பேருக்கு வேலை
சென்ற 2020 செப்டம்பரில் அனைத்து எதிர்க்கட்சிகளுமே வருமானவரி வரம்புக்குள் வராத அனைத்துக் குடும்பத்தினருக்கும் 7500 ரூபாய் ரொக்கமாக வழங்கிட வேண்டும் என்று கோரின. அரசாங்கம் ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருந்த பெண்களுக்கு 1500 ரூபாய்மட்டும் மூன்று தவணைகளில் அளித்தது.  கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி இன்னமும் தீராது நீட்டித்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், மத்திய அரசாங்கம் அனைத்துக் குடும்பத்தினருக்கும் நிதியுதவி அளித்திட வேண்டும். வேலைவாய்ப்பில்  நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ், ஆண்டுக்கான வேலை நாட்களைக் குறைந்தபட்சம் 200 என உயர்த்திட வேண்டும், ஊதியத்தையும் உயர்த்திட வேண்டும். அதனைச் செய்யும்வரை, மாநிலங்களில் இதன்கீழ் பணிசெய்வோருக்கு ஊதியங்கள் வழங்குவதற்காகப் போதுமான அளவுக்கு ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அரசாங்கம் இதேபோன்று நகர்ப்புற கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் ஒன்றையும் அறிவித்து, நகர்ப்புறங்களில் வேலையில்லாதிருப்போருக்கு நிவாரணம் அளித்திட வேண்டும்.

நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவினர் சுமார் 11 கோடி பேர்களுக்கு வேலை அளித்திட வேண்டும். இந்தத்துறை, கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்துறையைச் சரிசெய்திட இதுவரையிலும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.இத்துறையின்கீழ் கடன் வாங்கியவர்களுக்கு திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை நீட்டித்திட வேண்டும், நிலுவையில் உள்ள கடன்களுக்கான வட்டியைத் தள்ளுபடிசெய்திட வேண்டும், மூலப் பொருள்களையும், இது தொடர்பான இதர பொருள்களையும் வாங்குவதற்கு மானியங்கள் அளித்திட வேண்டும். இவை அனைத்திற்கும் பொது செலவினத்தின்கீழ் அதிக அளவு நிதி ஒதுக்கப்படவேண்டியது அவசியமாகும். அரசாங்கம் இதில் கடுமையாக நடந்துகொள்ளக்கூடாது. மேலும் கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் பணக்காரர்கள் மீது வரிகளை அதிகரித்திட வேண்டும். செல்வ வரி (wealth tax) அறிமுகப்படுத்திட வேண்டும். இதன்மூலம் அதிக அளவில் வருவாயைப் பெருக்குவதற்காக நாள்தோறும் பெட்ரோலியப் பொருட்கள் மீது அதிக அளவில் வரி விதிப்பதை மாற்றி அமைத்திட வேண்டும்.

95 சதவீத மக்களுக்கு கேரளாவில் இலவச சிகிச்சை 
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக கேரள அரசாங்கம் தன் மக்களுக்கு என்ன செய்திருக்கிறதோ அதேபோன்று மத்திய அரசாங்கம் ஒட்டு மொத்த நாட்டுக்கும்நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தன் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். கேரளாவில் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதத்தினருக்கு பொது சுகாதார அமைப்பு முறைமூலமாக இலவச சிகிச்சை அளித்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காலம் முழுவதும் 88 லட்சம் குடும்பங்களுக்கு இலவசமான உணவுப் பொருள்கள் தொகுப்புகளை வழங்கிவந்தது. இந்தத் தொகுப்புகளில் உணவு தானியங்கள் மட்டுமல்ல, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள் மற்றும் மசாலாப் பொருள்களும் இருந்தன.இவ்வாறு நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சமயத்தில் மோடி அரசாங்கம் பொது சுகாதார முறையில் அவர்களுக்கு சிகிச்சை அளித்தும், பொருளாதார நெருக்கடியிலிருந்து அவர்கள் மீள்வதற்காக அவர்களுக்கு உதவிகள் செய்து தருவதற்குப் பதிலாக, இந்த நெருக்கடியை, தன்னுடைய நவீன தாராளமயப் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் வெறித்தனமான முறையில் உந்தித்தள்ளி, தன்கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகள் நலன்களை மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையில் நடவடிக்கைகளை எடுத்தது.வேளாண் சட்டங்கள், புதிய தொழிலாளர் (விரோத)சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் என அனைத்தையும் தன்னுடைய மதவெறி அரசியலுடன் கைகோர்த்து முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. நாட்டின் நலன்களுக்காக, இத்தகைய நாசகர நடவடிக்கைகளுக்கு மத்திய மோடி அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும், மக்கள் நலனைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்திட வேண்டும்.  

                                          ***********  

ஸ்புட்னிக் v உற்பத்திக்கு ஒப்புதல் அளிக்காத அரசு

மத்திய அரசாங்கத்தின் தடுப்பூசிக்கான கொள்கையை அது எப்படி வகுத்திருக்கிறது என்பதும் முரண்பாட்டுடனும், குழப்பத்துடனும் காணப்படுகிறது. அவசரப் பயன்பாட்டிற்கு என்று இதுவரையிலும் இருவிதமான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கின்றன. அஸ்ட்ரா ஜென்காவின் கோவிஷீல்டு  மற்றும்பாரத் பயோடெக்-கின் கோவாக்சின் என இரு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கின்றது. கோவாக்சின் மிகவும் சர்ச்சைக்குரிய விதத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அதே சமயத்தில், இவ்வாறு தடுப்பூசிகளை முறைப்படுத்தும் அமைப்பு இதுவரையிலும் ரஷ்யாவின் தடுப்பூசியான ஸ்புட்னிக் - V என்பதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறது. ஸ்புட்னிக் V, 35 நாடுகளில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. எனினும் இதனை உற்பத்தி செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய நிறுவனம், இதனை உற்பத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் ஒப்புதல் கிடைக்கப்பெறாமல் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிகளின் இருப்பு போதுமான அளவிற்கு இல்லாமல் மிகவும் குறைந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 1-லிருந்து45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றுக்குத் தேவையான தடுப்பூசிகள் குறித்து திட்டமிடலோ மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளோ இல்லை என்பது நன்கு தெரிகிறது.இந்த நிலையில் அரசாங்கம் ஸ்புட்னிக் V உடனடியாகப் பயன்படுத்தப்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்என்பதோடு மட்டுமல்லாமல், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான உரிமமும் அளித்திட வேண்டும். இது ஒரு தடவை அளித்தால் போதுமானதாகும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரஸி தலையங்கம், ஏப்ரல் 7, 2021,

தமிழில்: ச.வீரமணி

;