articles

img

"திருவோணமும் வாமனனும்"

நிலங்களைத் தட்டிப்பறிக்கின்றவர்களின் ஆதி பிதா யாராக இருக்கும்? என்பதை மிகச்சரியாக அடையாளம் காட்டியவர் மஹாகவி வைலோப்பிள்ளி ஸ்ரீதரன் நாயர் தான். அவர் திருத்தமாக அடையாளம் காட்டிய வாமனமார்களின் கீழ்மையான குணங்களும் சிறுமையான சிந்தனைகளும் மூவடி மண்ணைக் கவர்தற்கான திட்டங்களும் மிக இழிவானவை. அற்பமான தேவைகளுக்காக மனிதத்தைப் பாவைக்கூத்தட்டி மயங்க வைப்பவர்களும் அவர்களே.

"வாமனன்" - நில அபகரிப்பின் குறியீட்டு வடிவமாகும். ஒர் இனத் தலைவனின் காருண்யம் மிக்கஇரக்க உணர்வை முதலீடாக்கிக் கொண்டு அவனுக்குச் சொந்தமான மண்ணைப் பிடுங்கிக் கொள்கின்றதுடன் இறுதியில் அந்த இனத் தலைவனையும் அம்மண்ணின் பாதாளத்தில் புதைத்துக் கொல்லுகின்ற வன்முறையான வழிமுறையே வாமன அடையாளமாகிறது.

தமிழர்களின் குல தெய்வமான முருகனையும் மலையாளிகளின் மனங் கொள்ளை கொண்ட வேந்தனாகிய மகாபலியையும் இந்தியத் தொன்மங்களிலிருந்து பிரித்தெடுத்து  தமக்கேயான தலைவர்களாகத் தென்னிந்திய மக்கள் சொந்தமாக்கிக்கொண்டார்கள். அப்புராணக்கதையை ஏற்றுக் கொண்டு ஆராய்ந்தால் தேவர்களின் அருவருக்கத்தக்க பொறாமைதான் மஹாபலியின் துர்மரணத்திற்குக் காரணமானது என்பது தெளிவாகிறது. மக்கள் நலனை மட்டுமே முன்னிருத்தி ஆட்சி புரிவதில் நாட்டமுடைய மகாபலி என்ற அரசனை இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விடுவதற்கான பணியின் கொட்டேஷன் மகாவிஷ்ணு எடுத்துக்கொள்கிறார். இப்பணி முடிக்க வாமன வேடம் தரித்து வந்து மகாபலியின் தியாக உள்ளத்தையே அவனது அழிவுக்கான முதலாக்கி அவனை அழிக்கின்றார் மகாவிஷ்ணு.

மகாபலியின் மனைவி ராணி விந்தியாவளி என்பவள் ஆவாள்.. அவள் தன் கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி பொறுக்காமல் கதறிய கதறல்தான் அனைத்துப் புராணங்களிலும் உள்ள அவல ஒலிகளின் ஒற்றைப் பேரொலி.

"பாவனைகள் பல பல புறத்தே காட்டினாலும் ஆட்டத்தின் இறுதியில் உண்மை சுபாவம் மட்டுமே  வெளிப்படும்" என்று கூறியது போல
புராணத்தை இயற்றிய மகாகவி அவளின் பேரன்பு நிறைந்த அவலமான கதறலின் ஆழத்தை வாக்கியங்களில் விவரிக்காமல் மவுனத்தை மட்டும் இட்டு நிரப்பி அந்த வரிகளுக்கான பொருள் வாசிப்பவருக்கே வெளிச்சமாகட்டும் என்று விட்டுத் தந்து விட்டார் எனலாம்.

வாமனன் மகாபலியிடமும் அவனது மக்களிடமும் காட்டியது கடைந்தெடுத்த அநீதி. ஆயுள் தண்டனைக் கைதிக்கு வழங்கப்படும் வருடத்திற்குப் பத்து நாள் சிறைவாச விடுமுறை (பரோல்) போன்ற ஒன்றே அந்த குற்றமற்ற ஆன்மாவிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஒணச்சடங்காகும்.

காசர்கோட்டு துளுவர்களின் "பலீந்திரன் பாட்டு" என்ற பாட்டில் மகாபலி தன் நாட்டைத் திரும்பப் பெற ஒரு அருமையான வாய்ப்புத் தருகின்றார்கள். ஆகா எப்போது நாட்டைத் திரும்பப் பெறலாம் என்ற ஆவலோடு அவர்கள் தந்திருக்கும் விதிகளை நாம் நோக்கினால்  சதி புரிகின்றது.

1.உப்பு கற்பூரமாக ஆகின்ற காலத்தில்
2.உளுந்து மத்தளமாய் உருமாற்றம் ஆகின்ற காலத்தில்
3.குன்றிமணியில் உள்ள கருத்த பகுதி நிறம் மங்கி மாய்கின்ற காலத்தில்
4. மரங்கொத்திப் பறவை தன் கொண்டைப்பூவைக் கழற்றி வைக்கின்ற காலத்தில்
மன்னன் மாபலி தன் நாட்டைத் திரும்பப் பெறலாம் என்கிறார்கள்.

டார்வினின் பரிணாமக் கொள்கைகளில் கூட உயிர்களின் வளர்சிதை உருமாற்றத்திற்கு இவ்வளவு நீண்ட கால அளவு சொல்லப்படவில்லை எனலாம். இதெல்லாம் நடக்கின்ற காலத்தில் நாட்டைத் திரும்பக் கொடுப்பதும் நடக்கும் என்ற தாங்கள் அளித்த அருமையான (offer) வாய்ப்பினை தாங்களே பாராட்டுவர்.

நட்டமாக இழந்த பூமியைதிரும்பப்பெறுவதற்கான போராட்டத்தில் இன்றும் உள்ளனர் மகாபலியின் பின் வந்த வம்சமாகிய ஆதிகுடிகள்.
இந்தியாவின் மிகச்சிறந்த பாடகியாகத் தெரிவுசெய்யப்பட்ட நஞ்சியம்மையும்   ஒரு சமர சகா (போரட்ட தோழர்,Comrade) தான்.
ஆம்…. பாணாசுரனின் மலையும் அணைக்கட்டும் இருப்பது கேரளத்தில்தான்.
உஷா என்ற பெயர்  எங்கும் பரவியுள்ளதும் கேரளம் தான்

மகாபலி மட்டும் தான் கேரளத்தின்  நட்சத்திரம். 
வாமனன் அல்ல.

ஈ .சந்திரசேகரன் நாயரின் உள்ளத்தில் உதயமான கனவுகளின்  மெய்ப்பாடாக "மாவேலி ஸ்டோர்கள்" கேரளத்தில் தொடங்கப்பட்டன. அப்போது திருச்சூரில் சிலர் "வாமனன் ஸ்டோர்கள்" என்று போட்டிக்குத் தொடங்கினார்கள். ஆனால் மக்களின் ஒத்துழைப்பு மாவேலிக்கும் புறக்கணிப்பு வாமனனுக்கும் கிட்டியது. இன்றும் மாவேலி ஸ்டோர்கள் மக்கள் சேவைக்குத் தயாராக நிற்கின்றன.

கேரள நாட்டின் தோற்றம் குறித்து மற்றுமொரு கள்ளக் கதையை கட்டி விட்டிருக்கிறார்கள்.பரசுராமன் மழுவை வீசி சிருட்டித்த நாடு தான் கேரளாவாவாம். இந்த மாயாஜாலங்களல்ல கேரளம் என்று மலையாளிகளின் பிரியத்திற்குரிய கதைக்காரன்  N.முகுந்தன் தன் நூலில் கூறியுள்ளார்.

தசாவதாரங்களில் ஐந்தாவது வேடம் வாமன அவதாரம். மகாவிஷ்ணு அந்த அவதாரம் தரித்து வந்தது வளமான நாட்டை நலமாக ஆண்டு வந்த மன்னன் மகாபலியை நாசமாக்கி கேரளர்களைத் துக்கத்தின் துயரக் கடலில் ஆழ்த்துவதற்காக மட்டுமே…..!

என்றால்…. அதற்கு அடுத்து வந்த பரசுராம அவதாரம்தான் கேரளத்தை உருவாக்கியது என்ற கதையையும் சொல்கிறார்கள். அந்த அவதாரம் எந்தக் கோடாலியை கடலில் வீசி எறிந்து கேரளத்தை உற்பத்தி செய்தது? என்பது அறியவில்லை.

"மகாபலியும் பரசுராமனும் தம்மில் உள்ள யுத்தம்" என்ற கவிதையில் வயலார்  இந்த செய்திகளை எல்லாம் அழகு பொருந்த விவரிக்கின்றார். குந்தல நாட்டைக் கொள்ளையடிக்க கோடாரி எடுத்து வந்த கொடுங்கோல் கள்ளன் என்று வயலார் தம் கவிதையில் கூறுகின்றார்.

படி இறங்கி நடந்த  கடலின் வீடுதான் கேரளம்.
கடல் தந்த அன்பளிப்பு.

இதில் கோடலிக்கோ அல்லது ஈட்டி எறியும் விளையாட்டுவீரருக்கோ (Javelin Throw) ஒரு பங்குமில்லை.

ஒண சிறப்பிதழ்கள் வெளிவருவதற்கு முன்பாகவே ஒணக் கொண்டாட்டத்திற்கான பொருள்களை (Onam Kid) மக்களுக்கு அளித்து கேரள அரசு ஒணத்தின் வரவை உலகிற்கு அறிவிக்கின்றது.

இப்போது கேள்வி உங்களுக்கு…
இனி தேர்தல் ஒன்று வந்தால் அதில் மாபலியும் வாமனனும் வேட்பாளர்களாக நின்றால் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்?
மாவேலிக்கு மட்டும் தான் உங்கள் வாக்கு கிடைக்கும்.
வாமனன் தான் கட்டிய வைப்புத்தொகையைக் கூட இழக்கவேண்டியிருக்கும். இது தான் மலையாளியின் மனம்.

பழம் புரட்டு பேசுவோர் யாரேனும் ஒணக் காலத்தில் மலையாளிகளுக்கு வாமன ஜெயந்தி வாழ்த்து கூறலாம். அந்த வாழ்த்தினைக் கிழித்து எறிவதற்கு அரபிக்கடலில் இடம் உண்டு. அரபிக்கடல் மாசடையும் என்றாலும் வேறு வழியில்லை எறியத்தான் வேண்டும்.

எழுத்து : குரீப்புழா ஸ்ரீகுமார்
தமிழில்: போ.மணிவண்ணன், இரா.மணிமேகலை

;