articles

img

‘அமெரிக்க ஜனநாயகத்தை’ பாதுகாக்க எந்த நாட்டு ராணுவத்தை அனுப்புவதோ?

“உங்களுடைய உயிருக்கு அஞ்சாமல் நீங்கள் போராடவில்லை என்றால், அமெரிக்கா என்ற நாடு இருக்காது”என்று தேர்தலில் தோற்ற, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடைய ஆதரவாளர்களைத் தூண்டிவிடுகிறார். கலகக்காரர்கள் அமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகமான ‘கேப்பிட்டல்’ கட்டடத்தைத் தாக்குகிறார்கள். அந்தக் கட்டடத்துக்குள் கூடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், பணியாளர் களும் அதிர்ச்சிக்குள்ளாகி, உயிருக்குப் பயந்து,கேஸ் மாஸ்க் அணிந்துகொண்டு, மேசைகளுக்குக் கீழ் எல்லாம் போய் ஒளிந்துகொண்டார்கள். அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் கருப்பு தினம் என்று இந்த மோசமான சம்பவத்தை, துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மீண்டும் உடனே கூட்டப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத்திலேயே பேசி இருக்கிறார். அந்த அளவுக்கு டிரம்ப் ஆதரவு கலகக் கும்பல்‘கேப்பிட்டல்’ கட்டடம் மீது ஏறி, தாக்குதல் நடத்தி இருக்கிறது. காவல்துறை அரணையும் மீறி, கட்டடத்துக்குள்ளே நுழைந்து, சபாநாயகரின் அலுவலகத்துக்குள் நுழைந்து அராஜகம் செய்துள்ளார்கள் கலவரக் காரர்கள். காவல்துறை துப்பாக்கிச் சூடுநடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள் ளார்கள்.

‘தேர்தலில் பெரும் முறைகேடு நடந்துள்ளது’ என்ற டிரம்பின் கூற்றை அமெரிக்காவின் பல மாகாண ஆளுனர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உச்சநீதிமன்றமும் டிரம்பின் கூற்றை நிராகரித்துவிட்டது. எனினும், தேர்தலில் தான்தோற்றாலும், ஜனாதிபதி என்ற பதவியையும், அதிகாரத்தையும் விட்டுக்கொடுக்காமல், தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு வன்முறை மூலமாக அதிகாரத்தைத் தக்க வைக்கலாம் என்பதற்காக டிரம்ப் எடுத்த கடைசி முயற்சியாக இது இருக்கிறது. அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியைப் பதவியேற்க விடாமல் ஆட்சிக்கவிழ்ப்பு செய்யும் டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த தாக்குதல் முயற்சிகள் எல்லா நாடுகளின் காட்சி, அச்சு ஊடகங்களில் செய்தியாகியுள்ளன. ஒரு ஊடகத்தில் வந்த கார்ட்டூன், ‘ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தைக் காப்பதற்காக அமெரிக்க ராணுவம் போயிருப்ப தால், அவர்களைக் கூப்பிட்டு தொந்தரவு செய்யாதீர்கள்’ என ஒருவர் சொல்வதாக சித்தரிக்கிறது.

1992 டிசம்பர் 6 அன்று ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவாரங்கள் பாபர் மசூதியைத் தகர்த்த காட்சியுடன் அமெரிக்காவின் கேப்பிட்டல் மாளிகை தாக்குதலுடன் ஒப்பிட்டுள்ளது இன்னொரு கார்ட்டூன். பாபர் மசூதி தாக்குதல் என்பது மதச்சார்பின்மையை வலியுறுத்தும் இந்திய அரசியல் சட்டத்தின் மீதானதாக்குதல். இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்.  அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம் மீதான தாக்குதல் என்பது அமெரிக்கா வின் ஜனநாயகம் மீதான தாக்குதல். எனவே இரண்டு காட்சிகளும் ஒத்துப்போகின்றன.

தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் சிலர்இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்றுள்ளனர். “இந்தியாவின் மூவர்ணக்கொடி இந்தியாவுக்கானது. அதன் இறையாண்மைக் கானது. அமெரிக்காவின் தெருச்சண்டைக் கானது அல்ல. அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சனைக்கு இந்திய தேசியக்கொடியை கொண்டுசென்ற இந்திய தேசவிரோதிகளின் விசாவை ரத்து செய்து இந்தியாவிற்கு அனுப்பவேண்டும்” என ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜனநாயகத்தைத் தாக்கும் பாசிச மனநிலை கொண்ட டிரம்ப் ஆதரவு கூட்டத்தோடு சேரும் மனோநிலை இந்த சில இந்தியர்களுக்கு எப்படி வந்தது? அமெரிக்காசென்ற பிரதமர் நரேந்திர மோடி, வழக்கமான வெளியுறவு அணுகுமுறைக்கு எதிராக,தனிப்பட்ட ஒரு ஜனாதிபதியை தேர்தலில் ஆதரிக்குமாறு அங்கு கூட்டத்தில் பேசினார். டிரம்பை இந்தியாவிற்கு வரவழைத்துகுஜராத்தில் ‘நமஸ்தே டிரம்ப்’ என்ற கூட்டம் கூட்டிப் புகழாரம் செய்தார். இவையெல்லாம் இந்துத்வா மதவெறியர்கள் உற்சாகம் அடைந்து, டிரம்புக்கு ஆதரவாகவும் ஜனநாயகத் துக்கு விரோதமாகவும் அமெரிக்காவில் செயல்படுவதற்கு தூண்டி இருக்கலாம் என எடுத்துக்கொள்ளலாம்.

தாக்குதல் சம்பவம் எதை உணர்த்துகிறது?
தனது நாட்டில் அனைத்து தரப்பினரின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய உண்மையானஜனநாயகத்தை மலரச் செய்ய முடியாத நாடு அமெரிக்கா. அதனால் அங்கு இருக்கின்ற ஜனநாயக அமைப்பும் தாக்கப்படக்கூடிய ஆபத்துகளைக்கூட களைய முடியவில்லை என்பது அப்பட்டமாகியுள்ளது. இந்த அமெரிக்காதான் உலக நாடுகளின் ‘ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில்’ தன்னுடைய ஏகாதிபத்திய நலன்களுக்காக பிற நாடுகளில் தலையீடு செய்வது தொடர்கதையாக இருக்கிறது.

பிரெஞ்சு அரசின் காலனி ஆதிக்கத்தில் இருந்த வியட்நாம், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஹோ சி மின் தலைமையில் போராடி விடுதலை அடைந்தது. ஆனால், கடைசி நேரத்தில்அமெரிக்கா வியட்நாமைத் தாக்கி, அதன் ஒரு பகுதியை தனது ஆதிக்கத்தின்கீழ் தெற்கு வியட்நாமை ஆட்சி செய்தது. அந்நாட்டு மக்கள் 25 ஆண்டு காலம் போராடி, பல லட்சம்பேரின் உயிர்த்தியாகத்துக்குப் பிறகே, அமெரிக்க ராணுவத்தை விரட்டி அடித்தார்கள்.1959 ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா தலைமையில் நடந்த புரட்சியில் கியூபாவிடுதலை அடைந்தது. தொடர்ச்சியாக பிடல்காஸ்ட்ரோவை படுகொலை செய்ய முயற்சிஎடுத்த அமெரிக்கா கியூபாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைவிதித்து அந்நாட்டை அழிக்க முயல்கிறது.இராக் பேரழிவு ஏற்படுத்தும் ரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாக பொய் சொல்லி, அந்நாட்டின் மீது படையெடுப்பு நடத்தி, அந்நாட்டைக் கைப்பற்றி, அதன் எண்ணெய் வளங்களை எல்லாம் கொள்ளையடித்து, அந்த நாட்டையே சின்னாபின்ன மாக்கியது அமெரிக்கா. இன்னமும் அமெரிக்க ராணுவம் அங்கே இருக்கிறது.

இதே கதைதான் ஆப்கானிஸ்தானிலும், சிரியாவிலும், லிபியாவிலும்.1973ஆம் ஆண்டு சிலியில் தேர்தல் மூலமாக வென்று ஆட்சி அமைத்த கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியைத் தகர்த்து,  ஜனாதிபதி சால்வடார் அலண்டேவைப் படுகொலை செய்து, ராணுவ ஆட்சியை ஏற்படுத்தியது  ஏகாதிபத்திய அமெரிக்கா.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, பொலிவியாவில் ஈவோ மொரேல்ஸ் தலைமையில் ‘சோஷலிசத்திற்கான பேரியக்கம்’ தேர்தலில் மக்கள் ஆதரவைப் பெற்று மீண்டும்ஆட்சி அமைத்த நிலையில், அந்த ஆட்சியைக்கவிழ்த்து, ராணுவத் தளபதியை ஆட்சியில் அமர்த்தியது அமெரிக்கா. சமீபத்தில் மீண்டும்அங்கே ‘சோஷலிசத்திற்கான பேரியக்கம்’வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து அமெரிக்கா வின் ஆதிக்கத்தை முறியடித்துள்ளது. வெனிசுலாவில் ஜனநாயகப்பூர்வமான ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தது. அமெரிக்காவின் தலையீட்டைத் தவிடுபொடியாக்கி தற்போது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கொண்ட மதுரோவின் கட்சி மீண்டும் அங்கு வெற்றி பெற்றுள்ளது.இப்படி உலக அளவில் அமெரிக்கா தன்னுடைய ஆதிக்கத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்கு, தொடர்ச்சியாக செய்து வரும் முயற்சிகளைப் பொறுத்தவரை குடியரசுக் கட்சிக்கும்,ஜனநாயகக் கட்சிக்கும் பெருமளவில் வேறு பாடு இல்லை.  உலக வரலாற்றில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு  வரலாறு என்பது ரத்தக்கறை படிந்தது. உலக நாடுகளின் ஜனநாயகத்தைப்  பாது காக்கிறோம் பேர்வழி என ராணுவத்தை அனுப்பி உலகநாடுகளின் வளங்களைக்கொள்ளை அடிக்கிற அமெரிக்காவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க எந்த நாட்டால் ராணுவத்தை அனுப்பமுடியும்?

அமெரிக்க அரசு அங்குள்ள பன்னாட்டுமுதலாளிகள் மற்றும் நிதி மூலதனத்திற்கான அரசு. அவர்களின் நலன்தான் அமெரிக்க ஏகாதிபத்திய அரசினுடைய நலன். தன்னுடைய ஏகாதிபத்திய நலனுக்காக எந்த வகையான அநியாய செயலிலும் ஈடுபடுவதற்குத் தயங்காத அரசுதான் அமெரிக்க அரசு. அதனால்  தான் அமெரிக்காவின் கொள்கைகள் ஆட்சிக்கவிழ்ப்பு, ஆக்கிரமிப்பு, படுகொலைகள் என்று இருக்கின்றன. உலகையே தனது ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரத்துடிக்கும் அமெரிக்க அரசின் இளைய பங்காளியாக மோடி அரசு இணைந்துள்ளது.இன்றும் இந்தியாவில் ஒரு பகுதியினர், அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு; சொர்க்கபுரி என்றெல்லாம் நம்பிக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் இனியாவது அமெரிக்க அரசின் ஏகாதிபத்தியத் தன்மையையும், அதன் உள்நாட்டு, வெளிநாட்டு அணுகுமுறைகளையும் புரிந்துகொண்டு, 90 சதவிகிதத்துக்கும் மேலான உழைக்கும் மக்களை உள்ளடக்கிய உண்மையான ஜனநாயகம் உலக அளவில் அமைவது பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

===கட்டுரையாளர் : ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)===

;