articles

img

‘வாழ்க நீ எம்மான்’! - க.கனகராஜ்

அந்தச் சிறுவனின் பெயர் சூரியக்குமார். வயது 12. அப்பா பெயிண்டர். அம்மா டெய்லர். இரண்டாண்டுகளுக்கு முன்பு பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் சானிடைசரை அறியாமல் தீயில் கொட்டியதால் விபத்து ஏற்பட்டு  சிறுவனுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடலின் அனைத்துப் பகுதிகளிலும் தீக்காயங்கள் - அதுவும் கொடுங்காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு கொரோனா காலம் என்பதால் ஆரம்பக் கட்ட சிகிச்சை முடித்த பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறான். கைகள் செயலிழந்து, சிறுநீரகம் செயலிழந்து, ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு வலிப்பு நோயும் சேர்ந்திருக்கிறது.  தொடர்ச்சியான வேலையோ, போதுமான வருமானமோ இல்லாத சிறுவனின் பெற்றோர் சத்தியஜோதி-சரவணன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தங்கள் மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார்கள். அதிகாரிகள் இடையில் வந்து பார்த்து பெரிதாக ஒன்றும் நடைபெறாத நிலையிலேயே இத்தகைய முடிவுக்கு அந்த பெற்றோர்கள் சென்றிருக்கிறார்கள். வாழ்நாள் முழுக்க அதே நிலையில் தாங்கள் பெற்ற குழந்தை அவதிப்படுவதை காணச் சகிக்காமல் இப்படியொரு வேண்டுகோளை மனம் வெறுத்து முன்வைத்திருக்கிறார்கள்.

இந்த செய்தியை அறிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள், நேரடியாக தலையிட்டு சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார். இது நடந்தது 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம். அதாவது விபத்து ஏற்பட்டு ஓராண்டிற்கு பின்னர் சென்னையில் ஆரம்பத்தில் எழும்பூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆறுவகை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சிகிச்சைக்கும் இடையே குறிப்பிட்ட கால இடைவெளி விட்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை, இரண்டு காதுகளிலும் அறுவை சிகிச்சை, இரண்டு கைகளிலும் அறுவை சிகிச்சை, வலது கக்கத்தில் அறுவை சிகிச்சை என ஓராண்டு காலம் தொடர் சிகிச்சைகளுக்கு பின்பு இப்போது அந்த சிறுவன் தனது பணிகளை தானே செய்து கொள்ளும் அளவிற்கு நன்றாக தேறியிருக்கிறான்.  கூலித் தொழிலாளிகளின் இந்த குழந்தை அரசு மருத்துவ ஏற்பாடுகள் இல்லையென்றால் என்னாகியிருப்பான் என்று எண்ணவே மனம் நடுங்குகிறது. எப்படியாவது குழந்தையை காப்பாற்றி விடலாம் என்று பெற்றோர்கள் நினைத்தாலும், பெற்றோர்களும், குடும்பத்தினரும் வாழ்நாள் முழுக்க உழைத்தாலும், இதே தொழிலில் வரும் வருவாயை வைத்து தனியார் நிறுவனங்கள் கேட்கும் கட்டணங்களை கொடுத்திருக்கவே முடியாது. 

இது ஒருபுறமிருக்க, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடனும், தங்கள் குழந்தைக்கு ஏற்பட்டதைப் போன்ற உணர்வுடனும் பணியாற்றாமல் இது சாத்தியமே இல்லை. இது அவர்களின் கடமை தானே என்று பொதுவாக எண்ணக்கூடும். கடமைக்கு செய்வதற்கும் உணர்வோடு கலந்து செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. தாங்கள் மருத்துவம் செய்து கொண்டிருக்கிற பல கேஸ்களில் இதுவும் ஒரு கேஸ் என்ற முறையில் சிகிச்சையளிப்பதற்கும், ஓர் உயிர், வருமானத்திற்கு சிரமப்படும் ஒரு குடும்பம், அந்த குழந்தையை காப்பாற்றிக் கொடுத்து விட வேண்டும் என்கிற எண்ணத்தோடு சிகிச்சையளிப்பதற்கும் நிச்சயம் வேறுபாடுகள் இருக்கின்றன. அதுதான் இதை சாதித்திருக்கிறது.  ஒரு பத்திரிகையில் சிகிச்சையளித்த மருத்துவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், மருத்துவர்கள் ஸ்ரீதேவி, ஸ்ரீதர், மகாதேவன், வெள்ளியங்கிரி, ரஷீதா பேகம் என்று பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதோடு சேர்த்து செவிலியர் சாந்தியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இன்னும் விடுபட்டுப் போனவர்கள் இருக்கக் கூடும். சுகாதாரப் பணியாளர், அவசரத்துக்கு உதவியோர், ஆறுதல் வார்த்தைகள் கூறியோர் என்று பலருக்கும் இதில் பங்கிருக்கிறது. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமனை நிர்வாகமும் மிகுந்த போற்றுதலுக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள். 

இதேபோன்று, மா. சுப்பிரமணியன் என்கிற மனிதர். அதிகாரம், அமைச்சர் என்பதற்கு எல்லாம் அப்பாற்பட்டு ஒரு பிரச்சனை கண்ணில் பட்டவுடன் கிருஷ்ணகிரியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தனது அறையில் அந்த சிறுவனின் பெற்றோர்களை தங்க வைத்து, கூலித் தொழிலாளர்கள் என்பதால் அவர்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்து, உணர்வுப்பூர்வமாக அந்த குடும்பத்தோடு இருந்திருக்கிறார். அமைச்சர் என்கிற முறையில் இவற்றையெல்லாம் ஓர் அதிகாரியை அழைத்து, செய்து கொடுங்கள் என்று சொல்லியிருக்கலாம்.

அல்லது தனது கட்சிக்காரரை அனுப்பி வைத்து இதை கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கலாம். ஆனால், தனது சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறையில் தங்க வைத்ததன் மூலமும், தொடர்ச்சியாக அது குறித்து விசாரித்ததன் மூலமும், சிகிச்சைக்கும் அந்த சிறுவனின் உயிருக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.  எப்போதாவது மருத்துவர்கள் அல்லது மருத்துவப் பணியாளர்கள் அல்லது மருத்துவமனை நிர்வாகத்தின் தவறுகளால் உயிரிழப்போ, உறுப்பு செயலிழப்போ ஏற்பட்டால் அது மிகப்பெரிய செய்தியாகும். ஆனால், ஓராண்டு ஒரு மருத்துவப் பட்டாளமே ஒருங்கிணைந்து பணியாற்றி ஓர் உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது, இயல்பாகவே கடந்து செல்லும் செய்தியாக மாறிப்போகும். ஆனால் அந்த குடும்பம், அவர்களின் பொருளாதாரப் பின்னணி இவற்றோடு எல்லாம் ஒப்பிட்டால் இது ஓர் உயிரை மீண்டும் உயிர்ப்பித்தது போன்றது தான்.  இதில் தொடர்புடைய அமைச்சர், மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்கள் என்று அனைவரையும் “வாழ்க நீ எம்மான்” என்று வாழ்த்துவது அவசியம்.  வாழ்த்துதல் என்பது வாழ்த்துவது மட்டுமல்ல; முன்னுதாரணங்கள் அங்கீகரிக்கப்படும் போது மற்றவர்களிடம் அந்த உணர்வை கடத்துவது தான். சமீப காலமாக ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு சிறப்புடன் செயல்பட்டு வருவதைக் காண முடிகிறது. இந்த முயற்சிகள் தொடர வேண்டும்.  இதேபோன்று வேறு பல அரசு மருத்துவமனைகளும் சிறப்பான முன்முயற்சிகளை மேற்கொண்டிருக்கக் கூடும்.