articles

img

இந்திய விவசாயிகள் பற்றி கவலைப்பட்ட காரல் மார்க்ஸ் - தி.வரதராசன்

கார்ல் மார்க்ஸ் லண்டனில் வசித்த காலத்தில் 1853-இல் “நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன்” என்ற பத்திரிகை யில், பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா அடைந்த வேதனைகளைக் குறித்து எழுதியுள்ளார்.  அந்த பத்திரிகையில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் விளைவுகள், இந்திய இராணு வத்தில் புரட்சிக் கலகம், இந்தியாவில் நிகழ்ந்த சித்ரவதைகள் பற்றிய விசாரணை, இந்தியாவிலி ருந்து பிரிட்டிஷாருக்குக் கிடைக்கும் வருமானம், இந்தியாவில் வரிகள்...என மார்க்ஸ் இந்திய நிலை மையைத் துல்லியமாக ஆராய்ந்து 15 கட்டுரைகள் எழுதினார். அது இன்றும் முக்கிய ஆவணமாகும். 

வறுமை வாட்டிய காலத்திலும்...

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்திய விவசாயி கள் வரி செலுத்தத் தவறியதால் கொடூரமான தண்ட னைக்கு இலக்கானார்கள். அது குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு ‘சென்னை விசாரணைக் குழு’ என்று பெயர்.  அந்த விசாரணைக் குழுவுக்கு வந்த புகார் ஒன்றை “இந்தியாவில் நிகழ்ந்த சித்ரவதைகள்” என்ற தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார், கார்ல் மார்க்ஸ்.  “நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன்”  பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா அடைந்த வேதனைகளைக் குறித்து எழுதியுள்ளார். ஏகாதிபத்திய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்திய தேசமும் மக்களும் அடைந்த கஷ்டநஷ்டங்களைப் பற்றி அந்தப் பத்திரிகையில் மார்க்ஸ் தொடர்ந்து கட்டு ரைகள்  எழுதிவந்தார். தம் குடும்பத்தை வறுமை வாட்டிய காலத்திலும்  இந்திய ஏழை விவசாயிகள் மீதான கொடூர ஒடுக்குமுறையை அவர் கவனிக்கத் தவற வில்லை.  இதோ, மார்க்ஸ் குறிப்பிடும் விசாரணைக் குழு வுக்கு வந்த அந்த புகார்:“கடந்த வாரம் எங்கள் பிசானப் (பருவ) பயிர்  மழையில்லாமல் சாவியாய்ப் போனதால் வழக்கம் போல் வரி செலுத்த எங்களால் முடியவில்லை. 1837-ஆம் ஆண்டு கலெக்டராக இருந்த திரு ஈடன்  என்பவரோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் ஷரத்துப் படி, நஷ்டம் ஏற்பட்டிருப்பதால் வரி தள்ளுபடி செய்யும் படி ஜமாபந்தி நடக்கும்போது கேட்டோம். வரி  தள்ளுபடி செய்ய மறுத்ததால் எங்கள் பட்டாக்களை எடுத்துக்கொள்ள நாங்கள் மறுத்தோம். அதற்குப் பிறகு ஜுன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை யிலும் தாசில்தார் எங்களை மேலும் கொடுமைப் படுத்தி, வரி கட்டும்படி நிர்பந்தித்தார். என்னையும் வேறு சிலரையும் சில நபர்கள் பொறுப்பில் ஒப்ப டைத்தார்கள். அவர்கள் எங்களை வெயிலில் நிறுத்தி வைத்து குனியும்படிக் கூறி, எங்கள் முதுகில் கல்லைத்  தூக்கிவைத்துக் கொதிக்கும் மணலில் நிற்க வைப்பது வழக்கம். எட்டு மணிக்குப் பிறகு சாப்பிடுவ தற்கு எங்களை அனுமதிப்பார்கள். இத்தகைய கொடு மைகள் மூன்று மாத காலம் நீடித்து நடைபெற்றது... “(மார்க்ஸ் எழுதிய இந்தியா பற்றிய கட்டுரைகள் தொகுப்பு நூலிலிருந்து.)

இந்தியாவுக்கு  ரயில் வருகை பற்றி

மார்க்ஸ் இந்தியாவில் ரயில் வருகை குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் 1853லேயே எழுதி விட்டார்!  இந்தியாவில் சுதந்திரத்திற்காக எந்தப் பகுதியில் மக்கள் போராடினாலும் விரைந்து இராணுவத்தை அனுப்பிப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவும், நம் நாட்டில் விளையும் மூலப்பொருள்களை இங்கிலாந்து க்கு எளிதாகக் கொண்டுசெல்லவும், அவற்றை தயாரிப்புப் பொருள்களாக மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவந்து விற்றுக் கொள்ளை இலாபம் சம்பா திக்கவுமே ரயில் போக்குவரத்தைப் பிரிட்டிஷார் துவக்கி னார்கள். மற்றபடி அவர்கள் இந்திய மக்களுக்குப் போக்குவரத்து வசதி செய்துகொடுப்பதற்காக இதைச் செய்யவில்லை. விருப்பம் அவர்களுக்கானதாக இருந்தாலும் மார்க்ஸ் கூறியது போல் விளைவுகள் வேறுவிதமாகவும் இருந்தது. “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியினால் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் விளைவுகள்” என்ற தலைப்பில் கார்ல் மார்க்ஸ் லண்டனிலிருந்து 1853-ஆம் ஆண்டு ஜூலையில் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு கூறியுள்ளார்:

“பிரிட்டனில் உள்ள ஆளும் வர்க்கங்களுக்கு இந்தி யாவின் முன்னேற்றத்தில் இதுவரையிலும் தற்செய லான, நிரந்தரமற்ற, அபூர்வமான அக்கறைதான் இருந்தது. நிலப்பிரபுக்கள் ஆட்சி அதைக் கைப் பற்ற விரும்பிற்று. பணமூட்டைகள் அதைக் கொள் ளையடிக்க விரும்பினார்கள். ஆலை முதலாளிகளோ குறைந்த விலைக்குத் தங்கள் சரக்குகளை அங்கு விற்க விரும்பினார்கள். ஆனால், இப்பொழுது நிலைமை அதற்கு நேர்விரோதமாக மாறிவிட்டது. தங்கள் சரக்குகளை வாங்கிவந்த தேசத்தை, அங்கேயே அவற்றை உற்பத்தி செய்யும் தேசமாக மாற்ற வேண்டியது மிகமிக அவசியம் என்பதை ஆலை முத லாளிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். அந்த நோக்கத்திற்காக, விசேஷமாக அந்தத் தேசத்திற்கு நீர்ப்பாசன வசதிகளையும், உள்நாட்டுப் போக்கு வரத்து வசதிகளையும் அளிக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்கள். ஆகவே, அவர்கள் இப்பொழுது இந்தியா முழுவதும் வலைப்பின்னல் போன்ற இருப்புப் பாதைகளைப் போட விரும்புகிறார்கள். அவர்கள் அதைச் செய்வார்கள். அதன் விளைவுகள் மதிப்பிடவே முடியாத அளவில் இருக்கும்.”( நூல்: இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ்) அதே கட்டுரையில் மார்க்ஸ் தொடர்ந்து கூறு கிறார்:

“இருப்புப் பாதைகளைப் போடுவதன் மூலமாக விவசாயத்திற்கு உதவிசெய்ய முடியும்; கரைபோடு வதற்குத் தேவையான மண்ணை வெட்டுவதன் மூலமாக குளங்களை உண்டாக்கி விவசாயத்திற்கு உதவமுடியும்; பல்வேறு இருப்புப் பாதைகளுக்குப் பக்கத்தில் கால்வாய்களை வெட்டி அதன்மூலம் விவசாயத்திற்கு உதவமுடியும். இவ்வாறு, கிழக் கத்திய நாடுகளின் விவசாயத்திற்கு இன்றியமையாத நீர்ப்பாசன வசதிகளைப் பெரும் அளவிற்கு விஸ்தரிக்க முடியும்; இதன் மூலம், தண்ணீர் கிடைக்காததால் ஸ்தலத்தில் அடிக்கடி பஞ்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில்கூட நீர்ப்பாசன வசதிகளை இப்போது பெற்றிருக்கும் நிலங்கள் நீர்ப்பாசன வசதிகளைப் பெறுவதற்கு, முன்பு கொடுத்த வரியைக்காட்டிலும் இப்போது மூன்று மடங்கு அதிகமாகக் கொடுக் கின்றன என்பதையும், முன்னைக்காட்டிலும் பத்து  அல்லது பன்னிரண்டு மடங்கு அதிகமாக வேலை வாய்ப்பைக் கொடுத்திருக்கின்றன என்பதையும், பன்னிரண்டு அல்லது பதினைந்து மடங்கு அதிகமாக லாபத்தைக் கொடுக்கின்றன என்பதையும் நாம் நினை வில் வைத்துக் கொண்டால், இருப்புப் பாதைகளின் பொதுவான முக்கியத்துவம் தெளிவாகத் தெரியும்.” 

இயந்திரச் சாதன உற்பத்தியை தடுக்க முடியாது

அதே கட்டுரையில் கார்ல் மார்க்ஸ் மேலும் சொல்லு கிறார்: “தங்கள் தொழிலுக்குத் தேவையான பருத்தி  இதர மூலப்பொருள்கள் ஆகியவற்றைக் குறைந்த  செலவில் பெறவேண்டும் என்கிற ஒரே நோக்கத் தோடுதான் ஆங்கிலேய மில் முதலாளிகள் இந்தியா வில் இருப்புப் பாதைகளை அமைக்க விரும்புகிறார் கள் என்பதை நான் அறிவேன். ஆனால், இரும்பும் நிலக்கரியும் உள்ள ஒரு நாட்டில் போக்குவரத்தில் இயந்திரச் சாதனங்களைப் புகுத்தத் துவங்கி விட்டால், அதற்குப் பிறகு அந்த நாடு அந்த இயந்திரச் சாத னங்களை தானே உற்பத்தி செய்வதைத் தடுத்து நிறுத்த முடியாது. பரந்து நீண்டுள்ள ஒரு தேசத்தில் வலைப் பின்னல் போன்ற இருப்புப் பாதைகளைப் பராமரிக்க வேண்டுமானால் உடனடியாகவும், அன் றாடமும் தேவைப்படுகிற கருவிகளை உற்பத்தி செய்கிற இயந்திரத் தொழில்களை அமைக்கத்தான் வேண்டும்; அவற்றிலிருந்து, இருப்புப் பாதைக ளோடு நேரடியாகத் தொடர்பில்லாத தொழில்க ளுக்கும் இயந்திரக் கருவிகளை உபயோகிக்கும் முறை நிச்சயமாக வளரும். ஆகவே, இந்தியாவில் இருப்புப் பாதை அமைப்பு, நவீன இயந்திரத் தொழிலின் உண் மையான முன்னோடியாகத் திகழும். இது நிச்சயமாக நடக்கப்போகும் நிகழ்ச்சியாகும். எவ்வாறென்றால், முற்றும் புதிய உழைப்புத் திறனுக்குத் தக்கவாறு தங்களைத் திருத்தித் தகுதியாக்கி கொள்வதற்கும், இயந்திரத்திற்குத் தேவையான அறிவைப் பெறுவ தற்கும் பிரிட்டிஷ் அதிகாரிகளே இந்தியர்களை அனு மதித்திருக்கிறார்கள்.” 

மேலும் “இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், இந்தி யாவின் அறிவாற்றலுக்கும் மிக முக்கியமான முட்டுக்கட்டையாக இருக்கும் சாதிகளுக்கு அஸ்தி வாரமாக உள்ள பரம்பரைக் குலத்தொழில் பிரிவினை களை இருப்புப் பாதைகள் அமைப்பதிலிருந்து உரு வாக்கப்படும் நவீன இயந்திரத் தொழில்கள் கலைத்து விடும்.” என்றார். இன்ன சாதிக்கு இன்ன தொழில் என்று விதிக்கும் வர்ணாஸ்ரமக் குலத்தொழில் முறை யையே ரயில் இருப்புப் பாதை சார்ந்து உருவாகும் இயந்திரத் தொழில்கள் ஆட்டங்காண வைத்துவிடும் என்றார் மார்க்ஸ்.