articles

img

கம்யூனிஸ்டுகளை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனது தான் வரலாறு

சென்னை, மார்ச் 14- திரிபுராவில் பாஜக வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் திங்களன்று (மார்ச் 13)  கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், பாஜக கம்யூ னிஸ்டுகளை எதிர்ப்பதற்கான காரணம் தேர்தல் தோல்விக் காக அல்ல. தத்துவார்த்த ரீதியாக ஆர்.எஸ்.எஸ். பாஜக வின் ஆணி வேரை அறுக்கின்ற கொள்கை உடையவர்கள் என்பதால் கம்யூனிஸ்டுகளை அழித்தொழிக்க நினைக் கிறார்கள். 2018ஆம் ஆண்டு திரிபுராவில் நடந்த தேர்தலில் முதன்முறையாக பாஜக அங்கு வெற்றி பெற்றதையொட்டி தில்லியில் வெற்றி விழா கொண்டாடினார்கள். அப்போது பிரதமர் மோடியிடம் செய்தியாளர்கள், நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்று விழா கொண்டாடினால் பரவாயில்லை, ஆனால் இவ்வளவு சிறிய மாநில வெற்றியைக் கொண்டாடு கிறீர்களே என்று கேட்டபோது, இது சாதாரண வெற்றி யல்ல, தத்துவார்த்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று கூறினார்.  

வன்முறையை ஏவுவது ஏன்?

பாஜக, ஆர்.எஸ்.எஸ்.சின் எந்த அம்சங்களிலும் கடு களவு கூட சமரசம் செய்யாத மாற்றுக் கொள்கையைக் கொண்ட ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம்தான். அதனால்தான் கம்யூனிஸ்ட்டுகள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். கோல்வால்கர் வகுத்திரு க்கிற கோட்பாட்டில் முதல் எதிரி கம்யூனிஸ்ட்டுகள். இரண்டாவது இஸ்லாமியர்கள், மூன்றாவது கிறித்துவர்கள். மற்றவர்களை எதிரியாகக் கூறவில்லை என்று நினைத்துவிடக் கூடாது. அவர்களுக்கு அம்பேத்கர், பெரியார், தலித் இயக்கங்களும் எதிரிகள்தான். மனிதர்கள் ஒன்றாக இருந்துவிடக் கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் தத்துவம். இந்துக்கள் அனைவரும் ஒன்றாக இருப்போம் எனக் கூறலாம். ஆனால் இந்துக்க ளைப் பிரித்து வைத்திருக்கிற மநு ஸ்மிருதியைத் தூக்கிப் பிடிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.  உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள், நீங்கள் அடையப் போவது ஒரு  பொன்னுலகம். உங்கள் கை விலங்குகள் உடைக்கப்படு கிற சமூகம் அமைய வேண்டும் என்று மார்க்ஸ் கூறி னார். அதனால்தான் பாஜக-ஆர்.எஸ்.எஸ். மார்க்ஸ் குறித்து தவறாகப் பேசுகிறார்கள்.

தவறான பிரச்சாரம் 

திடீரென தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர் களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற தவறான பிரச்சா ரத்தைக் கிளப்பி விட்டார்கள். ஆனால் அரசு சாதுரிய மாகச் செயல்பட்டு அந்த பிரச்சாரத்தை முறியடித்து விட்டது. இல்லையென்றால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மிகப்பெரிய கலவரம் வெடித்திருக்கும். ஆர்.எஸ்.எஸ். பாஜகவைப் பொறுத்தவரை நாட்டில் அம்பானிகள், அதானிகள் போன்றவர்கள்தான் இருக்க வேண்டும். கடந்த 8 ஆண்டுக்கால ஆட்சியில் அதானியின், அம்பானியின் சொத்து மதிப்புதான் உயர்ந்துள்ளது. சாதா ரண ஏழை எளிய உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. பாஜக, ஆர்.எஸ்.எஸ். கார்ப்பரேட் நிறு வனங்கள் தான் வளர்ந்துள்ளன. ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் நாட்டில் உள்ள பெரும்பான்மையான உழைப்பாளி மக்க ளின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறார்கள். அதனால்தான் கம்யூனிஸ்ட்டுகளை அழிக்க நினைக்கிறார்கள். கம்யூனிசத்தை, செங்கொடியை அழிக்க வேண்டும் என்று  நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்கள். இது தான் உலக வரலாறு. எனவே ஆர்.எஸ்.எஸ்-பாஜக போன்ற  பாசிச சக்திகளை இந்திய உழைப்பாளி மக்கள்  நிச்சயமாக ஒன்றிணைந்து வீழ்த்துவார்கள். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார். பொய்யைப் பரப்புவதில் 

பொய்யைப் பரப்புவதில் பாஜகவுக்கு நிகர் யாருமில்லை

டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக) பேசுகையில், நாட்டை ஒரு கட்சி எப்படிச் சீரழிக்கும் என்பதற்கு உதார ணம்தான் பாஜக. ஒரு பொய்யை பரப்புவதற்கு பாஜக விற்கு நிகரான கட்சி வேறு எதுவும் இல்லை. திரிபுராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினரின் தோட்டத்தை பாஜகவினர் தீ வைத்து எரித்துள்ளனர். இந்த  தீ வைப்பு சம்பவம் அவர் வெற்றி பெற்றதற்காக அல்ல,  அவருக்கு வாக்களித்த மக்களுக்கு எச்சரிக்கை விடுவ தாகும். எங்களைத் தவிர வேறு யாருக்காவது வாக்களித் தால் இந்த நிலை ஏற்படும் என இந்திய நாட்டு மக்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை என்பதை மறந்து விடக்கூடாது. குஜராத் கலவரத்தின் உண்மையை ஆவணப்படமாக வெளிக்கொண்டு வந்த பிபிசி நிறுவனத்தை மிரட்டும் வகையில் அங்கு சோதனை மேற்கொள்கிறார்கள். ஒரு சட்ட மன்ற உறுப்பினருக்கு 50 கோடி ரூபாய் வரை கொடுத்து விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்கள் என்றால் அவ்வளவு பணம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? இந்த நாட்டை அதானிக்கும் அம்பானிக்கும் விற்பேன், நீ என்னைக் கேள்வி கேட்கக் கூடாது. அதே போல் நீங்கள் (ஆர்.எஸ்.எஸ்.) யாரை வேண்டுமானாலும் தாக்குங்கள், நாங்கள் உங்களை தொடமாட்டோம்  என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்–சும் செயல்படுகின்றன. பாஜக மக்கள் விரோத, தொழி லாளர் விரோத கட்சியாகும். பொய்யை மட்டுமே விற்பனை செய்து ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்றுநினைக்கிறது. வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு விடிவுகாலம் கிடையாது. மீண்டும் சூத்திரர் களாக, பஞ்சமர்களாகச் சாதி ரீதியாகத் தெருவில் நடக்க முடியாத நிலை ஏற்படும். மீண்டும் அவர்களுக்கு எடுபிடி வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே நாம் நம்முடைய சுய மரியாதையைப் பாதுகாத்துக்கொள்ள வரும் மக்களவை தேர்தலில் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று இளங்கோவன் கேட்டுக் கொண்டார். 

நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் பாஜக 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் விரும்புகிற கட்சியை வாக்களித்துத் தேர்வு செய்வது தான் நாடாளுமன்ற ஜனநாயகம், ஆனால் ஆர்எஸ்எஸ் விரும்புகிற கட்சிக்கு வாக்களித்து விட்டு அதற்கு எதிரான வாக்குகளைப் பதிவு செய்ய விடாமல் செய்வது வன்முறை இல்லையா? அதைத்தான் திரிபுரா தேர்தலில் பாஜக செய்துள்ளது. முற்போக்கு சிந்தனை யாளர்களை அழித்தொழிக்கும்  பாசிசப் போக்கை மக்கள் விரோத பாஜக கைவிடாவிட்டால், வரலாறு திரும்பும், அவர்கள் கையாளும் முறையை மக்களுக்காக இடதுசாரி கள் மேற்கொள்ள வேண்டிவரும் என எச்சரித்தார்.

எம்பிக்கள் குழு மீது தாக்குதல்

திரிபுராவில் நடத்தப்பட்ட வன்முறையை ஆய்வு செய்ய சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் நாடாளுமன்ற ஆய்வுக்குழு சென்றபோது அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் தொடுத்துள்ளனர். மயிரிழையில் உயிர் தப்பியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அற்ற பாஜகவினருக்கு கம்யூனிஸ்ட்டுகள் உரிய  பாடத்தைப் புகட்டுவார்கள். சர்வாதிகாரி ஹிட்லர், முசோ லினிக்கு ஏற்பட்ட நிலைதான் இவர்களுக்கும் ஏற்படும் என்றார்.

கருத்தியல் ரீதியான எதிரி

தொல். திருமாவளவன் (விசிக) பேசுகையில், பாஜகவுக்குத் தேர்தல் எதிரி காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அவர் களுக்குத் தேர்தல் எதிரி அல்ல. ஆனால் அவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து இந்துக்களை அணி திரட்டும் உத்தியை அவர்கள் கையாள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் தேர்தல்  எதிரி அல்ல. மாறாகச் சித்தாந்த எதிரி. ஆர்.எஸ்.எஸ். பாஜக வின் மூட நம்பிக்கைகளை அறிவியல் ரீதியாக கம்யூ னிஸ்ட்டுகள் எதிர்க்கிறார்கள்.

முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சக்திகளை அச்சுறுத்தக்கூடிய ஆயுதமாகக் கம்யூனிசம் உள்ளது. அதனால்தான் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மீது கொலை  வெறித் தாக்குதல் தொடுக்கிறார்கள். அதேபோல் அம்பேத்கரும், பெரியாரும் கூட எதிரிதான். அதனால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றத் துடிக்கிறார்கள். பன்மைத்துவம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி (மாநில உரிமை) தத்துவம், இதற்கு எதிராக பாஜகவின் செயல்பாடு உள்ளது.

திரிபுரா உதாரணம்

ஒன்றிய அரசு என்பது மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் அவர்கள் மாநில அரசுக்கு  எதிராகவே செயல்படுகிறார்கள். வரும் 2024ஆம் ஆண்டு  நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று நிறைவேற்றலாம் என்று கனவு காண்கிறார்கள். மீண்டும் 2024 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நாடு முழுவதும் திரிபுராவில் நடைபெற்றதை போன்ற வன்முறை வெடிக்கும். தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கருத்துக்கு ஒரு மதிப்பு இருக்கிறது. எனவே அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளையும் கம்யூனிஸ்ட்டுகள் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வன்முறையே அவர்களுக்கு ஆயுதம்

திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பேசுகையில், பாஜக வெற்றி பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும். தேர்தலுக்கு முன்பும் பின்பும்  அவர்கள் வன்முறை ஆயுதத்தை எடுத்துப் பழகிவிட்டனர். பாஜகவுக்கும் ஜனநாயகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை, பாபர் மசூதியை ரத்த ஆயுதம் கொண்டு இடித்த வர்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.  குஜராத்தில் கலவரத்தை ஏற்படுத்த மாவட்ட ஆட்சி யர்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சகல அதிகாரத்தையும் அளித்தவர் அப்போதைய முதல்வர் மோடி.

பிபிசியை நம்ப மறுப்பதேன்?

ஒரே நாடு, ஒரே மக்கள் எனக் கூறும் இந்துத்துவ வாதிகள் ஒரே சாதி எனக் கூறுவார்களா?, 2013இல் தூர்தர்ஷனை விட பிபிசி தொலைக்காட்சி செய்தி நம்பகமானது என்று சொல்லி மகிழ்ந்த மோடி 2023இல் பிபிசி செய்தியை நம்ப மறுப்பதேன் என்று கேள்வி எழுப்பினார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், சிபிஐஎம்-எல் கட்சியின் பொதுச்செய லாளர் பழ.ஆசைதம்பி, மே 17 இயக்கத்தின் ஒருங்கி ணைப்பாளர் திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோரும் கண்டன உரையாற்றினர். முன்னதாக சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன் நன்றி கூறினார். இதில் மாநிலக் குழு உறுப்பினர்கள் எம்.ராமகிருஷ்ணன், ப.சுந்தரராஜன், வெ.ராஜசேகரன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




 

;