இவ்வாண்டு (1986) மேதின விழா, உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களால் நூற் றாண்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு கொண்டாடாத நாடு உலகில் இன்று இல்லை என்று கூறலாம். ஏன் இது? நூறாண்டுகளுக்கு முன் 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி சிகாகோ நகரத்தின் தொழிலாளிகள் மீது அமெரிக்க அரசின் ஏவுதலின் பேரில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களும், மேலும் அங்க ஊனமான வர்களும் - தாக்கப்பட்டவர் மீதே வழக்குத் தொடுக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர்களும் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் ஒரு மகத்தான பாத்தி ரத்தை வகித்தனர். அன்று ஆர்ப்பாட்டம் நடத்திப் போராடிய தொழி லாளர்கள் வைத்த கோரிக்கைகள் எட்டு மணிநேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, மிச்சமுள்ள எட்டு மணி நேரம் விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகள், அறிவுணர்ச்சிக்காக பாடுபடுதல் ஆகியவைதான். இது மறுக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் இரத்த வெள்ளத்தில் சிகாகோ தொழிலாளர் அடக்கப்பட்டனர். இரண்டாவது தொழிலாளர் அகிலம் எல்லா நாடுகளிலும் அதே கோரிக்கைகளை முன்வைத்து மேதினம் கொண்டாட வேண்டுமென அறைகூவல் விட்டது. இது தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேச தன்மையும் முதலாளி வர்க்கத்திற்கு எதிரான தொழிலாளர் கோரிக்கையும் உலக ரீதியில் ஒரே மாதிரியானவை என்பதைக் காட்டியது.
பிரிட்டனின் கொடிய சட்டம்
இந்தப் போராட்டத்திற்கு ஒரு பின்னணி உண்டு. உலகிலேயே முதன் முதலாக முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் நடைபோட்ட பிரிட்டனில் தொழிலாளர்கள் சங்கங்களை வைத்தனர் என்பது இயல்பாக நடந்த நிகழ்ச்சி யாகும். அன்றிருந்த பிரிட்டிஷ் ஆட்சி, சங்கமாக கூட்டுச் சேருவதைத் தடுக்கும் சட்டம் (ஆன்டி காம்பினேசன் ஆக்ட்) என்ற சட்டத்தைப் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சங்கம் சேர்வதே தூக்கு தண்டனைக்குரிய குற்றம் என்று பறைசாற்றினர். வளர்ந்து வரும் தொழிலாளர் இயக்கத்தை சட்டங்க ளின் மூலமாக அழித்துவிட முயன்றனர். முடியவில்லை. பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கம் அன்றைக்கு இதை எதிர்த்துப் போராடி முறியடித்துக் காட்டியது. ரகசியமாக பல சங்கங்கள் தோன்றின. பல போராட்டங்கள், பல வேலை நிறுத்தங்கள் நடந்தன. அவர்களுடைய கோரிக்கை கள் தினசரி 16, 18 மணி நேரம் வேலை என்றிருந்ததை மாற்றி, வேலை நேரத்தை குறைக்க வேண்டும்; கூலி உயர்வு வேண்டும் முதலானவையாகும்.
சார்டிஸ்ட் இயக்கம்
இந்தச் சமயத்தில் வயதுவந்த அனைவருக்கும் குடிஉரிமை கோரிய சார்டிஸ்ட் (Chartist) என்ற இயக்கம் (சாசன இயக்கம்) தோன்றி செயல்பட ஆரம்பித்தது. இந்த இயக்கம் பெரும்பாலும் தொழிலாளர்களையும், தீவிர பூர்ஷ்வாக்களையும் சார்ந்திருந்தது. இதன் பலத்தால் பிரிட்டிஷ் அரசு முதலில் 14 மணி நேர வேலையாகவும், பிறகு 12 மணி நேரடியாகவும் அதற்குப்பிறகு 10மணி நேர வேலை நேரமும் சட்டம் இயற்ற நிர்ப்பந்திக்கப்பட்டது. இந்தப் பின்னணியில்தான் சிகாகோ தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை வேண்டுமென்று கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். துப்பாக்கிச் சூட்டிலும், தூக்கு மேடையிலும் மடிந்தனர். அன்று இந்தக் கோரிக்கைகளுக்கான இயக்கங்கள் இயந்திர முதலாளித்துவம் வளர்ச்சி அடைந்திருந்த ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் மட்டும் நடந்தன. பின்னர் தொழிலாளி வர்க்கப் புரட்சிகளும் நடந்தன. மூன்றில் ஒரு பகுதி உலகம் தொழிலாளர் உலகமாக மாறிவிட்டது. உலகம் பூராவிலும் 8 மணி நேர வேலை நேரத்திற்கான போராட்டங்கள் நடந்தன. வெற்றியும் அடைந்தன. இந்தியாவிலும் வேலை நேரம் 8 மணியாகக் குறைக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தி லேயே சட்டம் இயற்றப்பட்டது.
‘அன்றாடப் போராட்டம்’
உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஸ்தாபகர்களான மார்க்சும், ஏங்கெல்சும் முதல் முதல் தோற்றுவித்த கம்யூ னிஸ்டுகளின் சங்கம் (league of Communists) என்ற அமைப்புக்காக 1848ல் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை யில் முதலில் சோஷலிசமும், அதற்குப் பிறகு கம்யூனிச மும் உலகம் பூராவும் வெற்றி பெறும் என்ற விஞ்ஞா னப்பூர்வமான ஆய்வை வெளியிட்டனர். ஆயினும் இந்த அறிக்கையின் இறுதியில், வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும், கூலி உயர்வு வேண்டும் என்ற பல அன்றாட கோரிக்கைகளை முன்வைத்தனர். தொழிலாளர்கள் பூரண ஜனநாயகக் கோரிக்கைக்காகப் பாடுபட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர். இந்த அன்றாடப் போராட்டங்களின் மூலமாக தொழி லாளர்கள் விழிப்படைந்து வர்க்கப் பேதமற்று சமூகப் புரட்சிக்காக பாடுபடுவர்கள் என்று தீர்க்க தரிசனத்தோடு இந்த அறைகூவலை விடுத்தனர் அதனால்தான் ‘‘உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமில்லை. அடிமைத் தளைகளைத் தவிர’’ என்ற கோஷத்தை முன்வைத்தனர். மார்க்ஸ் காலத்தில் உருவான முதல் அகிலமும், மார்க்ஸ் மறைந்த பிறகு ஏங்கெல்ஸ் காலத்தில் தோற்று விக்கப்பட்ட இரண்டாவது அகிலமும் இதே பணியை முன்னுக்கு எடுத்துச் சென்றன.
உலக யுத்தம்
2வது கம்யூனிஸ்ட் அகிலம் தோன்றிய காலத்தில், உலக முதலாளித்துவ நாடுகள் ஏகாதிபத்தியமாக மாறி பிற நாடுகளை தங்களது அடிமைகளாக மாற்றின. ஏகாதிபத்தியமாக மாறி உலகம் பூராவும் உள்ள நாடு களை தங்கள் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தன. இதில் இந்தியாவும் ஒன்று. காலனி ஆதிக்கத்திற்கு மேலும் உட்படுவதற்கு நாடுகள் மிச்சமில்லாத நிலையில் இந்த ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டிருந்த ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கிடையே பயங்கரப் போட்டியின் காரணமாக அவைகளுக்குள் யுத்தம் நடந்தது. அதில் அடிமைப்பட்டி ருந்த காலனி நாடுகளும் பலவந்தமாக இழுக்கப்பட்டன. இதன் காரணமாக உலக யுத்தமாக மாறியது. அந்த யுத்தத்தில் தொழிலாளர்களுக்கும் எந்தவிதப் பலனும் கிடையாது; மாறாக ஒரு நாட்டு தொழிலாளர்கள் மற்றொரு நாட்டு தொழிலாளர்களை எதிர்த்து பரஸ்பரம் படுகொலை செய்து கொள்வார்கள்.
அதனால் அப்ப டிப்பட்ட உலக யுத்தத்தில் அந்தந்த நாட்டு தொழிலாளிகள் தங்கள் நாட்டு அரசுகளை எதிர்த்து அவைகளைப் பதவி யிலிருந்து வீழ்த்தும் உள்நாட்டுக் கலகங்களாக மாற்ற வேண்டும் என்று 1905ஆம் அண்டு பாஸ்லே (Basle)யில் நடந்த இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏகாதிபத்திய அரசுகளின் போட்டியாக 1914ஆம் ஆண்டு யுத்தம் மூண்டு உலகயுத்தமாக மாறியது. இதுவே முதல் உலக யுத்தம். இந்த யுத்தத்தில் இரண்டாவது அகிலத்தில் இணைந்திருந்த சமூக ஜனநாயகக் கட்சிகள் எல்லாம் அந்த தீர்மானத்தை காற்றில்பறக்கவிட்டன. தங்கள் தங்கள் நாட்டிலிருந்த முதலாளி வர்க்க அரசுகளு டன் சேர்ந்து கொண்டன. இதற்கு விதிவிலக்காக அன்று ஜார் மன்னன் ஆட்சியிலிருந்த ரஷ்யாவில் லெனின் தலை மையில் செயல்பட்ட ரஷ்யன் சோஷியல் லேபர் டெமாக்ரடிக் கட்சி (ரஷ்ய சமூக தொழிலாளர் ஜனநாயகக் கட்சி) ஆகும். 1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், லெனின் தலைமை யில் அந்தக் கட்சி முதலில் ஜனநாயகத்திற்கான புரட்சியை யும் பிறகு அக்டோபர் மாதத்தில் சோஷலிஸப் புரட்சியையும் வெற்றிகரமாக நடத்தியது. தொழிலாளி வர்க்கத்தின் தலை மையில் விவசாயிகள், சிப்பாய்கள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரின் துணையோடு முதல் சோசலிஸ்ட் புரட்சியை நடத்தியது.
புரட்சியைப் பாதுகாத்த பாட்டாளி வர்க்கம்
இந்தப் புரட்சியை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் என்ற நோக்கத்தோடு 14 ஏகாதிபத்திய வல்லரசு கள் சோசலிஸ்ட் ரஷ்யாவின் மீது படையெடுத்தன. அன்று சோவியத் தலைவர் லெனின் உலகத் தொழிலாளி மக்க ளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். இந்தத் தலையீட்டு யுத்தத்தை அந்தந்த நாட்டுத் தொழிலாளிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள். இதை ஏற்றுக் கொண்டு பிரிட்டிஷ் தொழிலாளிகள் சோவியத் யூனியன் மீது நடந்துவந்த யுத்தத்தை நிறுத்தா விட்டால் பிரிட்டனில் முழு வேலை நிறுத்தம் செய்வோம் என்று எச்சரித்தனர். பிரான்ஸ் நாட்டில் மார்செயில் துறைமுகத்திலிருந்து சோவியத் யூனியனுக்கு ஏற்றிச் செல்லும் கப்பல்களை மாலுமிகள் ஓட்டமாட்டார்கள் என்று பிரெஞ்சு கப்பல் மாலுமி மார்சே என்பவர் ஒரு கலகத்திற்கு தலைமை தாங்கி னார். பிற்காலத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் இயக்கத் தலை வர்களில் ஒருவரானார். உலகமெங்கும் நடந்த பாட்டாளிவர்க்க ஆதரவு இயக்கத்தின் காரணமாகவே சோஷலிஸ்ட் புரட்சி, ஏகாதி பத்திய வல்லரசுகளின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாக்கப் பட்டது. உண்மையான பாட்டாளி வர்க்க சகோதரத்து வத்தை இந்த நிகழ்ச்சிகள் நிரூபித்தன. இத்தகைய பாட்டாளி வர்க்க சகோதரத்துவத்தை 2வது அகிலம் நிராகரித்ததாலேயே அது மறைந்துபோய் லெனின் தலைமையில் மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் உருவாக்கப்பட்டது. அதன் வழிகாட்டுதலில் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி கள் தோன்றின. இந்தப் பார்வையுடன்தான் இன்று உலகத்தில் எல்லா நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதனைச்சார்ந்த இயக்கங்களும் வளர்ந்து வருவதைக் காண்கிறோம்.
முற்றிலும் மாறுபட்ட புரட்சி
ரஷ்ய தொழிலாளி வர்க்கத்தின் சோசலிசப் புரட்சி, இதற்கு முன் வரலாற்றில் ஏற்பட்ட சமூகப் புரட்சிகளிலிருந்து முற்றிலும் மாறானது. இதர புரட்சிகளில் எல்லாம், ஒரு சுரண்டும் ஆளும் வர்க்கத்திடமிருந்து மற்றொரு சுரண்டும் ஆளும் வர்க்கத்தி டம் அரசியல் அதிகாரம் மாறியது. உதாரணமாக அடிமை சமுதாயம் அழிந்து நிலப் பிரபுத்துவ சுரண்டல் சமுதாய மாக உருவாகியது. அதிலிருந்து முதலாளித்துவ சுரண்டல் சமுதாயமாக மாறியது. இவை மனிதனை மனிதன் சுரண்டு வதை ஒழிக்கவில்லை. தொழிலாளி வர்க்கம் ஒன்று தான் சுரண்டல் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடிந்தது. கார ணம் அந்த வர்க்கம் ஒன்றுதான் தன் உழைப்புச் சக்தி யைத் தவிர வேறு எந்த நலன்களையும் கொண்டதல்ல என்பதை எடுத்துக்காட்டியது. அதனால், காலனி ஆதிக்கத்திலிருந்து அடிமைப்பட்ட நாடுகள் விடுதலை அடைவதற்காகப் போராடும் மக்க ளுக்கு சோவியத் யூனியன் அரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் நிலைமைக்குத் தக்கவாறு ஆயுத உதவி உட்பட சகலவித மான உதவியும் நல்கவேண்டுமென்று லெனின் போதித்தார். மேலும், அந்தந்த நாட்டில் எத்தகைய அரசியல் அமைப்பும் சமூக அமைப்பும் இருக்கவேண்டும் என்பதை நிர்ணயிக்கும் உரிமை, அந்தந்த நாட்டு மக்களுக்கே உரித்தானது; இந்த உரிமையில் வேறு எந்த நாடும் தலையிடக்கூடாது என்றும் இதை அடிப்படையாகக் கொண்டு சமாதான சகவாழ்வு என்ற கொள்கையை லெனின் வகுத்தார். இந்தக் கொள்கையை சோவியத் யூனியன் அன்று முதல் வரை இம்மியளவும் மாறாமல் கடைப்பிடித்து வருகிறது.
நேரு, பெரியார் விஜயம்
1926-ம் ஆண்டு பெல்ஜியம் நாட்டுத் தலைநகரான பிரசல்ஸில் நடந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு ஸ்தாபனத்தின் (League AgainsteImperialism) மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைவர்களான பண்டித மோதிலால் நேருவும், அவரது மகன் ஜவஹர்லால் நேருவும் சென்றிருந்தனர். அந்த மாநாட்டில் சோவியத் யூனியனின் பிரதிநிதிகள் குழு வகித்த பாத்திரம், எடுத்த கொள்கை நிலை அவர்களை மிகவும் கவர்ந்தன. 1927ம் ஆண்டு சோவியத் யூனியன் உருவானதின் 10ஆம் ஆண்டு விழா நடக்கும்போது அதன் தலைவர்கள், அவர்களுக்கு (மோதிலால், ஜவஹர்லால் இருவருக்கும்) விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த விழாவில் கலந்து கொண்டனர். சோவியத் யூனியனிலி ருந்து நாடு திரும்பிய பிறகு பண்டித ஜவஹர்லால் நேரு, 1937ம் ஆண்டு மாநில சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தல்களில் பொதுவாக சோஷலிஸ்ட் கருத்துக்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அதே போன்று சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்த கவி ரவீந்திரநாத் தாகூரும் சோவியத் யூனியனை ஆதரித்து அங்கு ஏற்பட்டி ருந்த சமூக மாற்றங்களை ஆதரித்து சில நூல்களையும் பல கட்டுரைகளையும் எழுதினார். 1930ம்ஆண்டு சோவியத் யூனியனுக்கு விஜயம் செய்த பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் நாடு திரும்பிய பின் பொதுவான சோசலிஸ்ட் கருத்துக்களை தமிழ் நாட்டில் பரப்பினார். பிறகு 1934ம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டவுடன் அந்தப் பிரச்சாரத்தை நிறுத்திக்கொண்டார். பொதுவாக ரஷ்யத் தொழிலாளி வர்க்கப் புரட்சியின் சாதனைகள், அடிமைப்பட்டிருந்த நாடுகளின் மக்களையும், தலைவர்களையும் கவர்ந்தன என்பதற்கு இவை ஒருசில உதாரணங்களாகும். சோவியத் யூனியனில் திட்டமிட்ட சோஷலிஸ்ட் பொருளாதாரம் வெற்றிபெற்றதும், முதலாளித்துவ நாடு களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் உலகமக்களி டையே இரு சமூக அமைப்புகளின் வித்தியாசத்தைப் பார்க்க உதவின. இந்திய மக்களிடையே சோவியத் யூனி யன்பால் லட்சியத் தீபம் உணர்வை ஏற்படுத்தியது. தங்க ளுக்கு சுதந்திரம் கிடைத்தால் மட்டும் போதாது; சோவியத் யூனியனைப் போன்று ஒரு சோசலிஸ்ட் சமுதாயத்தையும் நிறுவ வேண்டும் என்ற எண்ணமும் வளரலாயிற்று
பாசிசத்தை வீழ்த்திய செஞ்சேனை
இரண்டாவது உலக யுத்தம் (1939-45) ஏற்பட்ட பிறகு ஹிட்லரின் நாஜிப் படைகள் சோவியத் யூனியனின் செஞ்சேனையால் முறியடிக்கப்பட்டதில் சோவியத் யூனி யனுக்கு இருந்த பிரதான பாத்திரம் உலக மக்களுக்கு வியப்பையளித்தது. அந்த யுத்தத்தின் இறுதியில் உலகில் ஒரே ஒரு சோசலிஸ்ட் நாடு இருந்ததற்குப் பதிலாக, பல்கேரியா, ருமேனியா, செக்கோஸ்லோவாகியா. ஹங்கேரி, போலந்து, யூகோஸ்லாவியா ஆகிய பல சோச லிஸ்ட் நாடுகள் தோன்றின. ஆசியாக் கண்டத்தில் வட கொரியாவும், அதற்குப்பிறகு சைனாவும், வியட்னாமும் சோசலிஸ்ட் நாடுகளாக மாறியதும் சமீபகால வரலாறு ஆகும். அதேபோன்று அமெரிக்காவுக்கு 90 மைல் தூரத்தி லுள்ள கியூபாவில் ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையில் சோசலிஸ்ட் புரட்சி வெற்றிகரமாக நடந்தது. இந்த நிகழ்ச்சிப் போக்கின் விளைவாகத்தான் இன்று உலகத்தில் எல்லா காலனி நாடுகளும்-இந்தியா உள்ளிட்டு-அரசியல் சுதந்திரம் அடைந்துவிட்டன. 2ம் உலக யுத்தத்தின் இறுதியில் சோவியத் யூனியன் ஹிட்லரை முறியடித்த பிறகு ஹிட்லரின் கூட்டாளி நாடான ஜப்பான் மீது யுத்தத்தை தொடுத்தது. அதன் பிறகு செஞ்சேனை ஜப்பானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த வட கொரியாவை விடுவித்தது. அதுவும் சோசலிஸ்ட் நாடாக மாறியது. அதே வேகத்தில் முன்னேறி ஜப்பானையும் செஞ்சேனை முறியடித்தால், தொழில் வளர்ச்சியடைந்தி ருந்த அந்த நாடு சோசலிஸ்ட் நாடாக மாறிவிடும் என்று பயந்த அமெரிக்கா ஜப்பானை தன்னிடத்தில் சரணடைய வைப்பதற்காக, ஹிரேஷிமா, நாகசாகி ஆகிய நகரங்க ளின் அணுகுண்டுகளை வீசியது. யுத்தத்தில் சம்பந்தப்படாத அந்த நகரங்களின் மக்கள் பல்லாயிரக்கணக்கில் அணுகுண்டுகளுக்கு பலியாயினர். இது உலகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. அந்த யுத்த முடிவுக்குப் பின், இனியொரு யுத்தம் என்பது கூடாது, நிரந்தர சமாதானம் நிலவவேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே முயற்சி செய்து வருவது சோவியத் யூனியன்.
ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்
அன்றைய சோவியத் தலைவர் ஸ்டாலின், அணு குண்டு ஆயுதங்களை தயார் செய்யக்கூடாது; கையிலி ருக்கும் ஆயுதங்களை கடலில் மூழ்கடித்து விடவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை அவர் ஏற்கவில்லை. யுத்த காலத்தில் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் அமெரிக்காவில் ஃபூல்டன் (Foolton) நகரில் கூட்டத்தில் பேசினார். சோவி யத் யூனியன் என்ற சோஷலிஸ்ட் தேசம் இருக்கும் வரை தங்களுடைய சமுதாய அமைப்பிற்கு-அதாவது ‘ஏகாதி பத்தியத்திற்கு’ ஆபத்து; எனவே சோவியத் யூனியன் மீது அணுகுண்டுகளை வீசி அதை அழித்து விடவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில், சோவியத் யூனியன் தன் நாட்டை யும், சோசலிஸ்ட் நாடுகளையும் சுதந்திர நாடுகளையும் பாதுகாப்பதற்காக அணுகுண்டைத் தயாரிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டது. அமெரிக்க விஞ்ஞானிகள் பல்லாண்டுகள்
ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த அணு குண்டை சோவியத் விஞ்ஞானிகள் 3 ஆண்டுகளுக்குள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துவிட்டார்கள். சோவியத் யூனியனில் அணுகுண்டு வெடித்தும் (சோதனை) காட்டினர். அது வெடித்த உடனே, ஸ்டாலின் எந்த நாட்டின் மீதும் சோவியத் அணுகுண்டை முதன் முதலாக வீசாது என்று பிர கடனம் செய்தார், இவ்வாறு அமெரிக்காவும் பிரகடனம் செய்ய வேண்டுமென்று கோரினார். அந்த வேண்டு கோளை அமெரிக்க ஜனாதிபதி நிராகரித்தது மட்டுமல்ல; ஜலவாயு குண்டு, கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு குண்டு, ஏவுகணைகள் போன்ற பல நவீன அணு ஆயு தங்களை அமெரிக்க அரசு தயாரித்துக்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சோவியத் யூனியனும் அமெரிக்காவுக்கு ஈடாக அணு ஆயுதங்களைத் தயாரிக்கும்படி நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பதுடன், தன் நாட்டையும் சோசலிஸ்ட் முகாமை யும் உலக மக்களையும் அணுகுண்டு ஆயுத யுத்தத்திலி ருந்து பாதுகாக்க வேறு வழியில்லை. இந்த நிலையில்தான் சோவியத் யூனியன் தலைமையில் உலக சமாதான இயக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து மேலோங்கி வருகிறது. மனிதநேயமும் உலக சமாதானத்தில் உண்மையான நாட்டமும் கொண்டவை தொழிலாளி வர்க்கம் ஆட்சி புரியும் அரசுகள் என்பது நிரூபணமாயிற்று. இரண்டு உலக யுத்தங்களால் மிகப்பெரிய சேதங்களை அனுபவித்த ஐரோப்பிய நாடுகளின் பலதரப்பட்ட மக்கள் இந்த சமாதான இயக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.
உலக சமாதான இயக்கம்
இந்திய மண்ணில், இரண்டு உலக யுத்தங்களில் எவ்வித போரும் நடக்காத காரணத்தால் இந்திய மக்களுக்கு யுத்தத்தின், அதிலும் ஆயுத யுத்தத்தின் அபாயம் குறித்து சரிவர தெரியவில்லை. அவர்களுக்கு இந்த அபாயத்தை உணர்த்தி உலக சமாதான இயக்கத்தில் பிறநாட்டு மக்களு டன் கைகோர்த்து நிற்குமாறு உணர்வூட்டுவது இந்நாட்டி லுள்ள சகல சமாதான இயக்கங்களின் கடமையாகும். குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும். அதே சமயத்தில் சோவியத் யூனியன் உலக சமாதானத்தைப் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகளும், அது முன்வைக் கும் ஸ்தூலமான யோசனைகளும் உலகமக்களை மேலும் மேலும் ஆகர்ஷித்து வருகின்றன. சோவியத் யூனியனை, அணு ஆயுதத்தைக் கொண்டு முறியடித்து விடமுடியும் என்பது வெறும் பகற்கனவு என்று அமெரிக்க விஞ்ஞானிகளும் மற்றும் பலரும் ஜனாதிபதி ரீகனின் அணு ஆயுத யுத்தத் தயாரிப்புகளை மேலும் மேலும் பலமாக எதிர்க்கின்றனர். இந்த மகத்தான சமாதான இயக்கத்தில் இந்தியா விலுள்ள எழுபது கோடி மக்களும் சேர்ந்து விட்டால் சமா தான இயக்கத்திற்கு ஏற்படக்கூடிய பலம் அளவிட முடி யாதது. 1848ம்ஆண்டு மார்க்கம் ஏங்கெல்சும் கூட்டாக வகுத்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேசக் கடமைகளைக் குறிப்பிட்டார்கள். அந்தக் கடமைகள் இன்று நிறைவேறி வருவதை நாம் காண்கிறோம்.
மனிதாபிமானமே மார்க்சியம்
மார்க்சும் ஏங்கெல்சும், அதற்குப் பிறகு லெனினும் கூறியபடி தொழிலாளி வர்க்க இயக்கம் ஒன்றுதான் மனி தாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டது. விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உலக மக்களின் வாழ்வு மேம்பாடடைவதற்காகப் பயன்பட வேண்டுமே அல்லாது மனித குலத்தை அழிக்கப் படுத்தக் கூடாது. இத்தகைய பரந்த சர்வதேச கண்ணோட்டத்தைக் கொண்டது தொழிலாளி வர்க்க இயக்கம்.
மேதின சபதம்!
இவைகளை எல்லாம் மே தினத்தின் இந்த நூற்றாண்டு விழாவின் போது தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்திய நாட்டு மக்களுக்கும் நாம் உணர்த்துவோமாக! ‘‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்’’ என்ற கோஷம் மேலும் வளர்ந்து கெட்டிப்படட்டும்! முதலாளித்துவம் தனது மரண காலத்தை எய்து விட்டது! அதற்கு எதிர்காலம் கிடையாது. ஆனால், அது தானாக அழிந்துவிடாது. தனது ஆதிக்கத்தை நீடிப்ப தற்காக நவீன காலனி ஆதிக்கம் பல சாகசங்களை செய்யும் இந்த ஏகாதிபத்திய சூழ்ச்சிக்கு தலைமை தாங்குவது அமெரிக்கா. இந்தியாவை அது பல வகைகளில் அச்சு றுத்துகிறது. அதை அடையாளங் கண்டுகொண்டு அதை யும் அது தலைமை தாங்கும் ஏனைய ஏகாதிபத்தியங்களை யும் எதிர்த்து வீழ்த்திட இந்த மேதினத்தன்று சபத மேற்போமாக! இந்தியாவும் சோசலிஸ்ட் நாடாக மாறிவிட்டால் உலக ஏகாதிபத்தியத்தின் அழிவு மிகவும் நெருங்கிவிடும் அந்த நன்னாளை நோக்கி இந்தியத் தொழிலாளி வர்க்கம் ஏறுநடை போடட்டும்.
1986- மே தின நூற்றாண்டு விழா - தீக்கதிர் சிறப்பு மலரில் எழுதிய கட்டுரை