articles

img

மாமனிதர் எம்என்எஸ்

தீக்கதிர் ஆசிரியர் குழுவின் பொறுப்பாளராக தோழர் எம்.என்.எஸ் வெங்கட்டராமன் அவர்கள் இருந்த போதுதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானதன் பொன்விழா 2014ல் நடைபெற்றது. இதையொட்டி  தீக்கதிர் சார்பில் சிபிஐ(எம்) பொன்விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இன்றைக்கும் கட்சியின் வரலாற்றை முழுமையாக தொகுத்து ஒரு பொக்கிஷமாக அந்த மலர் திகழ்கிறது என்றார் அதற்கு காரணம் தோழர் எம்.என்.எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த மலரைப் போலவே மிக நேர்த்தியான திட்டமிடல், தீக்கதிர் ஆசிரியர் குழுவுக்கான வழிகாட்டுதல் பணியிலும் பின்னர் அவர் கடைசியாக பொறுப்பு வகித்த தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் பணியிலும் தொடர்ந்தது. இது தீக்கதிருக்கு புத்துயிரூட்டியது. கொரோனா காலத்தைத் தொடர்ந்த மிகக் கடுமையான நெருக்கடி மிக்க காலத்தில் தீக்கதிர் நிர்வாகத்திற்கு பொறுப்பேற்ற தோழர் எம்.என்.எஸ்., அடுத்த பத்தாண்டு கால வளர்ச்சிக்கான துல்லியமான திட்டமிடலை உருவாக்கினார். ஆனால் அதைச் செயல்படுத்துவதற்கு முன்பே காலம் அவரை பறித்துக் கொண்டது. 

தீக்கதிரை நேசித்த தலைவர்
2022 ஜுன் 29 அன்று துவங்கிய தீக்கதிர் வைரவிழா கொண்டாட்டத்தை, ஓராண்டு முழுவதும் விரிவாக நடத்த வேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தார். அதன் முதல் கட்டமாக மதுரையில் உள்ள தீக்கதிர் தலைமை அலுவலகக் கட்டிடத்தை மராமத்து செய்து புதுப்பிக்கும் பணியைச் செய்து தீர வேண்டும் என்ற இலக்கை முன்னிறுத்தினார். லட்சக்கணக்கில் செலவு செய்யாமல் இந்த பணி சாத்தியமல்ல. இதற்காக கட்சி அணிகள், கட்சி ஆதரவாளர்கள், நண்பர்கள் என பலரிடமும் நிதி திரட்டும் திட்டத்தை முன் வைத்து, தீக்கதிர் பொறுப்பாளர்களை களமிறக்கினார்.  நிதி உதவி, பெயிண்ட், சிமெண்ட், செங்கல் உள்பட ரூ.20லட்சம் அளவிற்கு நிதி திரட்டி, மூன்று மாத காலத்திற்கும் மேலாக மராமத்து பணி நடைபெற்று, மதுரை தீக்கதிர் அலுவலகம் மிகச்  சிறப்பான முறையில் புதுப்பிக்கப்பட்டது. அந்தப் பணியின் ஒவ்வொரு கட்டத்திலும் நேரில் இருந்து நுட்பமாக கவனித்து, ஆலோசனைகள் வழங்கினார். பழைய கட்டிடம்; மராமத்து  என்று இறங்கினால் செலவு இழுத்துக் கொண்டே போகும்; எது தேவையோ அதை  மட்டும் செய்வது; அடுத்து எத்தனை ஆண்டு காலத்திற்கு இந்த கட்டிடத்தின் வயது என்பதை அறிந்து அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும், இந்த கட்டிடம் மற்றும் இடத்தின் எதிர்காலப் பயன்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது உள்பட ஆராய்ந்தார்.

பணி வெற்றிகரமாக முடிந்தது. 2022 ஜுன் 29 அன்று புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை திறக்க நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே அவரது வாழ்க்கைக்கு இறுதி நாள் குறிக்கப்பட்டிருந்தது போலும். தான் மிகவும்  நேசித்த தீக்கதிர் அலுவலகத்தின் வைரவிழாவை காண முடியாமலேயே அவரது உயிர், தீக்கதிர் அலுவலகத்திற்கு அருகிலேயே மே 1 அன்று இரவு பிரிந்தது.  அவருடன் பழகிய எந்தவொரு தோழரும், அவருடனான சந்திப்புகளில் ஒவ்வொரு முறையும் புதிதாக கற்றுக் கொள்ள எதையேனும் விட்டுச் சென்றவர் தோழர் எம்.என்.எஸ். விருதுநகர் மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் வலுவான அமைப்பாக வளர்ந்திருந்தது என்றால் அதற்கு நீண்டகாலமாக பொறுப்பாக இருந்து வழிகாட்டிய பெருமை எம்.என்.எஸ்.சுக்கு உண்டு.  மாணவர்களோடு மாணவராக அவர் கரைந்துவிடுவார். கட்சியின் விருதுநகர் மாவட்டக்குழு அலுவலகமான எம்.ஆர்.வி. நினைவகம் எப்போதுமே மாணவத் தோழர்களால் நிறைந்திருக்கும். ஒரு நாள் மாணவர்கள் வரவில்லை என்றாலும் மிகவும் வருத்தப்படுவார். ஏன் வரவில்லை எனக் கவலைப்படுவார். கட்சி அலுவலகம், மாணவத் தோழர்களின் வருகையால்தான் கலகலவென்று இருக்கிறது; அவர்கள் பள்ளி, கல்லூரி நேரம் முடிந்ததும் இங்கு வந்து செல்ல வேண்டும் என மிகவும் விருப்பத்துடன் குறிப்பிடுவார்.  இளைய தோழர்களைக் கண்டறிந்து, அவர்களது தனித் திறமைகளை உணர்ந்து, பொருத்தமான நபரை பொருத்தமான பொறுப்புகளில் அமர்த்துவது (appropriate person in appropriate position)என்ற கட்சியின் வழிகாட்டுதலை, அநேகமாக விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து கமிட்டிகளிலும் துல்லியமாக செயல்படுத்தியது மட்டுமல்ல; மாநில செயற்குழு உறுப்பினராக அவர் பொறுப்பு வகித்த பல்வேறு அரங்கங்களிலும் அதைச் செயல்படுத்தினார்.

துல்லியமான தயாரிப்பு

மார்க்சிய - லெனினிய தத்துவார்த்த ஆசான் அவர். கட்சி வகுப்புகளுக்கு செல்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட தலைப்பில் உரையாற்றுவதற்காக விரிவான தயாரிப்புகளை செய்வார். அது சார்ந்த புத்தகம் அல்லது குறிப்பு எவரிடம் இருக்கிறது என்பதை பலரிடமும் விசாரித்து, அந்தக் குறிப்புகளை எப்படியேனும் பெறுவதில் தீவிரமாக இருப்பார். அவர் அப்படி தயாரித்த குறிப்புகளைத் தொகுத்தால் அதுவே பெரும் புத்தகமாக மாறும்.  கூட்டங்களுக்கு செல்வதற்கு முன்பு, ஒவ்வொரு கூட்டத்திற்கும் மிக விரிவான தயாரிப்பு அவரிடம் இருக்கும். அந்தப் பொருள், கூட்டத்தில்  முக்கியத்துவம் பெறுகிறதா இல்லையா என்பதைப் பற்றி அவர் கவலைப்பட்ட தில்லை. கட்சிக் கமிட்டியில் வைக்கும் ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வரியும் அந்தக் கமிட்டியின் சொத்து என்பதே அவரது பார்வையாக இருந்தது. அதுவே அவரை இடைவிடாமல் மெனக்கெட வைத்தது. கமிட்டியில் முன் வைக்கும் விசயமோ, கட்சிக் கூட்டத்தில் பேசும் விசயமோ, பிரச்சாரத்தில் முன்வைக்கும் கருத்தோ, பத்திரிகையில் எழுதும் எழுத்தோ - எதுவாக இருந்தாலும் ஆதாரப்பூர்வமாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாததாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். அவர் ஓர் அரிய மனிதர்.  மாமனிதர்!

- எஸ்.பி.ராஜேந்திரன்

இன்று தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் முதலாம் ஆண்டு நினைவு நாள்