articles

img

பாசிச அரசுகள்.... (நாஜி அரசு தொடர்பான சிறப்பு கட்டுரை)

இத்தாலியில் முசோலினியின் பாசிச அரசு 21 ஆண்டுகளும் (1922 – 1943), ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிச அரசு 12 ஆண்டுகளும் (1933 - 1945) கோலோச்சின. இரண்டு அரசுகளுமே ‘சோசலிஸ்ட்’ என்பதை தங்கள் கட்சிகளின் பெயர்களிலும்  மேடைப் பிரசங்கங்களிலும் பயன்படுத்திக்கொண்டாலும், அந்த முற்போக்குக் கொள்கைக்கும் இவர்களின் கொடுங்கோல் அரசுகளுக்கும் கடுகளவும் தொடர்பிருக்கவில்லை.

முசோலினி பிரதமராகப் பதவியேற்றதும், தான் எடுக்கப்போகும் முடிவுகளுக்கு எந்தவிதமானக் குறுக்கீடுகளும் இல்லாமலிருப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டார். தன்னை ‘டூஷே’ (தலைவர்) என்றே அனைவரும் அழைக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். அதேபோல, ஹிட்லரும் ஜெர்மனியின் சான்சலர் ஆனவுடன், அதிபர் பொறுப்பையும், ராணுவத் தளபதி பொறுப்பையும் தனதாக்கிக்கொண்டு, கட்சி, ஆட்சி, ராணுவம் மூன்றையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்தார். ஹிட்லர் தன்னை ‘ஃபியூரர்’ ( வழிகாட்டும் தலைவர்) என்றறிவித்துக்கொண்டார்.

பிம்பம் கட்டமைக்கப்படுதல்
இரண்டு அரசுகளுமே தத்தம் தலைவர்களைச் சுற்றி ஒரு மிகப்பெரிய ஒளிவட்டத்தை உருவாக்கி, தலைவர் வழிபாட்டை ஊக்குவித்தன. ‘முசோலினி மிகவும் சக்திவாய்ந்தவர், அதீத திறமைசாலி ’ என்றெல்லாம் ஓர் அசாதாரண பிம்பம் கட்டமைக்கப்பட்டாலும், உண்மையில் அவர்கொண்டுவந்த பெரும்பாலானத் திட்டங்கள் படுதோல்வியடைந்தன. முசோலினியின் அரசு லஞ்ச லாவண்யத்தில் ஊறித்திளைத்தது.ஹிட்லர் அரசின் நோக்கம் ஜெர்மனியை உலகின் ஒரே வல்லரசாக்குவது என்பதால், அதனைச் செய்துமுடிக்க பக்கத்து நாடுகளை ஒவ்வொன்றாக ஆக்கிரமித்தார். உடன் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்கள், கம்யூனிஸ்டுகள், அரசியல் எதிரிகள் போன்றோரை அழித்தொழித்துவிட்டு, அந்தக் கொலைகளையும், போர்களையும் நடத்திமுடித்த பிறகு, ஜெர்மன் நாட்டவருக்கான வேலைகளைத் துவங்கஉத்தேசித்திருந்தார். ஆனால் கொலைபாதகமே வாழ்வியல் நெறியாக மாறிவிட்டது.இரண்டு அரசுகளுமே மிகவும் சாமர்த்தியமான பிரச்சார உத்திகளைக் கையாண்டன. தொடர்ந்து மக்களைக்கட்டுப்படுத்தி ஒருங்கிணைப்பதிலும், தங்கள் வழியிலேயே அவர்களை ஓட்டிச்செல்வதிலும் மிகவும் கவனமாயிருந்தனர்.

ஹிட்லர் முசோலினியை அண்ணாந்து பார்த்தாலும், முசோலினி முதலில் ஹிட்லரை வேடிக்கையாகவேப் பார்த்தார். ஜெர்மானிய இனம்தான் உலகின் மூத்தகுடி என்று நாசிக்கட்சி பரப்புரை செய்ததை பெரும் நகைப்புக்குரிய வாதமாகவேப் பார்த்தார் முசோலினி. ரோமப் பேரரசு கி.மு.753-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஏறத்தாழ 1,500ஆண்டுகளுக்குப்பின்னர், கி.பி.800-ஆம் ஆண்டு வரை ஜெர்மானிய நகரங்களாகத் திகழ்ந்த டிரியர், கொலோன்  போன்றவை ரோமர்களால் உருவாக்கப்பட்ட நகரங்கள்.

முசோலினிக்குப் பிடிக்காதஹிட்லரின் நடப்பு
பிற்காலத்தில் ஜெர்மானிய காட்டுமிராண்டியர்கள் ரோமப்பேரரசை தாக்கியழித்தபோது, அங்கே காணப்பட்ட சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள், நீர்த்தேக்கங்கள், பொதுக் குளியலறைகள், ரோமானியத் தொழில்நுட்பம், காங்கிரீட்,கண்ணாடி, பிளைவுட் போன்றவை தயாரிக்கும் அறிவு போன்றவற்றைக் கண்டு திகைத்து நின்றனர். யதார்த்தம் இப்படியிருக்க, ஜெர்மானிய இனம்தான் உலகின் மூத்தகுடிஎனும் ஹிட்லரின் வாதத்தை முசோலினியால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.ஹிட்லரின் அதீத யூதவெறுப்பும் முசோலினிக்குப் பிடிக்கவில்லை. சக்திவாய்ந்த இத்தாலிய யூதர்கள் சிலர்அவரை ஆதரித்தார்கள்; அதனை அவரும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனாலும் நாசிகளின் தொடர்நச்சரிப்பால், முசோலினியின் பாசிஸ்ட் ஊடகங்கள் யூதவெறுப்புக் கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டன. ஆனாலும் ஹிட்லரின் ஜெர்மனியில் தலைவிரித்தாடிய யூதவெறுப்பு முசோலினியின் இத்தாலியில் எழவில்லை.

ஜெர்மானிய நாசிசம் இத்தாலிய பாசிசத்தைவிட பன்மடங்கு கொலைபாதகம் மிக்கதாக இருந்தது. நாசிகள் ஒரு கோடிக்கும் அதிகமான யூதர்களை, பழங்குடிகளை, நாடோடிகளை, அரசியல் செயல்பாட்டாளர்களை, பொதுமக்களை, வெளிநாட்டு இராணுவத்தினரை, சிறைக்கைதிகளைக் கொன்று குவித்தனர்.நாசிசத்தின் முன்னோடி சித்தாந்தமாக பாசிசம் தோன்றியதாலும், நாசிசக் கொடுமைகளின் அடிப்படையாக பாசிசமனோபாவம், அணுகுமுறை இருந்ததாலும், இரண்டு கொள்கைகளையும் சேர்த்து பாசிசம் என்றே நாம் அழைக்கிறோம்.

முசோலினி - ஹிட்லர் காலத்திலேயே ஸ்பெயின் நாட்டில் ஃபிரான்சிஸ்கோ ஃபிராங்கோ  போர்ச்சுகல் நாட்டில் அன்டோனியோ சலாசர் , ஹங்கேரியில் மிக்லோஸ் ஹோர்த்தி , ருமேனியாவில் அயன் அன்டனெஸ்க்யு  போன்ற சர்வாதிகாரிகள் ஆட்சி செய்தனர். இவர்களுள் ருமேனியா ஆட்சியாளர் ஹிட்லரோடு மிகநெருக்கமாய் இருந்து, ஏராளமானோரைக் கொன்று குவித்த காரணத்தால் 1946-ஆம் ஆண்டு போர்க் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜப்பானில் முசோலினி - ஹிட்லர் ஆகியோருக்கு கூட்டாளியாக விளங்கி ஏறத்தாழ ஐம்பது லட்சம் மக்களைக் கொன்றுகுவித்த ஹிடேகி டோஜோ  அமெரிக்கர்களால் கைதுசெய்யப்பட்டு, போர்க்குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்குப் பிறகும் பிலிப்பைன்ஸ் நாட்டில் பெர்டினான்ட் மார்கோஸ் (1965 – 1986), இந்தோனேசியாவில் சுகார்த்தோ (1967 – 1998), உகாண்டாவில் இடி அமீன் (1971 – 1979), சிலி நாட்டில் அகஸ்ட்டோ பினோசெட்(1973 -1990), கம்போடியாவில் போல்பாட் (1975 – 1979),இலங்கையில் மகிந்த ராஜபக்சே (2005 – 2015)என உலகெங்கும் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு தன்மைகளுடன் பாசிசம் தாண்டவமாடியது. இன்றும் சக்திவாய்ந்த நாடுகள் பலவற்றில் பற்பல அளவுகளில் பாசிசத்தன்மைகொண்ட வலதுசாரிகளே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள்.

இவர்கள் அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கவும், தக்கவைத்துக்கொள்ளவும் பாசிச சிந்தனையையும், செயல்பாடுகளையும் பிரயோகிக்கின்றனர். பிரேசில் அதிபர் தன்னுடைய ராணுவமும், காவல்துறையும் மக்களை கடுமையாகத் தாக்குவதை ஆமோதிக்கிறார். பிரேசில் மக்களில்நான்கில் ஒரு பங்கு பேர் ஏழைகளாக பசி, பட்டினியுடன் பரிதவிக்கும் நிலையில், தம் நாட்டில் “ஏழ்மை இருக்கிறதுஎன்று சொல்வது பெரும் பொய்” என்று சாடுகிறார். உலகின்நீண்டகால சனநாயக நாடு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமெரிக்காவிலோ, டொனால்டு டிரம்ப் அந்நாட்டுச் சிறுபான்மையினரையும், குடியேறியவர்களையும் பெரிதும் வெறுத்தார். நீதிபதிகளை, பத்திரிகையாளர்களை மிரட்டினார். தேர்தலையே திருடப் பார்த்தார்.

அழிவுச் சித்தாந்தம்
பாசிசம் ஓர் அழிவுச் சித்தாந்தம் என்பதில் ஐயமில்லை. இன்றைய உலகில் அழிவின் உச்சபட்சம் என்பது அணுவாயுதம்தான். இரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லர் தயாரிக்க விரும்பிய உலகின் முதலாவது அணுவாயுதத்தை ஏகாதிபத்திய அமெரிக்கா தயாரித்தது. பாசிசஆயுதம் பாசிசத்தையே பயக்கும் என்பதால், ‘சனநாயக’அமெரிக்கா இனவெறியோடு தோற்றுத் துவண்டு நின்றஜப்பான் நாட்டின்மீது தேவையின்றி அணுவாயுதங்களை வீசியது. இன்றைய உலகில் பல பாசிச ஆட்சியாளர்கள் அணுவாயுதங்களை தயாரித்து அடுக்கி வைத்திருக்கிறார்கள்; அல்லது தயாரிக்கும் உத்தியை அறிந்து வைத்திருக்கிறார்கள். பாசிசமும் அணுத்துவமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.இரண்டாம் உலகப்போர் துவங்கும் தருவாயில் 1939-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லியோ சிலார்ட் எனும் இயற்பியல் அறிஞர், அமெரிக்க அதிபர் ஃபிராங்களின் டி ரூஸ்வெல்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதினார். அணுப்பிளவு கோட்பாட்டின் மூலம் சக்தி வாய்ந்த அணுகுண்டு தயாரிக்க முடியும்; ஒரு வேளை, ஜெர்மனியின் நாசிச அரசும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்; எனவே, அமெரிக்கா இந்த ஆய்வில் ஈடுபடுவது நல்லது என்று அறிவுரைத்தது அந்தக் கடிதம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் இந்தக் கடிதத்தில் கையெழுத்து இட்டிருந்தார் (பின்னாளில் இதற்காக அவர் மனம் வருந்தவும் செய்தார்).

இந்த நிலையில் செப்டம்பர் ஒன்றாம் நாள் ஹிட்லர், ஜெர்மனியின் அண்டை நாடான போலந்து நாட்டின் மீது படையெடுக்க, இரண்டாம் உலகப் போர் துவங்கியது. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் அவசரம் அவசரமாக யுரேனியம் ஆலோசனைக் குழு ஒன்றை நிறுவினார். இப்படி சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஆய்வுத்திட்டம், ‘மன்ஹாட்டன் திட்டம்’ என்று அழைக்கப்பட்டது.

ஹிட்லர் அணுகுண்டுதயாரித்திருந்தால்...
பின்னர் 1941, டிசம்பர் 7 அன்று ஜப்பானிய போர் விமானங்கள் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள ‘பெர்ல்’ துறைமுகத்தில் குண்டுமழை பொழிந்தபோது, அமெரிக்கா ஜப்பான் நாட்டின் மீது போர் தொடுத்தது. நான்கு நாட்கள் கழித்து ஜெர்மனி, அமெரிக்கா மீது போர் அறிவிப்பை வெளியிட்டது. ‘அறிவியல் ஆய்வு மற்றும் வளர்ச்சி அலுவலகம்’ எனும் அமெரிக்க நிறுவனம் அவசரஅவசரமாகக் கூடி, அணுகுண்டுத் திட்டம் பற்றி விவாதித்தது.போர்க்கால அடிப்படையில் திட்டம் வளர்ந்து,பிரிட்டிஷ் விஞ்ஞானிகள், அமெரிக்க விஞ்ஞானிகளுடன் கைகோர்த்து, 1944-ஆம் வருடம் பல்வேறு ஆய்வுகளையும், முயற்சிகளையும், பரிசோதனைகளையும் செய்தனர். இந்நிலையில் 1945, மே 7-ஆம் நாள் நாசிஜெர்மனி சரண் அடைந்தது. ஐரோப்பாவில் போர் முடிவுக்குவந்தாலும், அமெரிக்காவின் அணுகுண்டுத் தயாரிப்பு நடவடிக்கைகளும், ஜப்பான்மீது வீசுகின்ற திட்டமும் தொடர்ந்துகொண்டு தானிருந்தன.

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் உள்ளஅலமகோர்த்தோ எனும் இடத்தில், ஜூலை 16 அன்று அணுகுண்டு பரிசோதிக்கப்பட்டது. ஜூலை 24 அன்று அமெரிக்கஅதிபர் ஹாரி ட்ரூமன், சோவியத் அதிபர் ஜோசப் ஸ்டாலினை அழைத்து, அமெரிக்கா அணுகுண்டு தயாரித்துவிட்டது என்று தெரிவித்தார். ஆகஸ்ட் 6, 9 தேதிகளில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின்மீது அணுகுண்டுகள் போடப்பட்டதும், லட்சக்கணக்கான மக்கள் மாண்டுபோனதும், மரண வேதனை அனுபவித்ததும் வரலாறு. ஹிட்லர் முதலில் அணுகுண்டுகளை தயாரித்திருந்தால், உலக வரலாறு தலைகீழாக மாறிப்போயிருக்கும். 

பாசிசம், அணுத்துவம் எனும் இரண்டுமே மனித உயிர்களின் மாண்பினை, மனித கண்ணியத்தை ஒரு பொருட்டாகப் பார்ப்பதில்லை. இரண்டு சித்தாந்தங்களுமே முழுக்கட்டுப்பாட்டை விரும்புகின்ற ஆதிக்க மனநிலை கொண்டவை. சனநாயகத்துக்கோ, கருத்துப் பரிமாற்றத்துக்கோ இவை எள்ளளவும் இடமளிப்பதில்லை. பேரினவாதம், இராணுவத்துவம் போன்றவற்றை வெளிப்படுத்தும் இவ்விரண்டுமே எதிர்ப்புக்களை நிர்மூலமாக்குகின்றன. வாழ்வின் அழகையும், வர்ணங்களையும் நிராகரிக்கின்றன. இரண்டுமே மரணத்தையும், அழிவையும் நியாயப்படுத்துகின்றன.

கட்டுரையாளர் : சுப.உதயகுமாரன், சமூக, அரசியல் செயற்பாட்டாளர்.

;