articles

img

ஆலய நுழைவு போராட்டத்தின் முன்னோடி தோழர் ஜீவா - யு.கே.சிவஞானம்

தமிழ்நாடு தெரிந்த மாபெரும் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஜீவா தனக்கென்றும் தனது குடும்பத்திற்கு என்றும் ஏதும் சேமித்துக் கொண்டது இல்லை. நாடு தான் தனது சொத்து என்று  தனது அந்திமகாலம் வரையில் தாம்பரத்தில் குடிசைப் பகுதியில் புறம்போக்கு நிலத்தில் போடப்பட்ட குடிசை யில் வாழ்ந்து மறைந்தார்.  1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி பட்டன் பிள்ளை என்பவருக்கும் உமையாம்பாளுக்கும் நான்காவது பிள்ளையாக கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பிறந்தார்.  பள்ளி பருவகாலத்தில் தேசவிடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட ஜீவா காந்திய நிர்மா ணத் திட்டங்களை நிறைவேற்றுவதில் பிடிவாதமாக இருந்தார். பஞ்சம சாதி இளைஞர்களை ஆதிக்க சாதிக் காரர்கள் வசிக்கும் தெருக்கள் வழியாகக் கூட்டிச் சென்றார். ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பால் ஜீவாவின் தந்தை பட்டன் பிள்ளை மகன் செயலுக்கு மன்னிப்பு கூறினார். ஜீவாவை கண்டித்தார். கொண்ட கொள் கையை கைவிடமாட்டேன் என்று வீட்டைவிட்டு, ஊரை விட்டு வெளியேறி தேச விடுதலை இயக்கத்தில் ஐக்கியமானார் ஜீவா.

தெருமறிச்சான் தடுப்பை மீறி

கோயில்களில் விழா தொடங்கியதும் தெருமறிச் சான் என்ற தடுப்புகள் வைக்கப்படும். திருவிழா முடியும் வரையில் பட்டியல் சாதியினர் தெருமறிச் சானை தாண்டி கோயில் பக்கம் போக முடியாது. இதற்கு எதிராக வைகுண்டசாமி, நாராயணகுரு, அய்யங்காளி ஆகியோர் ஆலயப் பிரவேச போராட்டம் நடத்தினர். இப்படிப்பட்ட நிலையில் ஜீவா தனது இளமைப் பருவத்திலேயே பட்டியல் இனத்தை சேர்ந்த தனது தோழனான மண்ணாடி மாணிக்கம் என்பவரை தெருமறிச்சானை தாண்டி கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். இந்த வகையில் அவர் நாஞ்சில் நாட்டு ஆலய நுழைவுப் போராட்டத்தின் முன்னோடிக ளில் ஒருவர். 1924இல் கேரளத்தின் வைதீகக் கோட்டை யாக இருந்த வைக்கம் நகரில் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இருபது மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற அந்த போராட்டத்தில் தந்தை பெரியார் பங்கேற்று வைக்கம் வீரர் என்று பெயர் எடுத்தார். சுவாமி நாராயணகுருவே போராட்டக் களத்திற்கு நேரிடையாக வந்து போராளிகளை ஆசீர் வதித்தார். ஜீவா தனது 17 ஆவது வயதில் வைக்கம் நகரில் ஆதிக்க சாதியினர் தெருவில் தீண்டாமைக் கெதிரான போராட்டத்தில் தானே சென்று கலந்து கொண்டார். 

வைக்கம் சத்தியாகிரகப் போரில் கலந்து கொண்டு திரும்பிய ஜீவா, தனது சொந்த மண்ணில் சுசீந்தரம் கோயிலில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட் டத்தில் கலந்து கொண்டார். அதனால் ஆதிக்க சாதியி னரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதை அதனால் பொருட்படுத்தாமல் ‘வழிவிடுவீர், வழிவிடுவீர்’ என தான் எழுதிய பாடலை பாடிக்கொண்டே கோயிலுக் குள் சென்றார். இப்போராட்டத்தின் போது ஜீவா தாக்கப் பட்டபோது ஏற்பட்ட காயம் கடைசி வரை விழுப்புண்ணாக நீடித்தது.  பின்பு நெல்லை சேரன்மாதேவியில் வ.வே.சு.அய்யரால் நடத்தப்பட்ட பரத்துவாஜர் ஆசிர மத்தில் ஆசிரியராக சேர்ந்தார். காங்கிரஸ் கமிட்டி யின் நிதி உதவிகளோடு நடத்தப்பட்ட அந்த ஆசி ரமத்தில் பிராமண மாணவர்களுக்கு தனியாகவும் இதர மாணவர்களுக்கு தனியாகவும் உணவு பறிமா றப்பட்டது. தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். மகாத்மா காந்தி தற்போது உள்ள முறையில் தனித் தனியான உணவுமுறை நீடிக்க வேண்டும். புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு ஒரே பந்தியில் உணவு அளிக்கலாம் என சமரசம் செய்தபோது அதனை எதிர்த்து ஜீவா ஆசிரமத்தைவிட்டு வெளியேறினார். 

சிராவயல் ஆசிரமம்

காரைக்குடி சென்று சிராவயலில் ஆசிரமத்தை தொடங்கினார். 1927இல் தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த காந்தியடிகள், ஜீவா நடத்திக் கொண்டிருந்த ஆசிரமத்திற்கு வந்தார். ஜீவா தன் கையால் சுற்றிய பத்தாயிரம் கஜம் நூலை அவருக்கு பரிசாகக் கொடுத்தார். நூலை பெற்றுக் கொண்ட காந்தி உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டார். இந்தியாதான் எனது சொத்து என ஜீவா பதில் சொல்லவும், இல்லை இல்லை; நீங்கள்தான் இந்தியாவின் சொத்து என மகாத்மா கூறினார். தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக இருந்த ஜீவா, கால்நடையாகவே பல கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்யும் போது அடி உதைபட்டார். கோட்டை நாயக்கன் கோயிலில் பட்டியலினமக்களை வழிபட அழைத்துச் சென்றபோது உள்ளூர் ஆதிக்க சாதியி னரின் கத்திக்குத்துக்கு உள்ளானார். பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட ஜீவா தேசவிடுதலை போராட்டத்திலும் ஈடுபட்டார்.  1932இல் காங்கிரஸ்காரராக சிறைபுகுந்த ஜீவா, சிறையில் பகத்சிங் சகாக்களான படுகேஷ்வர்தத், குந்தலால், வங்க புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி ஆகியோரை சந்தித்தபின் சோவி யத் புரட்சி ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும் கம்யூ னிஸ்ட் சித்தாந்தங்கள் குறித்தும் தெளிவு பெற்று கம்யூனிஸ்டாக வெளியே வந்தார்.

பெரியாருடன் சோவியத் நாட்டில்...

பெரியார் நடத்திய குடியரசு ஏட்டில் பொதுவுடைமை  இயக்கத் தலைவர்கள் சிங்கார வேலர், ஜீவாவின் கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருந்தன. 1932இல் இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் சக்லத்வாலா உதவியுடன் பெரியார் சோவியத் யூனியன் சென்று சோவியத் குடியரசுத் தலைவர் காலினினை  சந்தித்தார். மூன்று மாதம் சோவியத்தில் தங்கிய போது அங்கு ஏற்பட்ட சமூக மாற்றத்தை கண்ட பெரி யார் நான் சோவியத் குடிமகனாக வேண்டும் என்று  விண்ணப்பம் போட்டார். நீங்கள் உங்கள் நாட்டு மக்களை சோசலிச சமுதாயத்திற்கு மாற்ற வேண்டிய பணி உள்ளது. என சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தனர். 

தமிழகம் திரும்பிய ஈவேரா.சுயமரியாதை இயக் கத்தின் அரசியல் பிரிவாக சமதர்ம கட்சியை உரு வாக்கினார். ஈரோடு திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு சிங்கார வேலர் தலைமையேற்றார். ஜீவா உரையாற்றினார். இத்திட்டத்தின் கீழ் தமிழகம் எங்கும் தீவிர பிரச்சாரம் செய்த பெரியார் முதலாளித்துவ ஒழிப்பு மாநாடு, ஜமீன் ஒழிப்பு மாநாடு, லேவாதேவி ஒழிப்பு மாநாடு என பல மாநாடுகளை நடத்தினார். இந்நிலையில் இந்தியாவில் கம்யூனிஸ்ட்களின் வளர்ச்சியை தடுப்பதற்காக பிரிட்டிஷார் மீரட் சதி வழக்கினை தொடுத்து 27 தலைவர்களுக்கு தண்டனை கொடுத்து சிறையில் அடைத்தனர். பெரியார் தனது விடுதலை பத்திரிகையில் இந்த பெரும் பேறு நமக்கு வாய்க்கவில்லை என எழுதினார். பகத்சிங் எழுதிய ஜீவா தமிழாக்கம் செய்த ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என்ற நூலை பெரியார் அச்சிட்டு வெளி யிட்டார். இதற்காக ஈவேராவும், அவர் சகோதரர் ஈ.வே. கிருஷ்ணசாமியும் ஜீவாவும் பிரிட்டிஷ் அரசால் தண்டிக்கப்பட்டனர். 

சுயமரியாதை சோஷலிசக் கட்சி

கோவை சிறைச்சாலையில் அடைக்கப்படும் முன்பு ஜீவாவின் கைகளில் கொடிய விலங்கினை மாட்டி சங்கிலியால் பிணைத்து நாற்புறமும் காவலர்கள் பிடித்துக் கொண்டதை மாணவராக இருந்த தோழர். பாலதண்டாயுதம் கண்ணுற்றார். பின்பு பெரியார் பொதுவுடைமை பிரச்சாரத்தை நிறுத்தி சமூக சீர்திருத்த இயக்கத்தை முன்னெடுத்ததால் ஜீவா சுயமரியாதை சோஷலிசக் கட்சியை துவக்கினார். கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தின் தொடர்பால் குறிப்பாக தோழர் பி.ராமமூர்த்தி யுடன் பலமுறை விவாதித்த பின்பு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1936இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். 1937இல் சென்னை மாகாணத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. வெற்றிக்கு ஜீவா பெரும் பங்காற்றினார். ஆனால் காங்கிரஸ் ஆட்சி தனது வாக்குறுதிக்கு மாறாக குற்றப்பரம்பரை சட்டத்தை ரத்து செய்ய வில்லை. இதற்கு ஜீவா, பி.ராமமூர்த்தி, முத்துராம லிங்கத் தேவர் ஆகியோர் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கண்டன இயக்கங்கள் நடைபெற்றன. அடுத்த சட்ட சபை கூட்டத் தொடரிலேயே அச்சட்டம் ரத்து செய்யப் பட்டது. 

துப்பாக்கிக்கு மார்பைக் காட்டி...

இதே காலக் கட்டத்தில் கோவை லெட்சுமி ஆலை போராட்டம், விக்ரமசிங்கபுரம் பஞ்சாலை போராட்டம் ஆகியவற்றுக்கு ஜீவா வழிகாட்டினார். மதுரை பசு மலைமில் போராட்டத்தில் ஜீவா தாக்கப்பட்டார். ஆவே சம் கொண்ட முத்தம்மாள் என்ற பெண் தொழிலாளி ஜீவாவை தாக்கிய, உதவி ஆய்வாளரை விளக்கு மாறால் அடித்து விட்டார். 1946 பிப்ரவரி 18இல் கப்பல் படை எழுச்சிக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று சென்னையில் ஜீவா தலைமை யில் நடைபெற்ற ஊர்வலம் – பிஅண்டுசி மில் அருகே போய்க் கொண்டிருந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தி மேற்கொண்டு நகர்ந்தால் சுடுவோம் என்றனர். சுடு என மார்பைத் திறந்து காட்டி ஜீவா முன்னேறவும் ஊர்வலம் தொடர்ந்தது.  விடுதலைக்கு பின்பு 1952இல் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் சென்னை வண்ணாரப்பேட்டை தொகுதியில் ஜீவா வெற்றி பெற்றார். ஜீவா, பி.ராமமூர்த்தி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர்கள் சட்டமன்றத்தில் தமிழிலேயே பேசினர். ராஜாஜியால் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்ட மசோதாவை எதிர்த்து அதனை தோற்கடித்தார்கள்.

மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற போராட்டத்திலும் தமிழர்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் கேரள எல்லையில் உள்ள ஊர்கள் தமிழ்நாட்டுடன் இணைத்திட நடந்த போராட்டத்தி லும் இணைந்து போராடினார்கள். நாஞ்சில் நாட்டில் உள்ள தமிழர்கள் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக் கப்பட்ட போது தமிழ்மக்கள் பெரும்பான்மையாக வசித்த தேவிகுளம், பீர்மேடு, சித்தூர், நெய்யாற்றின் கரை, செங்கோட்டையின் மேல் பாகம் கேரளத்து டனேயே இருக்க வேண்டும் என்ற நால்வர் கமிட்டி தீர்ப்பை எதிர்த்து, 1955 பிப்ரவரி 2இல் சென்னையில் நடந்த ஊர்வலத்தின் போது போலீஸ் தடியடி நடத்திய தில் ஜீவாவும் எம்.ஆர்.வெங்கடராமனும் கடுமை யாகத் தாக்கப்பட்டனர்.

சர்வதேச சமாதான மாநாடு

எந்த சோவியத் சமூக அமைப்பை பற்றி ஜீவா தன் வாழ்நாள் முழுவதும் முழங்கினாரோ அந்த சோவியத் பூமியை பார்க்கக் கூடிய வாய்ப்பு 1962இல் அவருக்கு கிட்டியது. உலக சமாதான கவுன்சிலின் சர்வதேசமாநாட்டில் பங்கேற்க மாஸ்கோ சென்றார். சோவியத் குறித்து பல கடிதங்கள் எழுதினார். அதில் புகழ்பெற்றது சைபீரிய ரோஜா. 1963 ஜனவரியில் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். 18 ஆம் தேதி இயற்கை எய்தினார். ஜீவாவின் உடல் பிராட்வேயில் உள்ள சென்னை துறைமுகத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லா யிரக்கணக்கான உழைப்பாளி மக்கள் அரசியல் பேதமின்றி அஞ்சலி செலுத்தினர். இரங்கல் கூட்டத்தில் இறுதியாக பேச எழுந்த பிரபல நடிகர் டி.கே.சண்முகம், மேடைதோறும் தான் பாடிவந்த ஜீவாவின் ஒரு பாடலை பாடுவதே அவருக்கு செலுத்தும் அஞ்சலி என பாடினார். 

‘காலுக்குச் செருப்புமில்லை  கால் வயிற்று கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா-  என் தோழனே  பசையற்று போனோமடா பாலின்றிப் பிள்ளை அழும்  பட்டினியில் தாய் அழுவாள் வேலையின்றி நாமழுவோம்- என் தோழனே வீடுமுச்சூடும் அழும்’

என்ற அடிகளை அவர் பாடியபோது கூடியிருந்த மக்களின் புடைத்தெழுந்த விம்மல் ஓசை கடல் ஒசையையும் தாண்டியது. 

கட்டுரையாளர் : தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் துணை பொதுச் செயலாளர்

 

;