articles

img

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் பனங்குடி கிராமம் -​​​​​​​முனைவர்.தி.பாலசுப்பிரமணியன்

இந்தியா முழுவதும் சுதந்திரப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, தமிழகத்தில் சிவகங்கை சீமையின் ஒரு பகுதியில் பனங்குடி என்ற ஒரு கிராமத்தில் ஆகஸ்ட் புரட்சி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு வெளியில் தெரியாத சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நினைவு கூருவோம். 

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று ஆகஸ்ட் புரட்சி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சிவகங்கை மாவட்டம்  பனங்குடி கிராமமே கலந்து கொண்டது.  சிறிய கிராமமாக இருந்தாலும் 29 நபர்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 15 சுதந்திரப் போராட்ட தியாகிகள் , இந்திய தேசிய ராணுவத்தில் 14 வீரர்களும் இந்த ஊரில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக  தெரிய வருகிறது. 

இங்கு தியாகிகள் நினைவுத்தூண் ஒன்று கட்டப்பட்டுள்ளது.தியாகிகள் பூங்காவும் அங்கே உள்ளது. 1990 இல் மாவட்ட ஆட்சியர் குத்சியா காந்தி  இதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து வந்தார் என்பது நினைவுத்தூண் மூலம் தெரியவருகிறது. சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களிலும் இந்த தியாகிகள் நினைவு தினத்திலும் மக்கள் வழிபட்டு நினைவு கூருகின்றனர். 

இந்த ஊரில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகி கண்ணுச்சாமி  அவர்களின் மகன் மாசிலாமணி  மற்றும் தியாகி ஏ.ஆர்.சந்தானம் வாரிசு இளங்கோ, தியாகி சின்னப்பன் வாரிசு சசிகுமார் மற்றும் தியாகி வி.மாணிக்கம் பேரன் டேவிட்சன் ஆகியோர் கூறுகையில், பனங்குடி நடராஜபுரம் ரயில்வே நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளும் 24.8.1942 அன்று ஆங்கிலேயர்களுக்கு எதிரான கோபத்தில் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளின் வீடுகளை அப்பொழுதே ஆங்கிலேயர்கள் தீயிட்டு கொளுத்தியும் அவர்களை சிறையில் அடைத்தும் சித்ரவதை செய்தனர். எங்கள் கிராமமே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோசமான,பெருமையான விஷயம். தியாகிகளின் நினைவாகவே தியாகிகள் பூங்கா மற்றும் நினைவு தூண்களை நாங்கள் வழிபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர். 

கண்ணுச்சாமி  அவர்களுக்கு இந்திய விடுதலையின் 25 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்கின் நினைவாக  பிரதமர் இந்திரா காந்தி, தியாகிகள் தாமிர பத்திரம் என்ற ஒரு பட்டயத்தை வழங்கியுள்ளனர்.

தியாகி ஏ. ஆர். சின்னப்பன் 1942 ஆகஸ்ட் புரட்சியில் ஈடுபட்டு 5 மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். அவர்களுக்கு 1973இல் முதல்வர் கலைஞர் அவர்களின் தலைமையில் இந்திய நாட்டு விடுதலை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நினைவாக விடுதலைப் போரில் ஈடுபட்ட தியாக செம்மல் என்ற விருது வழங்கப்பட்டது.

தியாகி வே.மாணிக்கம் அவர்களுக்கு1973ல் முதல்வர் கலைஞர் அவர்களின் தலைமையில் இந்திய நாட்டு விடுதலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நினைவாக விடுதலைப் போரில் ஈடுபட்ட தியாக செம்மல் விருது வழங்கப்பட்டது.

தியாகி ஏ.ஆர். சந்தனம் ஆகஸ்ட் புரட்சியில் பங்கு பெற்று சிறை சென்றார். ஏ. சின்னகருப்பன் ஆகஸ்ட் புரட்சி போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கலந்து கொண்டு, 4மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். 

1942 இல் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் எஸ். இப்ராகிம். வீரச்செயலில் ஈடுபட்ட  தியாக செம்மல் விருது வழங்கப்பட்டது.

பணங்குடி கிராமத்தில்  சமத்துவம், சகோதரத்துவம் இன்றும் காணப்படுவது  மிகச் சிறந்த விஷயம். இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து ஒரு சகோதரத்துவமாக விழாக்களில் பங்கேற்று வருகின்றனர்.

எஸ்.இப்ராகீம் 1942ல் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து ஆங்கிலேயரை எதிர்த்து போராடியவர் விடுதலைப் போரில் கலந்து கொண்ட வீர செயல் ஈடுபட்ட தியாக செம்மல் விருது வழங்கப்பட்டது.

முனைவர்.தி.பாலசுப்பிரமணியன்
உதவி பயிற்றுநர், வரலாற்றுத்துறை, அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி

;