around-world

img

இந்நாள் இதற்கு முன்னால்... ஜன.29

1780 - இந்தியாவின் முதல் செய்தித்தாளான ‘ஹிக்கியின் பெங்கால் கெஸட்’ என்ற ஆங்கில இதழ், இந்தியாவின் அப்போதைய தலைநகரான கல்கத்தாவிலிருந்து வெளிவரத் தொடங்கியது. ஆசியாவின் முதல் செய்தித்தாளுமான இதை, ஜேம்ஸ் ஹிக்கி என்ற ஆங்கிலேயர் வெளியிட்டார். அவ்வாண்டின் இறுதியிலேயே, ‘கல்கத்தா பப்ளிக் அட்வர்ட்டைசர்’ என்ற அடைமொழியுடன், ‘இந்தியா கெஸட்’ என்ற இதழை கிழக்கிந்தியக் கம்பெனியே தொடங்க, ‘ஒரிஜினல் கல்கத்தா ஜெனரல் அட்வர்ட்டைசர்’ என்ற அடைமொழியைச் சேர்த்த ஹிக்கி, கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத்தை விமர்சித்தும், ஊழல்களில் ஈடுபடுவதாகவும் எழுதத் தொடங்கியதால், இரண்டு ஆண்டுகளில் இதனைத் தடைசெய்த கம்பெனி,  அச்சுக் கருவிகளையும் பறிமுதல் செய்தது. இதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே வில்லியம் போல்ட்ஸ் என்ற டச்சுக்காரர் இந்தியாவில் செய்தித்தாள் தொடங்க முயற்சித்தாலும், அது நிறைவேறவில்லை. இதற்கடுத்து இந்தியாவில் செய்தித்தாள் வெளியான நகரம் சென்னைதான்.

1785இல், ‘மெட்ராஸ் கொரியர்’ இதழும், 1789இல் பம்பாயிலிருந்து, ‘பாம்பே ஹெரால்ட்’ இதழும் தொடங்கப்பட்டன. 1818இல் கல்கத்தாவுக்கு அருகிலுள்ள செராம்ப்பூரிலிருந்து, பாப்டிஸ்ட் மிஷனரி சொசைட்டி வெளியிட்ட வங்க மொழி இதழான ‘சமாச்சார் தர்ப்பன்’தான் முதல் இந்திய மொழிச் செய்தித்தாளாகும். கங்கா கிஷோர் பட்டாச்சார்யாவின் ‘பெங்கால் கெஸட்டி’ இதழ் 1816இலேயே தொடங்கப்பட்டதாகச் சிலர் கூறினாலும், அதற்கு ஆதாரங்கள் இல்லை. 1822இல் தொடங்கப்பட்ட குஜராத்தி இதழான ‘பாம்பே சமாச்சார்’-தான் இன்றும் வெளியாகிக் கொண்டிருக்கிற, ஆசியாவின் மிகப்பழைய இதழாகும். முதல் இந்தி இதழும்கூட (‘உதாந்த் மார்த்தண்ட்’ - உதயசூரியன்) கல்கத்தாவிலிருந்துதான் 1826இல் வெளியானது. 2018 மார்ச் 31வரை, இந்திய செய்தித்தாள் பதிவாளரிடம் 17,573 நாளிதழ்களும், 1,00,666 பருவ இதழ்களும் பதிவு செய்யப்பட்டு, 2017-18ல் 43,00,66,629 பிரதிகள் விற்பனையாகியுள்ளன. மிகஅதிகமாக இந்தியில் 47,989 இதழ்கள் பதிவுசெய்யப்பட்டு, 19,56,21,990 பிரதிகளும், இரண்டாவதாக ஆங்கிலத்தில் 14,626 இதழ்கள் பதிவுசெய்யப்பட்டு, 5,34,53,564 பிரதிகளும் விற்பனையாகியுள்ளன. 17,992 இதழ்களுடன் மிகஅதிக பதிவுசெய்யப்பட்டுள்ள மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. 11,18,440 பிரதிகளுடன் மிகஅதிகம் விற்பனையாகும் இதழாக ‘ஆனந்த பஜார் பத்திரிக்கா’ என்ற வங்கமொழி இதழ் விளங்குகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் அச்சு ஊடகங்கள் சரிவைச் சந்தித்து மூடப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் இன்னும் 8-12 சதவீத வளர்ச்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது.

;