நிலத்தடி நீருக்கு வரி விதிப்பதா? சிவகிரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தென்காசி, ஜூன் 30-
விவசாயத்திற்கு பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரிவிதிக்கும் ஒன்றிய ஜல்சக்தி (நீர்வளத்துறை) துறை அமைச்சகத்தின் முடிவை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிவகிரி காந்தி கலையரங்கம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வாசுதேவநல்லூர் ஒன்றியச்செயலாளர் வே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துவக்கிவைத்து சிபிஎம்- வாசு-ஒன்றியச்செயலாளர் இரா.நடராஜன் பேசினார். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சங்கத்தின் மாவட்டத்துணைத் தலைவர் இராஜகோபால் பேசினார்.
பொ.ஜெயராஜ். எஸ்.சிவசுப்பிரமணியன், க.சக்திவேல், க.ஜீவா, மு.பெரியசாமி, ஜி. அமல்ராஜ், மருதையா, கருப்பையா, குருசாமி, உத்தமி, உலகம்மாள், சுந்தரவேலு, போத்தி, வெள்ளப் பாண்டி, வெள்ளத்துரை, பே.மாரியப்பன் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் ஜுலை 8 இல் விடுமுறை
திருநெல்வேலி, ஜூன் 30- நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் ஜுலை 8 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் திங்களன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்ட அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, 08.07.2025 அன்று மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை என அதில் குறிப்பிட்டுள்ளது
அனுமதியின்றி மது விற்றவர் கைது: 27 மது பாட்டில்கள் பறிமுதல்
அருமனை, ஜூன் 30- அருமனைஅருகே அனுமதியின்றி மது விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டு மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அருமனை அருகே இரும்பிலி மாறப்பாடி பகுதியை சேர்ந்த ராஜன். (53) இவர் அருமனை அருகே முட்டைவிளை பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்வது அருமனை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அருமனை போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வந்தனர். இந்நிலையில் ராஜன் மது விற்பதை பார்த்து கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவர் விற்பனைக்காக வைத்திருந்த 27 மது பாட்டில் மற்றும் ரூ. 1300 பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து இவரை அருமனை காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது மது விற்பனை சம்பந்தமாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
தென்காசியில் மக்கள் குறைதீர் கூட்டம்: ஆட்சியரிடம் 589 மனுக்கள் அளிப்பு
தென்காசி, ஜூன் 30- தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜுன் 30 திங்களன்று மாவட்ட ஆட்சித்தலைவர். ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.8500 வீதம் மொத்தம் ரூ.85,000 மதிப்பி லான செயற்கைக் கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 589 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசா ரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தி னார்.