ஞாயிறு, அக்டோபர் 25, 2020

தமிழகம்

img

தமிழகத்தில் தொடரும் ரவுடிகள் படுகொலை...

சென்னை
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமானதன் விளைவாக ஊரடங்கு காலத்திலும் கூட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் ரவுடிகளிடையே மோதல் அதிகரித்துள்ளது.சென்னை எண்ணூரில் ரவுடியை வெட்டி கொலை செய்ததால் பழிக்குப்பழியாக ஏழு பேர் கொண்ட கும்பல் ரவுடி ராஜசேகரை வெட்டி கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.சென்னை எண்ணூர் தாழங் குப்பம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் ராஜசேகர். பிரபல ரவுடியான இவர் வழிப்பறி வழக்கில் சிறைக்கு சென்று விட்டு 2 வாரத்திற்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.இந்தநிலையில் சம்பவத் தன்று குடிபோதையில் இருந்த ராஜசேகரை 7 பேர் கொண்ட கும்பல் விரட்டி வெட்டி கொலை செய்து பக்கிங்காம் கால்வாயில் வீசி சென்றனர்.தகவலறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த எண்ணூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மாதவரம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.இந்நிலையில், திருவொற்றியூர் ஒண்டிகுப்பம் பகுதியில் மறைந்திருந்து இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் திருவொற்றியூர் கார்கில் நகரைச் சேர்ந்தகார்த்திக் என்கின்ற புறா கார்த்திக், அத்திப்பட்டு புதுநகர் கரீம், தண்டையார்பேட்டை குட்டா, எண்ணூர் சூர்யா, ஹரிஷ் அஜித் ஜாக்கி ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், "கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி டகுல் சுரேஷ் என்பவரை ராஜசேகர் தம்பி குள்ள கார்த்தி மற்றும் சிலர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர். எங்களுக்கு தலைவனாக செயல்பட்ட டகுல் சுரேஷ் கொலைக்கு பழிவாங்க காத்திருந்தோம்.இந்த நிலையில் டகுல் சுரேசை கொலை செய்ய நான்தான் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தேன் என்று ராஜசேகர் எங்களிடம் அடிக்கடி கூறி எங்களை மிரட்டி வந்தான். இதனால், அவரை கொலை செய்ய மூன்று நாட்களாக தேடி வந்தோம். சம்பவத் தன்று குடிபோதையில் இருந்த ராஜசேகரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தோம்" என அவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

;