world

img

எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது... (மார்க்ஸ் நினைவு நாள் மார்ச் 14)

தனது அறிவியல் அறிவை..அரசியல் அறிவை..பொருளியல் அறிவை ஆழமாக்க தொடர்ந்து உழைத்தார் காரல் மார்க்ஸ். உழைக்கும் மக்களின்..தொழிலாளி வர்க்கத்தின் விடியலுக்காக சமூக அரசியல் பொருளாதார அறிவை ஆழமாக்கினார். அதற்காக வாழ்க்கையின் பெரும்பகுதியைப் படித்தும்எழுதியும் வெளிச்சத்தை நோக்கி பயணித்தார். அதில் அதனாலேயே வெற்றியும் கண்டார். ஆயிரம் ஆண்டுகளில் உலகின் மிகச் சிறந்த சிந்தனையாளராக லண்டன் பி.பி.சி காரல் மார்க்ஸைத் தேர்வு செய்தது.
காரல் மார்க்ஸ் மனிதகுல விடுதலைக்கான தத்துவத்தைப் படைத்தது வறட்டுத் தனமானதன்று. அது அறிவியல்பூர்வமானது. குடும்பத் துன்பங்களின் சுமைகள் எப்படிஇருந்த போதிலும் மார்க்ஸின் அறிவியல் மற்றும் அரசியல் பணியில் ஜென்னி சோர்வடையாமல் உதவி செய்தார். பல்லாண்டுகாலம் ஜென்னியே மார்க்ஸின்  செயலாளர் பொறுப்பில் பணியாற்றினார். அவருடைய நூல்களைப் பிரதியெடுத்தார்.கட்சிப் பணிகளில் மார்க்ஸின் செய்தி அறிவிப்பாளராக இருந்தார். ஜென்னி தன்னைக் கட்சியின் ஊழியர் என்று பெருமையாகக் கருதினார்.

தன் கணவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றுமே மற்றவர்களைக் காட்டிலும் ஜென்னியைத்தான் அதிகமாகப் பாதித்தது. ஜெர்மனியின் பிற்போக்குப் பத்திரிகைகள் 1848 ஆம் ஆண்டுப் புரட்சிக்காரர்களைப் பற்றி அவதூறு செய்தபொழுது,விஷத்தில் தோய்க்கப்பட்ட அம்புகள்மார்க்ஸைக் குறி பார்த்துத் தொடுக்கப்பட்ட பொழுது ஜென்னியே மிகவும் பாதிக்கப்பட்டார்.நோயில் விழுந்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க மூலதனத்தின் முதல் தொகுதி வெளியிடப்பட்டபிறகு சகாப்தம் நிறைந்த இந்நூலை ஜெர்மானியர்கள் முற்றிலும் புறக்கணித்துவிட்டார்களே என்று ஜென்னி மிகவும் வருந்தினார்.

“நான் மார்க்ஸையும் எங்கெல்ஸையும் இன்னும் நேசிக்கிறேன். அவர்களைத் திட்டுவதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது.இல்லை, அவர்கள் உண்மையான மனிதர்கள்!நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையை நாம் விட்டுவிடக்கூடாது.”..இது லெனின் கூற்று.மனிதகுல விடுதலைக்கு மார்க்சியமே தீர்வுஎன வாடிகன் போப் ஜான்பால் கூறியது நினைவுகூரத் தக்கது.இன்று உலகப் புகழ் வாய்ந்த தத்துவவாதியாக மார்க்ஸ் மிளிர்கிறார். 

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு”  என்ற திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தது மார்க்ஸ்-எங்கெல்ஸ் நட்பு. ஒருவரின்றி இன்னொருவர் இல்லை எனுமளவில் உணர்வுப்பூர்வமான நட்பில் திளைத்தனர் இருவரும். மார்க்சின் மூலதனம் உள்ளிட்ட நூல்கள் எங்கெல்ஸ்இல்லாமல் வெளியிட்டிருக்க வாய்ப்பேயில்லை.காரல் மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் ஆகியோரின் முதல் சந்திப்பு 1842 நவம்பரில் கொலோனில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் பாரீசில் மீண்டும் சந்தித்தபோது தாங்களிருவரும் சமூக வளர்ச்சியைப் பற்றி அடிப்படையில் ஒரே மாதிரியான கருத்துக்களுக்கு வெவ்வேறு பாதைகளின் மூலமாக வந்திருப்பதைக் கண்டனர். அது அவர்களுக்கு அதிகமான மகிழ்ச்சியைக் கொடுத்தது. மார்க்சியம் ஒரு மனிதருடைய பெயரைத் தாங்கியிருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பிரிக்க முடியாத பணியாகும். மார்க்ஸ் ஒருமுறை எங்கெல்ஸைத் தன்னுடைய ‘இரண்டாவது நான்’என்று அறிமுகம் செய்தார்.ஏங்கெல்ஸ் மார்க்ஸைக் காட்டிலும் இரண்டுவயது இளையவர் என்றாலும் அவரைக் காட்டிலும் முன்பே பத்திரிகைகளில் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதத் தொடங்கினார். அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு உருவரைகள் என்ற தலைப்பில் எங்கெல்ஸ் எழுதிய கட்டுரை 1844ல் வெளியாயிற்று.எங்கெல்ஸுக்கு அப்பொழுது 24 வயதே ஆகியிருந்தது. மார்க்ஸ்மூலதனத்தில் இக்கட்டுரையை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.இதற்கு ஓராண்டுக்குப் பின்பு ‘இங்கிலாந்தில்
தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை’ என்ற நூலைஎங்கெல்ஸ் வெளியிட்டார். மார்க்ஸும் லெனினும்இந்நூலை உயர்வாகக் கருதினர்.

மார்க்ஸ் குடும்பம் இங்கிலாந்தில் வாழ்க்கைநடத்துவதற்கு எந்த வழியும் இல்லாமலிருந்தபடியால் எங்கெல்ஸ் அவர்களுக்கு உதவி செய்யவிரும்பினார். எனவே மான்செஸ்டரில்  அவருடைய தகப்பனார் பங்குதாரராக இருந்த நெசவாலையில் எழுத்தராக வேலை செய்தார். இக்காலகட்டத்தில் மார்க்ஸுக்கு எங்கெல்ஸ்  எழுதிய கடிதங்களுடன் காசோலையையும் சேர்த்தே அனுப்பினார். மார்க்ஸ் தன்னுடைய லண்டன் வாழ்க்கை காலகட்டத்தில் எங்கெல்ஸைக் கலந்து கொள்ளாமல் எச்செயலையும் செய்ததில்லை. இருவரும் இணைந்து புனிதக் குடும்பம், ஜெர்மன் சித்தாந்தம் ஆகிய நூல்களைக் கூட்டாக எழுதினர். 1848ஆம் ஆண்டு மார்க்ஸும் எங்கெல்சும் இணைந்து தயாரித்து வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ உலகப் புகழ் வாய்ந்தது.

எங்கெல்ஸ் லண்டனுக்குச் செல்கின்ற பொழுது இரு நண்பர்களும் நேரடியாகச் சந்தித்துக் கொள்வார்கள். மார்க்ஸ் குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். மார்க்ஸின் பெண் மக்கள் எங்கெல்ஸை சித்தப்பா என்றழைப்பார்கள். எங்கெல்ஸ் தன்னலமின்றிப் பல ஆண்டுகள் உதவி செய்திருக்காவிட்டால் மார்க்ஸுக்கும் அவர் குடும்பத்துக்கும் என்ன கதி ஏற்பட்டிருக்கும் என்பதைச் சொல்வது கடினம். அவர்தன்னுடைய நண்பரின் அறிவியல் ஆய்வுகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய சொந்த அக்கறைகளை ஒதுக்கி வைத்தார். மார்க்ஸ் இதை நினைத்து எப்போதுமே வருத்தமடைந்தார்.

மார்க்ஸ் மரணமடைந்த பிறகு எங்கெல்ஸ் சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவரானார்.மார்க்ஸின் மரணத்திற்குப் பின் மூலதனத்தின்இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை முடிப்பது எங்கெல்ஸின் முக்கியப் பணியாயிற்று. “மனிதகுல நன்மைக்காக நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன் எந்தச் சுமையும் நம்மைஅழுத்த முடியாது. ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகின்ற தியாகம்”மார்க்ஸின் இந்த வரிகள் அர்த்த அடர்த்தி மிக்கவை.

பெரணமல்லூர் சேகரன்

;