world

img

நிறுவனங்கள் திவால் அதிகரிப்பு ஜெர்மனியில் நெருக்கடி

ஐரோப்பிய நாடுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் நிறுவனங்கள் திவாலாவது அதிகரித்துள்ளது.

ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ஆகஸ்டு மாதத்தில் 6.6 விழுக்காடு அளவுக்கு கூடுதலாக நிறுவனங்கள் திவாலாகியுள்ளன. இந்தத் தகவலை ஜெர்மனியின் அதிகாரபூர்வப் புள்ளிவிபரத்துறையே வெளியிட்டுள்ளது. நடப்பாண்டின் முதல் அரையாண்டில் நிறுவனங்கள் திவாலாகும் வேகம் குறைந்திருந்தது. கடந்த மூன்று மாதங்களில் இது வேகம் பிடித்துள்ளது. பொருளாதார ஆய்வு வல்லுநர்களின் ஒருவரான ஸ்டீபன் முல்லர், "பெரும் அளவில் அதிகரித்துள்ள எரிபொருள் விலை ஜெர்மனியின் நிறுவனங்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.

தேவையான பொருட்கள் கிடைப்பதில் பிரச்சனை மற்றும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள ஐரோப்பிய மத்திய வங்கியின் நடவடிக்கை ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது. செப்டம்பர் தொடங்கியவுடன், இரண்டு நிறுவனங்கள் திவாலானதாக அறிவித்துக் கொண்டன. ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் 120 கடைகளைக் கொண்டுள்ள கோயர்ட்ஸ், பணவீக்கமும், எரிபொருள் விலையுமே தங்கள் கடைகளை மூடுவதற்குக் காரணமாகி விட்டன என்று அறிவித்துள்ளது.

ஜெர்மனியின் பணவீக்கமும் இதுவரை இல்லாத அளவுக்கு 7.9 விழுக்காடாக ஆகஸ்டு மாதத்தில் அதிகரித்திருந்தது. ஒட்டுமொத்த பணவீக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்தன. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது எரிபொருட்களின் விலைகள் 35.6 விழுக்காடு அதிகரித்தது. அடுத்த கட்ட நிவாரணத்தை அளிக்க ஜெர்மனி அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், இந்த நிவாரண நடவடிக்கைகள் போதுமான அளவுக்கு இல்லை என்று ஜெர்மனி பொருளாதார ஆய்வு மையத்தின் தலைவரான மார்செல் ஃபிராட்ஸ்செர் எச்சரித்துள்ளார்.

;