world

6 நாட்டிற்கு விசா இல்லாத நுழைவை வழங்கும் சீனா!

இந்த ஆண்டு டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் வரை, பிரான்ஸ் உள்ளிட்ட 6 நாடுகள் சீனா செல்ல விசா தேவையில்லை என அந்நாடு அறிவித்துள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் மலேசியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு, சீனா விசாவிற்கு  தற்காலிகமாக விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த 6 நாடுகளையும் சேர்ந்த வர்த்தகப் பயணிகள், சுற்றுப்பயணிகள், உறவினர் அல்லது நண்பர்களைக் காணச் செல்வோர் போன்றோருக்கு இது பொருந்தும்.

15 அல்லது அதற்குக் குறைவான நாள்கள் தங்க விரும்பும் இடைவழிப் பயணிகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும்.

சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர், நவம்பர் 24-ஆம் தேதி இந்தத் தகவலை வெளியிட்டார்.

கூடுதலான சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் விதமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

சுற்றுலாத் துறையைப் புதுப்பிக்கவும் அனைத்துலக விமானப் பாதைகளை மீட்டெடுக்கவும் சீனா அண்மைய மாதங்களில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இம்மாதத் தொடக்கத்தில், சீனா தனது விசா இல்லாத போக்குவரத்துக் கொள்கையை நார்வே உட்பட 54 நாடுகளுக்கு விரிவுபடுத்தியது.

ஜூலையில் சிங்கப்பூர், புருணை குடிமக்கள் விசா இல்லாமல் 15 நாள் பயணம் மேற்கொள்ள அது அனுமதி வழங்கியது.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.