world

img

கியூபாவுக்கு எதிரான போக்கைக் கைவிடுங்கள் - மெக்சிகோ ஜனாதிபதி வலியுறுத்தல்

கியூபாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று மெக்சிகோவின் ஜனாதிபதியும், இடதுசாரித் தலைவருமான ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார்(அம்லோ) வலியுறுத்தியுள்ளார்.
1958 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதியன்று ஆயுதங்களை விற்பனை செய்யக்கூடாது என்று தொடங்கிய தடைகள் எந்த அமெரிக்க நிறுவனமும் எந்தப் பொருளையும் கியூபாவுக்கு விற்கக்கூடாது என்று மாறியது. உலகம் முழுவதும் கண்டனங்களை எழுப்பியுள்ள இந்தத் தடைகள் கியூப பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றின்போது கூடுதல் தடைகளை அமெரிக்கா விதித்திருக்கிறது. நவீன வரலாற்றில் கியூபா மீது சுமத்தப்பட்ட தடைகள்தான் உலகிலேயே மிக நீண்ட நாள் நீடித்திருக்கும் தடைகளாக உள்ளது.
இந்தத் தடைகளை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று மெக்சிகோ ஜனாதிபதி அம்லோ வலியுறுத்தி வருகிறார். அமெரிக்க நாடுகளின் உச்சிமாநாடு நடக்கவிருக்கும் வேளையில் அந்த நாடுகளில் ஒன்றான கியூபா மீது தடைகளை விதித்திருப்பது பொருத்தமானதல்ல என்று அவரும் பல தென் அமெரிக்க நாடுகளும் கூறி வருகின்றன. தடைகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அம்லோ, "கியூபா மீது அமெரிக்கா சுமத்தியுள்ள தடைகளை ஜோ பைடன் விலக்கிக் கொள்ள வேண்டும். இந்தத் தடைகள் பழங்கால மனநிலையைக் காட்டுகிறது. மனித உரிமைகளை மீறும் வகையிலானது" என்று குறிப்பிட்டார். 
அத்தியாவசியப் பொருட்கள் மீதான தடைகள் ஏராளமான கியூப மக்களைப் பாதிக்கின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், "அந்த மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது மறுக்கப்படுகிறது. இது மனித உரிமை மீறலாகும். இத்தகைய தடைகள் போடப்பட்டிருப்பது தவறான செயலாகும். எந்த நாடாக இருந்தாலும் கியூபாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கான உரிமை கிடையாது" என்று குறிப்பிட்டார்.
உச்சிமாநாடு பற்றிக் கருத்து தெரிவித்த அவர், "இந்த மாநாட்டுக்கான ஏற்பாடானது சரியான பாதையில் செல்வதற்காக மேற்கொள்ளப்படும் முதல் கட்ட நடவடிக்கையாகும். ஆனால், இத்தகைய முயற்சிகள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சில நாடுகளுக்கு அழைப்பு விடாமல் இருப்பது சரியல்ல" என்றார். நிகரகுவா, வெனிசுலா மற்றும் கியூபா ஆகிய நாடுகளை அழைக்காமல் அமெரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த மாநாடு நடக்கவிருக்கிறது.
 

;