world

img

என்ன செய்யப் போகிறோம்? விழி பிதுங்கி நிற்கும் ஐரோப்பிய நாடுகள்

ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியால் ஏற்பட்டுள் எரிபொருள் சிக்கல் பற்றி பிரேக் நகரில் நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டில் ஐரோப்பிய நாடுகள் விவாதிக்கவுள்ளன.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் எரிபொருளுக்கான ரஷ்யாவையே நம்பியிருந்தன. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் அங்கிருந்து எரிபொருள் வாங்குவதை விட்டுவிட்டதால், கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. குளிர்காலம் தொடங்கப்போவதால் இந்தப் பற்றாக்குறை மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், பல நாடுகள் எரிபொருள் சிக்கலுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று கோரி வருகின்றன.

அக்டோபர் 7 ஆம் தேதியன்று செக் குடியரசின் தலைநகர் பிரேக்கில் இந்த உச்சிமாநாடு தொடங்குகிறது. இதில் ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகள், உக்ரைன், மோல்டோவா, ஜார்ஜியா, நார்வே, ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. ஐரோப்பிய யூனியன் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பில் செக் குடியரசு இருப்பதால், தலைமைப் பொறுப்பை ஏற்று இந்த மாநாட்டை நடத்துகிறது. எரிபொருள் பற்றாக்குறையோடு, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தைப் பற்றியும் விவாதிக்கப் போகிறார்கள்.

புதிய கூட்டமைப்பு

ஐரோப்பிய யூனியனைத் தாண்டிய ஒரு கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியும் இதில் நடக்கிறது. பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஆலோசனையில் உருவான "ஐரோப்பிய அரசியல் சமூகம்" என்ற அமைப்பைத் தொடங்கவிருக்கிறார்கள். தற்போது நடைபெறும் உச்சிமாநாட்டின் நிறைவுப் பகுதியாக இது இருக்கப் போகிறது. ஐரோப்பிய யூனியனின் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளைத் தாண்டி மற்ற ஐரோப்பிய நாடுகளை இணைக்கவே இந்த ஏற்பாட்டைச் செய்கிறார்கள்.

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் லிஸ் டிரஸ் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐரோப்பிய அரசியல் சமூகத்தின் அடுத்த கூட்டங்களில் ஒன்றை பிரிட்டனில் நடத்தலாம் என்று அவர் கோரிக்கை வைக்கவிருக்கிறார். ரஷ்யாவுக்கு எதிரான அணிதிரட்டலாகவே பலர் பார்க்கிறார்கன். சர்வதேச பொருளாதார மந்தம், எரிபொருள் பற்றாக்குறை, கொரோனா பெருந்தொற்று உள்ளிட்டவற்றை விவாதிப்பதாக இருந்தாலும், பெரும்பாலும் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான சச்சரவே பெரும் இடத்தைப் பிடிக்கப் போகிறது.

எதிர்ப்பு

விலையுயர்வு, எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகள் பல்வேறு நாடுகளில் மக்கள் மததியில் கடுமையான எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. அணி, அணியாகத் திரண்டு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். அரசுகளே ஆட்டம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி7 நாடுகளில் ஒன்றான இத்தாலியில் கடந்த மூன்று காலாண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பெரிய பொருளாதாரம் என்று அழைக்கப்படும் ஜெர்மனியில் பணவீக்கம் கடுமையான அதிகரித்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ரஷ்யாவுக்கு எதிராகத் தடைகளைப் போடுவதற்கு ஹங்கேரி எதிர்ப்பு தெரிவிக்கிறது. "தனது கால்களிலேயே ஐரோப்பா சுட்டுக் கொண்டது" என்று கூறும் அந்நாட்டின் பிரதமர் விக்டர் ஓர்பான், "இந்தத் தடைகளால் ரஷ்யாவை தங்கள் முன் மண்டியிடச் செய்ய முடியவில்லை. ஆனால் ஐரோப்பிய மக்கள் மேலும் ஏழைகளாகியுள்ளனர். அரசுகள் எடுத்த இந்த முடிவுக்கு, ஐரோப்பிய மக்கள் சுமையை சுமந்து கொண்டிருக்கிறார்கள்" என்று சுட்டிக்காட்டுகிறார். இந்த மாநாடு நடக்கப்போகும் பிரேக் நகரில் பெருந்திரள் பேரணிகளை மக்கள் நடத்தி வருகிறார்கள்.

;