world

img

கொத்துக் கொத்தாய் குண்டுவீச்சு.... தொடரும் இஸ்ரேல் வெறியாட்டம்... காஸாவில் 58 குழந்தைகள் உள்பட 198 பேர் பலி....

காஸா:
58 குழந்தைகளின் உயிர்களை கொத்து கொத்தாக குண்டுகளை வீசி பறித்தெடுத்து ள்ளது இஸ்ரேல்; குழந்தைகளுடன் மொத்தம்198 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. ஒருவாரம் ஆன பின்னரும் இஸ்ரேலின் ரத்த வெறி அடங்கவில்லை. இரண்டாவது வாரமாக இஸ்ரேலிய ராணுவம் மிகக் கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸாதிட்டு பற்றியெரிகிறது. உலக நாடுகளின் கடும் கண்டனத்தையும் பொருட்படுத்தாமல் அமெரிக்காவின் துணையோடு, பாலஸ்தீனத்தின் மீதான மற்றுமொரு கொடிய தாக்குதலாக இந்த யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது இனவெறி பிடித்த இஸ்ரேலின் பெஞ்சமின் நேதன்யாகு அரசு.

1948 இல் இஸ்ரேல் உருவானது முதல் பாலஸ்தீனத்திற்கு எதிரான நீண்டநெடிய யுத்தத்தை நடத்திக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, காஸா திட்டு மீது எண்ணற்ற தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களின் உயிர்களை பறித்திருக்கிறது. காஸா பகுதியில் தொடர்ச்சியாக இஸ்ரேல் நடத்தியஆக்கிரப்புகளின் விளைவாக, பல்லா யிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வேறுவழியின்றி வெளியேறினர். இவர்களில் சில ஆயிரம் பேர், ஜெருசலேம் நகரில் ஒரு பகுதியாக உள்ள ஷேக் ஜாரா மற்றும் சில்வான் ஆகிய இடங்களில் குடியேறியுள்ளனர். ஜெருசலேமின் கிழக்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. ஜெருசலேமுக்குள் பாலஸ்தீனர்கள் யாரும் இருக்கக் கூடாது என்று அட்டூழியமான முறையில் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலிய அரசு, ஷேக் ஜாரா, சில்வான்ஆகிய பகுதிகளிலிருந்து பாலஸ்தீனர்களை பலவந்தமாக வெளியேற்றியது. இதற்கு எதிராக காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் குரல் கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேலிய அரசு, திடீரென காஸா பகுதி மீது கொடூரமான ராணுவத் தாக்குதலை கடந்த வாரம் துவக்கியது.

குடியிருப்புகள், பள்ளிகள், அகதிகள் முகாம்கள், மருத்துவமனைகள், நீர்நிலைகள் என எதையும் விட்டுவைக்காமல் சற்றும்மனிதத் தன்மையற்ற முறையில் குண்டு மழை பொழிந்து வருகிறது. ஹமாஸ் இயக்கத்தின்முக்கிய தலைவர்களை குறிவைத்து நடத்தப்படுவதாக சொல்லப்படும் இந்த தாக்குதலில், ஹமாஸ் தலைவர்கள் மட்டுமல்ல, ஏதுமறியாத பிஞ்சுக் குழந்தைகள் உள்பட ஒரு வாரக் காலத்தில் மட்டுமே 198 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனர்களின் சொத்துக்கள் குண்டுவீசி தகர்க்கப்பட்டுள்ளன.

இந்த கொடிய தாக்குதலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்து வருகிறது. அரேபியபிரதேசத்தில் அமெரிக்காவின் ஏவலாளி யாகவே செயல்படும் இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து கண்டன அறிக்கை ஏதும் வெளியாகிவிடக் கூடாது என்பதில் ஜோ பைடன் அரசு, கவனமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை, இஸ்ரேலின் இந்த தாக்குதலை கண்டித்தும், உடனடியாக தாக்குதலை நிறுத்துமாறும் கடந்த வாரக் காலத்தில் 3 முறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை அல் ஜசீரா ஊடகம் தவிர,உலகின் வேறு எந்த ஊடகத்திலும் வெளியாகவிடாமல் அமெரிக்கா தடுத்து விட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.

எனினும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, இஸ்ரேலிய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மே 15 அன்று உலகின் 100 மாநகரங்களில் மாபெரும் போராட்டங்கள் நடந்துள்ளன. பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டக் காட்சிகள் உள்பட உலகம் முழுவதுமிருந்து ஆர்ப்பாட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. கடும் கண்டன அலைகள் எழுந்த போதிலும் இஸ்ரேலிய அரசு அடங்க மறுக்கிறது. திங்களன்று இரண்டாவது வாரமாக தனது தாக்குதலை தொடர்ந்த இஸ்ரேலிய ராணுவம் காஸா மீது இன்னும் கூடுதலாக கொத்துக் குண்டுகளை வீசியது. காஸாவில் உள்ள அல் ஜசீரா ஊடக மையம் உள்பட ஏராளமான கட்டிடங்கள் தீக்கிரையாகின.

;