world

img

முடங்கியது இலங்கை ‘பெட்ரோலும் இல்லை பணமும் இல்லை’

கொழும்பு, ஜூலை 5- கைவசம் எரிபொருள் இல்லாமல், அதை வாங்குவதற்கான பணமும் இல்லாமல் இலங்கை மீண்டும் முடங்கியது. ஒரு நாளுக்குத் தேவையான எரிபொருள் மட்டுமே இருப்பதால், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதை மேலும் நீட்டித்து உத்தரவிடுவதாக எரிபொருள் துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகரா அறிவித்துள்ளார். வெறும் 4 ஆயிரம் டன் பெட்ரோல் இருப்புதான் இருப்பதாகக் கூறிய அவர், இது ஒருநாள் தேவையை விடச் சற்றுக் குறைவானது என்று தெரிவித்திருக்கிறார். தலைநகர் கொழும்பு முழுவதும் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் எரிபொருளுக்காகக் காத்து நிற்கின்றன.

போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளதால் பள்ளிக்கூடங்களுக்குக் குழந்தைகளும், ஆசிரியர்களும் செல்ல முடியாமல் உள்ளனர். பள்ளிக்கூடங்கள் இழுத்து மூடப்பட்டன. ஜூலை 22 வரையில் எரிபொருள் பற்றாக்குறை இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்ததால் அடுத்த அறிவிப்புக்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பெற்றோர்கள் கூறுகிறார்கள். எரிபொருட்களை ஏற்றிக் கொண்டு அடுத்த கப்பல் ஜூலை 22 ஆம் தேதிக்குள் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். நான்கு மாத காலத்திற்கு கச்சா எண்ணெய் பெறுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. இது குறித்துச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரணில் விக்ரமசிங்கே, “எரிபொருள் பற்றாக்குறையால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்குப் பெரும் துயரத்தை விளைவித்திருக்கிறது.

டாலர் பற்றாக்குறைதான் இந்த நிலைமை உருவாவதற்குக் காரணமாகும். வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை மக்களிடம் பணம் அனுப்புமாறு கோரியிருக்கிறோம். இன்னும் சில நாட்களில் எரிவாயு வந்துவிடும். பெட்ரோல் வந்து சேர மேலும் சில நாட்கள் ஆகலாம். ஜூலை 22 அன்று ஒரு கப்பல் வருகிறது. அதற்கு முன்பே ஒரு கப்பலில் எரிபொருள் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையும் நடக்கிறது “ என்று குறிப்பிட்டார். பெட்ரோல் நிரப்பும் மையங்களுக்கு வெளியே நிற்கும் நீண்ட வரிசையைவிட, மையங்களில் அவ்வப்போது ஏற்படும் கைகலப்புகளே நிர்வாகத்திற்குக் கவலை அளிப்பதாக உள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையான உயர்ந்திருக்கின்றன. அரசுக்கெதிரான மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசின் முன்னால், “பெரும் சவால் இருக்கிறது. பணத்தைக் காண்பது பெரும் சவாலாக மாறியுள்ளது” என்று ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

;