பிப்ரவரி 9 முதல் 11 வரை பிரான்சில் நடந்த கடல்சார் முதல் உச்சிமாநாடு நம்பிக்கையூட்டும் பல உடன்படிக்கைகளுடன் நிறைவடைந்துள்ளது. மிதமிஞ்சிய மீன் பிடித்தல், கடலில் பிளாஸ்டிக் மாசைக் குறைத்தல், சர்வதேச கடல் நீர்ப்பரப்பை மேம்பட்ட முறை யில் பாதுகாத்தல் போன்ற இலட்சியங்களுடன் தொடங்கிய மாநாடு நல்ல முடிவுகளை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் முடிவடைந்துள்ளது. சுவாசிக்கும் ஆக்சிஜனில் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமாக கடல்களில் இருந்தே நமக்கு கிடைக்கிறது. இவை மனிதனின் மிதமிஞ்சிய சுரண்டலால் இன்று ஆபத்தானநிலையில் உள்ளது. காலநிலையும் கடலும் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் இரண்டல்ல, ஒன்றே.
பிரெஸ்ட்டில் நடந்ததென்ன?
27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், மற்ற 16 நாடுகள் இவ்வாண்டின் முடிவிற்குள் ஆழ்கடற் பரப்பை ஒழுங்குபடுத்த சர்வதேச உடன் படிக்கையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன. நாடுகளின் எல்லைக்கு அப்பால் இருக்கும் நீர்ப்பரப்பு மற்றும் அதன் உயிர்ப் பன்மயத் தன்மையின் பாதுகாப்பு தொடர்பான உடன் படிக்கை 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் கையெழுத்திடப்படும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயென் கூறியுள்ளார். சரியானநேரத்தில் கடல்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட நல்ல முடிவு இது என்று ஆழ்கடல் சூழல் அமைப்பின் (High Seas Alliance) பெகி காலஸ் வரவேற்றுள்ளார். 30 உலக நாடுகள் உருவாக்கியுள்ள 30x30 என்னும் உடன்படிக்கை யின்படி உலகின் 30% நில மற்றும் கடற்பரப்பை 2030ஆம் ஆண்டிற்குள் பாதுகாக்கப்பட்ட பகுதி யாக மாற்ற நடவடிக்கை எடுக்கத்தொடங்கி யுள்ளன. நாட்டின் தெற்கு மற்றும் அண்டார்டிக் பகுதியைச் சுற்றிலும் உள்ள கடற்பரப்பை உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடல்வள பாதுகாப்பு மண்டலமாக மாற்றியதுடன் பிரான்ஸ் தன் நாட்டின் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான கடற்பகுதியை பாதுகாத்துவருகிறது.
பிளாஸ்டிக் மாசுக் கட்டுப்பாடு
இம்மாநாட்டின் தொடர்ச்சியாக மார்ச் 2022இல் நியூயார்க் நகரில் நடைபெறவிருக்கும் ஐநா மாநாட்டில் 27 ஐரோப்பிய ஒன்றிய நாடு கள் மற்றும் 10 உலகநாடுகள் அணிசேர்ந்து பிளாஸ்டிக் கடல் மாசைக் குறைக்க பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் திட்ட மிட்டுள்ளன. இதற்கு அமெரிக்கா ஆதரவு தர முடிவு செய்துள்ளது. சுத்தமான கடல் (Clean Ocean Initiative) என்ற புதிய திட்டத்தின் கீழ் மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கி (E்BAD) ஐரோப்பிய முதலீட்டு வங்கி (EIBõ), பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடு களின் வளர்ச்சி வங்கிகளுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் கடலில் குவியும் 9 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க நடவடிக்கைகளைத் தொடஞ்கவுள்ளது. இதற்காக இந்நாட்டு வங்கிகள் 4 பில்லியன் ஈரோக்களை ஒதுக்கியுள்ளன.
பிளாஸ்டிக் வட்டப் பொருளாதாரம்
ஐநா சூழல் திட்டத்தின் (U N E P) ஒத்துழைப்புடன் மேலும் அரை டஜன் நாடுகள் பிளாஸ்டிக் பொருளாதாரத்தை வட்டப்பொரு ளாதாரமாக மாற்ற முடிவு செய்துள்ளன. சூழ லுக்கு நட்புடைய விதத்தில் பிளாஸ்டிக் பொருட் களின் உற்பத்தி, நுகர்வு, நீண்டகாலப் பயன்பாடு, மறுசுழற்சி, உயிர்ப் பன்மயத்தன்மைக்கு உகந்தமுறையில் வேறு பொருட்களாக மாற்றுதல், பரிமாற்றம் ஆகியவற்றை பிளாஸ்டிக் வட்டப்பொருளாதாரம் என்ற சொல் குறிக்கிறது. இச்சொல் முதலில் 1989இல் இயற்கை வளங்கள் பாதுகாப்பு பொருளாதாரம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் பயன்படுத்தப் பட்டது. எல்லாவகைப் பிளாஸ்டிக்குகளையும் 100% மறுசுழற்சி அல்லது மறு பயன்பாட்டு டையதாக மாற்றுவதே இதன் குறிக்கோள்.
மீன்களைக் காக்க உடன்படிக்கை
உலகக்கடல்களில் 50 சதவிகிதத்திற்கும் கூடுதலாக மீன்கள் சட்டத்திற்கு விரோதமாகவே பிடிக்கப்படுகின்றன. சட்டவிரோதமாகவே, ஒழுங்குமுறையற்றவிதத்தில் மீன் பிடித்தல் கடலின் மீன் வளத்தை சீரழிப்பதைத் தடுக்க ஆறு நாடுகள் சர்வதேச கடல்சார் கழகத்தின் (International Maritime Organisation IMO) கேப் டவுன் உடன்படிக்கையில் மீன் பிடித் தொழில் குறித்த விதிமுறைகளில் திருத்தங் களைக் கொண்டுவர முடிவுசெய்துள்ளன. பிடிக்கப்படும் மீன்கள் அதிகமாகக் கொண்டுவந்து சேர்க்கப்படும் துறைமுகங்களில் இதற்கான இரண்டு சட்டத் திருத்தங்களை செய்ய இவை உறுதியுடன் உள்ளன. 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் நாட்டுத் துறைமுகங்களுக்கும் அப்பால் இருக்கும் கடற்பரப்பில் நடைபெறும் சட்டவிரோத மீன் வேட்டையாடலைத் தடுக்க கண்காணிப்புப் பிரிவுகளை ஏற்படுத்த ஒப்புக்கொண்டுள்ளன.
கடல் அமைதி
கடலுக்கு அடியில் ஏற்படும் இரைச்சல் திமிங்கலங்கள் உட்பட பல கடல்வாழ் உயிரி னங்களின் வலசை மற்றும் அவற்றின் இனப் பெருக்கத்தைப் பெருமளவில் பாதிக்கிறது. இதைக் குறைக்க 22 பெரிய ஐரோப்பிய கப்பல் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இவை மேலும் கப்பல்கள் மூலம் ஏற்படும் கசடு, எண்ணெய் மற்றும் இதர கழிவுகளைக் குறைக்கவும் தீர்மானித்துள்ளன. உலகின் மிகப்பெரிய 18 துறைமுகங்கள் தங்கள் துறைகளில் வந்து குவியும் கழிவு களைக் குறைக்க நடவடிக்கை எடுத்துவரு கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் மத்திய தரைக் கடல் நாடுகளுடன் இணைந்து அப்பகுதியை 2025ஆம் ஆண்டிற்குள் குறைவான சல்பர் உமிழும் பிரதேசமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது.
நீலக் கார்பன் கூட்டமைப்பு
பிரான்ஸ் மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் கடலோரப் பிரதேசங்களைக் காக்க உத வும் நீல கார்பன் கூட்டமைப்பை உருவாக்கி யுள்ளன. இதன்படி கார்பனை அதிக அளவில் உறிஞ்சி சேகரிக்கும் உவர்நீர் பாசிகள், கடற்படுகையில் வளரும் புற்கள் மற்றும் அலை யாத்தித் தாவரங்களைக் காக்க நிதியுதவி செய்யப்படும். இதன் மூலம் கடலோரப்பகுதி களின் சூழலை அழிவில் இருந்து மீட்கமுடியும். நீலக் கார்பன் என்பது கடல் மற்றும் கடல்சார் சூழல் பிரதேசங்கள் உட்கிரகிக்கும் கார்பனைக் குறிக்கிறது. கடலோர வாழிடப் பாதுகாப்பு சேதப்படுத்தப்படும்போது அளவிடமுடியாத கார்பன் வளிமண்டலத்திற்கு மீண்டும் அனுப்பப்படுகிறது. இது காலநிலை மாற்றத்திற்குக் காரணமாகிறது.
இது ஒரு தொடக்கம் மட்டுமே
41 உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு ஒரு நல்ல தொடக்கம் மட்டுமே என்று பிரெஞ்சு அதிகாரிகள் கூறு கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பேற்றதன் ஆறு மாதகாலத்தைக் குறிக்க பிரெஸ்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கடல்சார் முதல் உச்சிமாநாடு நாம் வாழ ஒரே ஒரு பூமி மட்டுமே இருக்கிறது என்பதை உணர்த்து கிறது.
புதிய டிஜிட்டல் வசதி
காலநிலை மாற்றத்தின் போக்கைத் தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் கடல்கள் காப்பாற்றப்பட்டால் மட்டுமே பூமியும் நீடித்து நிலைத்திருக்கமுடியும். உலகின் 95% உயிர்ப் பன்மயத்தன்மையும் நிலைநிற்கும் ஆழ்கடற்பகுதிகளைக் காக்க ஐரோப்பிய ஒன்றியம் 2030ஆம் ஆண்டிற்குள் கடல்நீர் பாது காப்பு, ஆய்வு, ஆழ்கடல் விவர சேகரிப்பிற்கு உதவ டிஜிட்டல் வசதியை டிஜிட்டல் டிவின் ஓஷன் என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.
எல்லைகளுக்கும் அப்பால்
மனிதகுலத்திற்கு அளவற்ற நன்மை செய்துவரும் உலகின் 95% கடற்பரப்பும் நாடுகளின் எல்லைக்கு அப்பால் சர்வதேசக் கடல்நீரையே சார்ந்துள்ளது. இப்பகுதியின் உயிர்ப் பன்மயத்தன்மையைக் காக்க கூட்ட மைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதியே மிதமிஞ்சிய மனிதக் குறுக்கீடுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறது.
முடிவல்ல ஆரம்பம்
இம்மாநாடு ஒரு தலைமுறைகாலத்தில் நம்மை வாழவைக்கும் கடல்களை வாழவைக்க கிடைத்த அரிய வாய்ப்பு என்று சூழலிய லாளர்கள் நம்புகின்றனர். பிப்ரவரி 2022இல் நைரோபியில் நடைபெறவிருக்கும் ஐநா சூழல் அவை (UNEA) கூட்டத்தில் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் தொடர்பாக சர்வதேச உடன்படிக்கை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல் போக்குவரத்தில் கார்பன் உமிழ்வைக் குறைக்க பசுமை எரிபொருட்களைப் பயன் படுத்துவதை ஊக்குவிக்கும் முயற்சி களும் இதில் அடங்கும். 2050ஆம் ஆண்டிற்குள் கார் பன் உமிழ்வற்ற கப்பல் போக்குவரத்தை உலகம் முழுவதும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஐரோப்பிய ஒன்றியம் 1.5 பில்லியன் ஈரோவை ஒதுக்கி செயல்பட்டுவருகிறது.
கடலளவு தீர்வுகள்
பிரெஸ்ட் மாநாட்டின் தொடர்ச்சியாக மார்ச்சில் நியூயார்க் ஐநா மாநாடு, சீனா கனமிங் காப்15 மாநாடு, ஜூனில் லிஸ்பன் உலகக் கடல் மாநாடு மற்றும் எகிப்து காப் 27 காலநிலை உச்சிமாநாடு நடக்கவுள்ளன. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க கடலளவு தீர்வுகள் நம் முன் உள்ளன. பிரெஸ்ட் மாநாடு இதற்கான நல்ல தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கை இப்போது ஏற்பட்டுள்ளது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்