world

img

ஐந்து ஆண்டுகளில் ஊடக மற்றும் பதிப்பக துறையில் 78 சதவீத வேலையிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன : சிஎம்ஐஇ தகவல் 

இந்தியா : கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊடகம் மற்றும் பதிப்பகத் துறையில் , 78 சதவீதம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது .

இந்த கணக்கெடுப்பின்படி , இந்தியா முழுவதும் , ஊடகம் மற்றும் பதிப்புத்துறையில் , செப்டம்பர் 2016ல் 10.3 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலையிலிருந்தனர் . ஆனால் , தற்போது , ஆகஸ்ட் 2021-ன் நிலவரப்படி , 2.3 லட்சம் பேர் மட்டுமே இத்துறையில் வேலையில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது . 

மேலும் , 2016-2017 மற்றும் 2020-2021க்கு இடையில் 12 மாத ஒப்பீட்டைப் பார்க்கையில் , வேலைவாய்ப்பு வீழ்ச்சியானது 56 சதவீதமாகும் . இந்நிலையில் , 2016-2017 ஆம் ஆண்டு கணக்குப்படி ,  ஊடக மற்றும் பதிப்பக துறையில் 8,33,115 நபர்கள் இருந்தனர் . அதே நேரத்தில் , 2020-2021 கணக்குப்படி , 3,66,723 நபர்கள் மட்டுமே இத்துறையில் இருக்கின்றனர் .

சிஎம்ஐஇ ஆய்வுப்படி, இந்த வீழ்ச்சியானது , 2018ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழத் தொடங்கியது எனவும் , 2021 ஆம் ஆண்டில் , கொரோனா இரண்டாம் அலையின்போது அதிகமான மக்கள் ஊடகம் மற்றும் பதிப்பகத் துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது .

இருப்பினும் , இந்த வேலையிழப்புகள் மற்ற துறையிலும் நிகழ்ந்துள்ளதாகவும் சிஎம்ஐஇ தெரிவித்துள்ளது . அதாவது , கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நடத்திய ஆய்வின்படி , நாட்டில் 1.9 மில்லியன் நபர்கள் வேலையிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது . அதிலும் , முக்கியமாக விவசாய துறையில் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் . இதன்படி , விவசாயத் துறையில் வேலைவாய்ப்பானது ஆகஸ்ட் மாதத்தில் 8.7 மில்லியனாக குறைந்துள்ளதாகவும் , அதே நேரத்தில் , விவசாயம் அல்லாத மற்ற துறைகளில் வேலைவாய்ப்பானது 6.8 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது .

கடந்த ஏப்ரல் 2020ல் , கொரோனா தொற்று பாதிக்கப்பட்டபோது , இந்தியாவில் , சுமார் 126 மில்லியன் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன . இதில் , சுமார் 90 மில்லியன் தினசரி கூலிகள் என்பது குறிப்பிடத்தக்கது .

;