world

img

இயற்கை பேரழிவு: இந்தியாவுக்கு கடந்த ஆண்டு ரூ.65.33 லட்சம் கோடி இழப்பு: உலக வானிலை அமைப்பு தகவல்

இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டும் இயற்கைப் பேரழிவுகளான புயல், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவற்றால் ரூ.65.33 லட்சம் கோடி(87 பில்லியன் டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது என்று உலக வானிலை மையம் (World Meteoroligical Organization)  கணித்து அறிவித்துள்ளது.

ஆசியாவில் உள்ள காலநிலையின் சூழல் என்ற தலைப்பில் உலக வானிலை அமைப்பு நேற்று அறிக்கை வெளியிட்டது.அதில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. சார்பில் காலநிலை தொடர்பான மாற்றம் குறித்த மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வரும் 31-ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசியாவில் கடந்த ஆண்டு பருவநிலை மாற்றத்தால், ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளான புயல், வெள்ளம், வறட்சி, கடும் மழை ஆகியவற்றால் சீனா, இந்தியா, மற்றும் ஜப்பான் நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதில், சீனா அதிகபட்சமாக இயற்கைப் பேரழிவுகளால் 238 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளது. இந்தப் பொருளாதார ரீதியான சேத விவரங்களை ஆசியாவுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் (ஈஎஸ்சிஏபி) தயாரித்து வழங்கியுள்ளது.

இந்த அறிக்கையின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டுதான் ஆசியாவிலேயே மிகவும் வெப்பமான ஆண்டாக இருந்தது எனத் தெரிவித்துள்ளது.கடந்த 1981 முதல் 2010-ஆம் ஆண்டுவரை இருந்த வெப்பநிலையை விட 1.39 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளது.

பல நாடுகளில், வெயிலின் கொடுமை மோசமாக இருந்தது. அதில்,ரஷ்யாவின் வெர்கோயான்சாக் நகரில் எப்போதும் இல்லாத வகையில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.இது ஆர்டிக் பகுதியில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாகும்.

தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய கோடைகாலப் பருவமழை கடந்த ஆண்டு சிறப்பாக இருந்தது. அடிக்கடி வரும் புயல்கள், அதனால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவுகள், மனித உயிரிழப்புகள், இடப்பெயர்வு போன்றவை நிகழ்ந்தன.

கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் ஆசியாவில் இந்தியா, வங்கதேசத்தைத் தாக்கிய அம்பன் புயல் வலிமையான புயலாகக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 24 லட்சம் மக்கள் இந்தியாவில் இடம்பெயர்ந்தனர். 25 லட்சம் மக்கள் வங்கதேசத்தில் இடம் பெயர்ந்தனர்.தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அதிகமான மக்கள் வாழும் பகுதியில் புயல், மழை, வெள்ளம் ஆகியவை ஏற்படும்போது லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்கின்றனர். இது கடந்த ஆண்டு இந்தியா, சீனா, வங்கதேசம், ஜப்பான், நேபாளம், வியட்நாம்  நாடுகளில் பரவலாக நடந்தன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;