world

அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள்:

மெக்சிகோ சிட்டி, ஜூன் 23- பல்வேறு சீர்திருத்தங்கள் அடங்கிய தேர்தல் சட்டத்தை மெக்சிகோ உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதால் அந்நாட்டு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவில் ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார்(அம்லோ) தலைமையில் இடதுசாரிகள் ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் சீர்திருத்தங்களிலும் இந்த ஆட்சி கவனம் செலுத்தியது. கோடிக்கணக்கான டாலர்களை சேமிக்க வழி செய்யும் வகையிலும் இந்தத் தேர்தல் சீர்திருத்தங்கள் அமைந்திருந்தன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சீர்திருத்தங்களை மெக்சிகோ உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள் மீது நடைபெற்ற வாதங்களை அடுத்து, அதை விசாரித்த 11 நீதிபதிகளில் ஒன்பது பேர் சீர்திருத்தங்கள் நிராகரித்தும், இரண்டு பேர் ஆதரித்தும் தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள். தற்போதைய ஜனாதிபதி அம்லோவுக்கு இது பின்னடைவு என்று கூறப்பட்டாலும், இத்தகைய நிகழ்வுகளை நாட்டின் நலன்களுக்கு சாதகமாகவே அவர் மாற்றி வருகிறார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துக் கூறியிருக்கிறார்கள். தங்கள் நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையீடு செய்துள்ளது என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அம்லோ விமர்சனம் செய்திருக்கிறார். இந்தத் தீர்ப்பை எதிர்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் மோசடிகளைத் தடுக்க வழி செய்யும் பல்வேறு அம்சங்கள் இருந்த இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்திருந்தால் மெக்சிகோவின் ஜனநாயகம் பலமடைந்திருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.