world

img

தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல இத்தாலி அரசு தடை

ரோம், நவ.25-

பொதுமக்கள் அனைவரும் டிச.6 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் திரையரங்கம், உணவு விடுதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவின் முதல் அலையில் இத்தாலி நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இத்தாலியில் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. உலகம் முழுவதும் மக்கள் தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். இதனால், கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது. பெரும் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட கொரோனா 2வது அலையில் இருந்து, பெரும்பாலான நாடுகள் தப்பின. தற்போது கொரோனாவின் அடுத்த அலை குறித்த அச்சம் நீடிக்கும் நிலையில், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என இத்தாலி அரசு அறிவித்தது. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும், இத்தாலியில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மெத்தனம் காட்டியுள்ளனர்.

இதையடுத்து இத்தாலி அரசு தற்போது கடுமையான நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. “ வரும் டிச.6 ஆம் தேதிக்குள் மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 2வது தவனை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் திரையரங்கங்கள், உணவு விடுதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை. மேலும், பொது போக்குவரத்தை பயன்படுத்தவும் அனுமதியில்லை” என அந்நாட்டு பிரதமர் மரியோ டிராகி அறிவித்துள்ளார்.

மேலும், எல்லை நாடுகளிலும் நிலைமையை கண்காணித்து வருகிறோம். அந்நாடுகளில் இருந்து இத்தாலிக்கு வருபவர்கள், கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரே பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி தெரிவித்துள்ளார்.

;