world

img

உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்பாதீர்கள்!

ரோம்/மாட்ரிட், மே 27- ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான மோதலில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து, ஆயுதங்களை அனுப்பிக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டு மக்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். ரஷ்ய-உக்ரைன் மோதலால் ஒருதரப்பு ஆதரவளித்து ரஷ்யா மீது தடைகளையும் விதித்ததால் ஐரோப்பிய நாடுகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்தன. விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில் ஊதியம் உயரவில்லை. தங்கள் ஊதியங்களை பொருத்தமாக உயர்த்த வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இத்தாலியின் ரோம், ஸ்பெயினின் மாட்ரிட் ஆகிய இரு நகரங்களிலும் ஊதிய உயர்வு அளிக்கக் கோரியும், ஆயுதங்களை கப்பல்களில் ஏற்றி அனுப்புவதை நிறுத்தக் கோரியும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டங்கள் நடைபெற்றன. போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய அரசுகள் ஈடுபட வேண்டும் என்றும் குறைந்தபட்ச ஊதிய அதிகரிப்பு 300 யூரோக்கள் என்ற அளவில் இருக்க வேண்டும் என்றும் பேரணிகளில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதுபோன்ற பேரணிகள் இத்தாலியின் பல்வேறு நகரங்களிலும் நடந்துள்ளன. போக்குவரத்து மற்றும் பள்ளிக்கூடங்களின் பணிகள் ஆகியவை இந்தப் பேரணிகளால் பாதிக்கப்பட்டன. போர் வெறி பிடித்த கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது என்று பேரணியில் பேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் குறிப்பிட்டார். 2008 ஆம் ஆண்டில் தொடங்கிய சிக்கன நடவடிக்கை இன்னும் நிறைவு பெறவில்லை என்றும் சிலர் குற்றம் சாட்டினார்கள்.