ஏப்ரல் 1 தேதி அமெரிக்க தொழிற்சங்கங்களின் வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க நாளாக அமைந்தது. உலகின் மிகப்பெரிய வணிக சேவை நிறுவனங்களில் ஒன்றான அமேசானில் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திலும் தொழிற்சங்கம் தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றி அடைந்துள்ளன.
சர்வீஸ் எம்பிளாய்ஸ் இண்டர்நேஷனல் யூனியன் அமைப்பின் அங்கமாக ஸ்டார்பக்ஸ் ஒர்க்கர்ஸ் யுனைடெட் அமைப்பு சங்கங்கள் அமைப்பதற்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. முதன்முறையாக 2021 டிசம்பர் மாதம் நியூயார்க் மாகாணம் பஃபலோவில் நடைபெற்ற தேதலில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அடுத்து நடைபெற்ற 11 தேர்தல்களில் 10 தேர்தல்களில் அந்த அமைப்பு வெற்றி பெற்றுள்ளது.
ஸ்டார்பக்ஸ் நிறுவன வரலாற்றில் இத்தகைய வெற்றி இதுவே முதல் முறை. முன்னதாக அமேசான் நிறுவனத்திற்கு தொழிற்சங்கம் அமைப்பது தொடர்பான தேர்தலில் வெற்றி பெற்று தொழிலாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 2020 ஆண்டு கொரோனா பரவலின் போது பணியிடத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்று போராடியதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் கிறிஸ்டியன் ஸ்மால்ஸ் மற்றும் ஊழியர்கள் போராடியதன் விளைவாக தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், 55 விழுக்காடு ஊழியர்கள் தொழிற்சங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். உலகம் முழுவதும் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை கேட்க தொழிற்சங்கங்கள் வேண்டும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், ஆளும் வர்க்கங்கங்கள், பெரும் நிறுவனங்கள், தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் அமைப்பதை விரும்புவதில்லை.
இந்நிலையில்,உலகின் மிகப்பெரிய வணிக சேவை நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.