world

img

மருத்துவ உலகில் புதிய சாதனை: மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்திய மருத்துவர்கள்

அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்தப்பட்டுள்ளது. 
அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் (57). தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு மனித இதயத்தை மாற்று இதயமாக பெற உடல் ஒத்துழைக்கவில்லை.  இதனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாண்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இந்த நிலையில், பென்னட்க்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம், மருத்துவர்களால் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. பென்னட் உயிர்வாழ எத்தனை ஆண்டுகள் இந்த மாற்று இதயம் உதவும் என்று தெரியாது. ஆனால் மருத்துவ உலகில் மாற்று அறுவை சிகிச்சையில் இது ஒரு பெரும் சாதனையாக கருதப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது குறித்து புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் பார்ட்லி கிரிஃபித் கூறும்போது, “அமெரிக்காவில் மாற்று உறுப்பு இல்லாமல் தினசரி 17 பேர் இறக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மாற்று உறுப்பு சிகிச்சைகளுக்காக காத்திருக்கிறார்கள். எனவே, இந்த அறுவை சிகிச்சை மூலம் உலகளவில் நிலவும் மாற்று உறுப்பு தட்டுப்பாடுகள் குறைவதற்கான பாதையில் நாம் ஒருபடி முன்னெடுத்து வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அக்டோபர் 2021-ஆம் ஆண்டு, நியூயார்க்கில் பன்றியின் சிறுநீரகம், மூளை செயலிழந்த மனிதர் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. அவரது உடல் நிலையை 2 நாட்களுக்கு மேலாக மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில் பன்றியின் இதயம் மனிதருக்கு எந்தத் தடையுமின்றி நல்ல முறையில் செயல்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.