world

img

கொரோனாவை காட்டிலும் கொடியது பணவீக்கம்

வாஷிங்டன், நவம்பர்.24-

கொரோனாவை காட்டிலும் பணவீக்கம் தான் தங்களை கடுமையாக பாதித்து வருவதாக மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கர்களிடையே அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 70 சதவிகித மக்கள் அமெரிக்க நாடு மோசமான பொருளாதார நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அச்சம் தெரிவித்திருந்தனர். மேலும், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்று 10 மாதங்கள் கடந்து விட்ட போதிலும் பொருளாதாரத்தை மேம்படுத்த உருப்படியான எவ்வித நடவடிக்கையு ம் எடுக்கவில்லை என்றும் 60 சதவிகித மக்கள் தெரிவித்திருந்தனர்.  

இந்நிலையில், கடந்த நவம்பர் 17 முதல் 19 ஆம் தேதி வரை மீண்டும் ஒரு கருத்துக்கணிப்பை அந்நாட்டு ஊடக நிறுவனங்கள் மேற்கொண்டன. இதில் தங்களது நாட்டின் பணவீக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கோவிட் 19 என்கிற கொரோனா வைரசின் பாதிப்பை காட்டிலும் பணவீக்கம் தான் தங்களை கடுமையாக தாக்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

அதுவும், ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் எந்த வகையிலும் சரிந்து வரும் தங்கள் நாட்டு பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். இத்தகைய பணவீக்கம் காரணமாக எதிர்வரும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை விடுமுறைகளை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத சூழலுக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போதைய பணவீக்கத்தால் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாமல் போய்விடுவோமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் 77 சதவிகித அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

;