world

img

இல்லாத நாட்டுடன் ஒப்பந்தம் எப்படி?

சுற்றி வளைக்கும் கேள்விகள்

நியூஜெர்சி, மார்ச் 22- நடிகையுடன் பாலியல் தொடர்பு கள், பெங்களூரை அடுத்த பிடதி யில் பாலியல் ஆசிரம பலாத்கார சம்பவங்கள், மதுரை ஆதினத்தின் வாரிசு எனக் கூறி சுருட்ட முயற்சி உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை சம்ப வங்களுடன், பாலியல் வல்லுறவு, பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு களில் சிக்கி, தமிழ்நாடு - கர்நாடக மாநில காவல்துறை நெருக்கடி காரணமாக போலிச்சாமியார் நித்தியானந்தா 2019-ஆம் ஆண்டு நாட்டை விட்டே தப்பி ஓடினார்.

“கைலாசா” 

இந்தியாவை விட்டு ஓடிய நித்தி யானந்தா வடஅமெரிக்க கண்டம் அருகே, ஈக்குவடார் நாட்டுக்கு அருகே உள்ள ஒரு தீவை எல்லைகள் இல்லா கற்பனை தேசம் என்று கூறி, “கைலாசா” எனப் பெயரிட்டு,  தான் ஒரு தனிநாட்டை உருவாக்கி யுள்ளதாக கூறி அடிக்கடி செய்தி வீடியோக்களை வெளியிட்டு வரு கிறார். இதற்கென்று தனி இணைய தளம் (https://kailaasa.org/) ஒன்றை உருவாக்கி, உலக நாடு களின் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பது போல புகைப்படங்களை, பதிவுகளை இணையதளம் மட்டு மின்றி டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகின்றனர் கைலாசா ஆசிரமக் குழுவினர்.

ஐநாவில் கைலாசா

ஜெனீவாவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி ஐ.நா அமைப்பின் பொரு ளாதார, சமூக, கலாச்சார உரிமை கள் குழு கூட்டத்தில் “கைலாசா  குடியரசு” என்ற பெயரில் நித்தி யானந்தாவின் பிரதிநிதிகளாக பெண்கள் சிலர் கலந்துகொண்டனர். ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்டத் தில் எந்த அமைப்பை சேர்ந்தவர் களாக இருந்தாலும் பேச அனு மதிக்கிறது. இதைப் பயன்படுத்தி கைலாசாவை ஐநா அங்கீகரித்தது போல் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்ட நித்தியானந்தா, வழக்கம் போல தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டார். உலக ஊடகங்களில் இந்த விவகாரம் வேக மாக பரவியது.

கைலாசா அங்கீகரிக்கப்பட வில்லை : ஐநா விளக்கம் 

அடுத்த 24 மணிநேரத்தில் ஐநா  மனித உரிமைகள் உயர் ஆணை யர் அலுவலகத்தின் ஊடக அதிகாரி  விவியன் குவோக், “பொது விவா தங்கள் தலைப்பில் நடந்த நிகழ்ச்சி களில் ஆர்வமுள்ள எவரும் பங்கேற்க முடியும். ஐநாவின் இரு கூட்டங்களிலும் கைலாசா பிரதிநிதி கள் பதிவு செய்த கருத்துகள் சற்றும் பொருந்தாத வகையில் இருந்ததால் அவற்றை நிராகரித்துவிட்டோம்” என அறிவித்தார். இதன்மூலம் கைலாசாவை தனிநாடாக ஐநா அங்கீகரிக்கவே இல்லை என்பது நிரூபணமானது.

“சிஸ்டர் சிட்டிஸ்” ஊழல்

ஐநா சபை கைலாசாவை ஒரு  நாடாக அங்கீகரிக்கவில்லை என்பது  உலக அரங்கில் முக்கியச் செய்தி யாக பரவ, அமெரிக்காவின் 30 நக ரங்களுக்கு இது மிகவும் அதிர்ச்சிச் செய்தியாக மாறியது. காரணம், அமெரிக்காவின் 30 நகரங்களை “கைலாசா” ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. அமெரிக்க மக்கள் சமூகங்களுக்கும் மற்ற நாடுகளில் உள்ள சமூகங்களுக்கும் இடையே பல்வேறு கலாச்சாரங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக உரு வாக்கப்பட்டுள்ள “சிஸ்டர் சிட்டிஸ்” என்ற அமைப்பின் பெயரில் கைலாசாவுடன் அமெரிக்காவின் 30 மாநகர நிர்வாகங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டன.  நெவார்க் நகர மேயர் ரஸ்  ஜெ.பராக்கா மற்றும் கைலாசா பிரதி நிதி விஜயப்ரியா நித்தியானந்தா இரு வரும் கடந்த ஜனவரி மாதம் 12-ஆம் தேதி  ஒப்பந்தம் செய்தனர். இதன் மூலம் கைலாசாவை இறை யாண்மை பெற்ற நாடாக அமெரிக்கா  அறிவித்துள்ளதாக நித்தி சீடர்கள் பெருமிதம் தெரிவித்துக்கொண்டனர். நெவார்க் நகரத்தில் உள்ள சிட்டி ஹாலில் அந்நகர பிரதிநிதிகளுடன், கைலாசா பிரதிநிதிகள் கையெழுத்திடும் காட்சி கைலாசா இணைய தள வீடியோவில் வெளியாகியது.  கைலாசா குறித்த  ஐநா அறிவிப்புக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ள தாகவும், கைலாசா ஒரு உண்மை யான நாடு அல்ல என்பதை கண்டு பிடித்ததால் இந்த ஒப்பந்தம் ரத்து  செய்யப்பட்டுள்ளதாகவும் நெவார்க்  நகர மேயர் சமாளித்தார்.

30 அமெரிக்க நகரங்கள்

கைலாசாவுடன் இந்த ஒப்பந்தத் தில் கையெழுத்திட்ட நகரம் நெவார்க்  மட்டும் அல்ல; “கைலாசா” இணைய தளத்தின்படி அமெரிக்காவின் மேலும் 30 நகரங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. கைலாசாவுடன் “சிஸ்டர் சிட்டி” என்ற  பெயரில் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அமெரிக்க நகரங்கள் மேற்கே பசிபிக் கடற்கரை முதல் கிழக்கே அட்லாண்டிக் கடற்கரை வரை விரவிக் கிடக்கின்றன. வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில்லே நகரமும் அவற்றில்  ஒன்று. கைலாசா என்பது ஒரு கற்பனை தேசமே என்பது தெளிவாகி விட்ட நிலையில், இந்தியாவில் பாலியல் வழக்குகளில் தேடப்படும் நபரான நித்தியானந்தாவின் மோசடி வலையில் அமெரிக்க மாநகரங்களே  விழுந்தது எப்படி என்ற கேள்வி அந்நாட்டை உலுக்கி வருகிறது.

நெவார்க், ஜாக்சன்வில்லே நகரங்கள் சமாளிப்பு

கைலாசாவால் தாங்கள்  ஏமாற்றப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள மேயர் பராக்கா,  “நெவார்க் ஒரு மோசடிக்கு பலியாகி விட்டது” என்று தெரிவித்துள்ளார். “எங்கள் பிரகடனம் ஒன்றும் அங்கீ காரம் அல்ல. ஒரு விண்ணப்பத் திற்கான பதில்தான் அது. அந்த விண்ணப்பத்தில் இருந்த விவரங் களை நாங்கள் சரிபார்க்கவில்லை” என்று ஜாக்சன்வில்லே நகர நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

பிரான்ஸ், கினி நாட்டு நகரங்களுடனும் கைலாசா ஒப்பந்தம்

அமெரிக்க நகரங்கள் மட்டு மின்றி, பிரான்ஸ், கினீ, சியாரா  லியோன் உள்ளிட்ட பல நாடு களைச் சேர்ந்த நகரங்களுடனும் “கைலாசா” கலாச்சார பரிமாற்ற ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. அது குறித்த புகைப்படங்களும், செய்தி களும் கைலாசாவின் டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. ஐநா வுக்கான “கைலாசா” தூதர் விஜ யப்ரியா நித்தியானந்தா மரியாதை நிமித்தமாக கனடா, வங்கதேசம், காம்பியா உள்ளிட்ட பல நாட்டு  தூதர்களைச் சந்திக்கும் புகைப் படங்களும் அந்த பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தொகுப்பு : எம்.சதீஷ்