world

img

விண்வெளிக்கு முதன்முதலாக சென்ற அமெரிக்க பூர்வகுடி பெண்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா சார்பாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதன்முறையாக அமெரிக்கப் பூர்வகுடி பெண் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் நிக்கோல் மான். வயது(42). சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு நிக்கோல் மானுடன் மேலும் 3 பேர் சென்றுள்ளனர். அவர்கள் ஜான் கசாடா (அமெரிக்கா), கோய்ச்சி வாகடா (ஜப்பான்), அன்னாகிகினா (ரஷ்யா). இவர்கள் புதனன்று அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து ஸ்பேஸ்எக்ஸ்ஃபால்கன் எனும் விண்கலம் மூலம் புறப்பட்டனர். அந்த விண்கலம் சுமார் 29 மணிநேரத்தில் உரிய சுற்றுப்பாதையில் சென்றடைந்தது. நிக்கோல் மான் அமெரிக்க கடற்படையில் பணியாற்றி பல்வேறு விமானங்களை இயக்குவதில் அனுபவம் பெற்றிருக்கிறார். அவர் தமது பணிக்காலத்தில் ஆறு பதக்கங்களை பெற்றுள்ளார். இவர் இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் பணியாற்றியுள்ளார். மான் அமெரிக்காவின் ரவுண்ட் பள்ளத்தாக்கில் உள்ள செவ்விந்திய பூர்வகுடி இனங்களில் ஒன்றான வைலாகி இனத்தைச் சேர்ந்தவர்.

இந்த மக்கள் கல்வி நிலையங்களுக்கு செல்வது மிகவும் அரிதே. சமூகப் பாகுபாடு பாரபட்சங்களை இந்த மக்கள் எதிர்கொண்டே வருகின்றனர். 2017ஆம் ஆண்டில் வெள்ளை இன மாணவர்கள் 54 விழுக்காடு மேல்படிப்பை நிறைவு செய்துள்ளனர். ஆனால் பூர்வகுடி மக்களான அமெரிக்கர்கள் வெறும் 27 விழுக்காடு மட்டுமே அசோசியேட் பட்டம் அல்லது அதற்கு மேலான படிப்பை முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிக்கோல் மான் 2015ஆம் ஆண்டிலேயே விண்வெளி பயிற்சியை நிறைவு செய்துள்ளார் என்றாலும் ஏழு ஆண்டுகள் கழித்தே தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு சென்றுள்ளார். தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இவர்கள் செல்வதன் மூலம் அங்குள்ளவர்களின் எண்ணிக்கை 14ஆக உயரும். ஒருவாரம் கழித்து ஏற்கெனவே அங்குள்ளவர்களில் நான்கு பேர் பூமிக்கு திரும்புவர். இப்போது விண்வெளிக்கு சென்றுள்ள இவர்கள் 6 மாதங்கள் தங்கியிருந்து ஆய்வுப்பணியில் ஈடுபடுவார்கள். இவர்களது குழு 250 ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக நிக்கோல் மான் தெரிவித்துள்ளார். முப்பரிமாண அச்சு மனித செல்கள் முதல் தக்காளிகளை வளர்ப்பது, விண்வெளியில் நடைபயிற்சி மேற்கொள்வது ஆகியவையும் இவற்றில் அடங்கும்.

;