world

img

அமெரிக்கா : சராசரி வாழ்நாளில் கடும் சரிவு

வாஷிங்டன், டிச.27- கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சராசரி வாழ்நாள் சரிந்துள்ளது என்று அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மையங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பெருந்தொற்று அமெரிக்காவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பெரும்பாலான நாடுகளில் அதன் பாதிப்பு குறைந்த வேளையிலும், அமெரிக்காவில் அதன் தாக்கம் விலகவில்லை, இதுவரையில் பத்து கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதிகாரப்பூர்வ கணக்குப்படி 11 லட்சம் பேர் பெருந்தொற்றுக்குப் பலியாகியிருக்கிறார்கள். பெருந்தொற்றை அணுகுவதில் அமெரிக்க நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே பெருமளவில் மக்கள் பலியானதற்குக் காரணமாக  இருந்திருக்கிறது. அமெரிக்க நோய்த்தடுப்பு மையங்களின் புள்ளிவிபரங்கள்படி, சராசரி வாழ்நாள் 76.4 ஆண்டாக தற்போது இருக்கிறது.

1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இவ்வளவு குறைந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் இருந்தே இந்த சரிவு தொடங்கி விட்டது. 2019 ஆம் ஆண்டில் 78.8 ஆக இருந்த சராசரி வாழ்நாள், கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டிலேயே 77 ஆக சரிந்தது. தற்போது மேலும் சரிந்து 76.4 ஆண்டாக இருக்கிறது. 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இறப்புகள் பெருமளவில் அதிகரித்ததே இந்த சரிவுக்குக் காரணமாகும். இந்த மரணங்களுக்குப் பத்து காரணங்களை நோய்த்தடுப்பு மையங்கள் பட்டியலிட்டுள்ளன. இவற்றிற்குப் பெரும் காரணமாக கொரோனா பெருந்தொற்றுதான் இருந்தது என்றாலும், பல்வேறு துணை நோய்களும் பெருகிவிட்டன என்கிறார்கள். கொரோனா பெருந்தொற்றுதான் உலகம் முழுக்க கவலையளிக்கக்கூடியதாக மாறியது என்று உலக சுகாதாரக் கழகம் 2020 ஆம் ஆண்டிலேயே அறிவித்தது. அமெரிக்காவும் இதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. துணை நோய்கள் பெருகியதற்கும் கொரோனாவை நோக்கிதான் வல்லுநர்களின் விரல்கள் நீளுகின்றன.

அமெரிக்க நோய்த்தடுப்பு மையங்களின் வல்லுநர்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் இதய நோய்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 22 விழுக்காடு அதிகரித்தபோது, இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.3 விழுக்காடு அதிகரித்தது. துணை நோய்களைத் தாண்டி, தேவைக்கு அதிகமாக மருந்துகளை உட்கொண்டதால் ஏற்பட்ட மரணங்கள் 16 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. குழந்தைகள் பலி அதிகரிப்பு குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பலியும் பெருமளவில் அதிகரித்தே இருந்தது. 1 முதல் 4 வயது வரையிலான குழந்தைகளின் மரணங்கள் 10 விழுக்காடு அதிகரித்தது.25 முதல் 34 வயது வரையிலான இளைஞர்களின் மரணங்கள் 13 விழுக்காடு அதிகரித்தது. அமெரிக்காவில் சராசரி வாழ்நாளைப் பொறுத்தவரை,

பெண்களின் சராசரி கூடுதலாகவே இருக்கும். அவர்களின் சராசரி 79.3 ஆண்டாகவும், ஆண்களின் சராசரி 73.5 ஆகவும் குறைந்திருக்கிறது.  கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் இப்போதும் குறையவில்லை. டிசம்பர் 25 ஆம் தேதியன்று ஒரு வார சராசரி என்பது சுமார் 70 ஆயிரமாக இருந்திருக்கிறது. கலிபோர்னியா மாகாணத்தில்தான் அதிக அளவு உயிரிழந்திருக்கிறார்கள். இதுவரையில் 98 ஆயிரத்து 185 பேர் அந்த மாகாணத்தில் பெருந்தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். ஒட்டுமொத்த இறப்பிலும், தொற்று பாதிப்பிலும் 10 விழுக்காடு கலிபோர்னியாவில் இருந்திருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் டெக்சாஸ் மாகாணம் உள்ளது.