நாஜிக்கள் பாணியில் சல்யூட் அடித்த எலான் மஸ்கின் உருவபொம்மையை தலைகீழாக தொங்கவிட்டு இத்தாலிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த ஜன.20 அன்று அமெரிக்காவின் 47-ஆவது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார். அந்த விழாவில் அவரது ஆதரவாளரும், உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் பேசும் போது அங்கிருந்த மக்களை நோக்கி, ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் பாணியில் வணக்கம் தெரிவித்தார்.
அவரது இந்த செயல் கடும் சர்ச்சைகளையும், கண்டனங்களையும் எழுப்பியது.
இந்நிலையில், கடந்த ஜன.21 அன்று இத்தாலி நாட்டின் மிலான் பியாஸ்லே லொரெட்டோ எனும் இடத்தில் எலான் மஸ்க்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவரது உருவ பொம்பை தலைகீழாக தொங்கவிடப்பட்டது. இந்த கண்டன போராட்டத்தை நடத்தியதாக இத்தாலியை சேர்ந்த இடதுசாரி இளைஞர் அமைப்பான கம்பியாரே ரோட்டா பொறுப்பேற்றுள்ளது.
எலான் மஸ்க் உருவ பொம்மை தொங்கவிடப்பட்ட இடமானது இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஹிட்லரின் நெருங்கிய கூட்டாளியான இத்தாலி நாட்டின் சர்வாதிகாரி முசோலினி கொல்லப்பட்டு அவரது உடல் தலைகீழாக தொங்கவிடப்பட்ட இடமாகும்.
பாசிச கொள்கைகளை கடைபிடித்த முசோலினி கொல்லப்பட்டு தலைகீழாக தொங்கவிடப்பட்ட நிலையில், நாஜிக்கள் பாணியில் சல்யூட் அடித்த எலான் மஸ்க்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முசோலினியை போல எலான் மஸ்க்கின் உருவ பொம்மையை தலைகீழாக தொங்கவிட்டு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.