world

img

இந்தியாவின் தடுப்பூசிகளை திருப்பி அனுப்பும் தென்னாப்பிரிக்கா? குறைந்த தீர்வே தருவதால் எங்களுக்கு வேண்டாம்..!

புதுதில்லி:
இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், உலகின் பல நாடுகளுக்கும் இந்தியா தனது நாட்டில் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதனைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி சமீபகாலமாக பெருமைபேசி வந்தார்.

இந்நிலையில், இந்தியாவின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி தங்களுக்கு வேண்டாம் என்று தென்னாப்பிரிக்க நாடு திரும்பி அனுப்பியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.கடந்த வாரம்தான், இந்தியாவிலிருந்து சீரம் நிறுவனத்தின் 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. இந்த தடுப்பூசி பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் அதனை சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.இந்நிலையில், இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் முன்பாக அவற்றை தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது, தங்கள் நாட்டில் பரவி வரும் மரபணு மாற்றம் அடைந்த புதியவகை கொரோனாவுக்கு எதிராக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் குறைந்த அளவே பாதுகாப்பு வழங்குவதை அவர்கள் கண்டறிந்தனர்.

இதையடுத்து, கோவிஷீல்டு தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த தென்னாப்பிரிக்கா, இந்த தடுப்பூசிகளை நீங்களே திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று இந்தியாவின் சீரம் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை சீரம் நிறுவனத்தின்  பூனாவல்லா மறுத்துள்ளார்.