world

img

நம்பிக்கையில்லா தீர்மானம்- பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால், பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது.

பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்ட தால், ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சில நாள்களுக்கு முன்னதாக 2025-ஆம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, நிதி மசோதாவை நிறைவேற்றுவேன் என்று பிரதமர் பார்னியர் தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் பார்னியரின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமர் பதவியை பார்னியர் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜனாதிபதி இமானுவேல் நடத்தினார்.

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகளின் புதிய மக்கள் கூட்டணி அதிக இடங்களை வென்று இருந்தது. ஆனால் ஆட்சி அமைக்கும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. எனினும் மக்களின் தீர்ப்பிற்கு ஏற்ப பிரதமர் பதவியை இடதுசாரிகள் முன்மொழியும் வேட்பாளருக்கே கொடுக்க வேண்டும் என புதிய மக்கள் முன்னணி வலியுறுத்தி வந்தது.

ஆனால், ஜனாதிபதி மக்ரோன், இடதுசாரிகள் கையில் அதிகாரம் சென்று விடக்கூடாது என, தீவிர வலதுசாரிகளுடன் ரகசியக் கூட்டணி வைத்து செயல்பட்டார். இடதுசாரிகள் அமைச்சர்களாக பங்கெடுக்கும் அமைச்சரவையை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என தீவிர வலதுசாரியான லீ பென்னின் நேசனல் ரேலி கட்சியினர் வெறுப்பைக் காட்டி வந்தனர்.

தேர்தல் முடிந்து  3 மாதங்களுக்கு பிறகு மைக்கேல் பார்னியரை, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் பிரதமராக நியமித்தார்.

அப்போதே, இது மக்கள் அளித்த தேர்தல் முடிவை திருடும் செயல் என பிரான்ஸ் அன்பவ்டு(LFI) எனும் இடதுசாரிக் கட்சியின் ஜூன் –லூக் மெலன்சோன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், பிரதமராக பதவியேற்று மூன்று மாதங்களிலேயே அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் வரலாற்றில் முதல்முறையாக அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்று ஆட்சி கவிழ்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.