தென்ஆப்பிரிக்க தூதரை வெளியேற்றியது அமெரிக்கா
அமெரிக்காவுக்கான தென்ஆப்பிரிக்க தூதர் இப்ராகிம் ரசூலை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபி அமெரிக்காவையும் டிரம்ப்பையும் வெறுக்கின்ற இனவெறியை தூண்டுகின்ற நபர் ரசூல் என கூறியுள்ளார். தென்ஆப்பிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்பின் ஃபிரி, ராஜிய ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனர்களுக்கு கொடுப்பதற்காக காத்திருக்கும் உணவு
63,000 மெட்ரிக் டன் உணவுப்பொருட்கள் காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு கொடுப்பதற்காக வாகனங்களில் காத்துக் கொண்டுள்ளன. மார்ச் 1 முதல் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் பாலஸ்தீனர்களுக்கான ஐநா உதவி வாகனங்களை தடுத்து விட்டது. இந்த உணவு சுமார் 11 லட்சம் மக்களுக்கு இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு வழங்க போதுமானது என ஐநா தெரிவித்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் முழுமையாக ஒத்துழைக்க மறுக்கின்றது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
‘உலக நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவிற்கு அழுத்தம் தர வேண்டும்’
உக்ரைன்-ரஷ்யா 30 நாள் போர்நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்க வேண்டும். அதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் “அழுத்தம் கொடுக்க” வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பேசியுள்ளார். சனிக்கிழமையன்று உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இணையவழி கூட்டம் ஒன்றை அவர் நடத்தினார். புடின் அமைதியைப் பற்றி யோசித்தால் அவர் உக்ரைன் மீதான தனது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராக ஐரோப்பாவில் பிரச்சாரம்
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தகப் போரை டிரம்ப் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்கப் பொருட்களை நிராகரித்து மாற்றுப்பொருட்களை பயன்படுத்தும் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது. இதற்கான பிரச்சாரம் சமூக வலைத்தளம் வாயிலாக நடைபெற்று வருகின்றது. சமூக வலைதள பக்கம் மூலமாக பிரபலமான அமெரிக்க நிறுவனப் பொருட்களுக்கு மாற்றாக எந்தெந்த உள்ளூர் நிறுவனப் பொருட்களை பயன்படுத்தலாம் என்பது பற்றிய குறிப்புகள் பகிரப்படுகின்றன.
குர்ஸ்க் பகுதியை முழுமையாக மீட்க ரஷ்ய ராணுவம் முயற்சி
உக்ரைன் ஆக்கிரமித்துள்ள ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை முழுமையாக மீட்கும் வகையில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 இல் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை ராணுவ நடவடிக்கை மூலமாக ஆக்கிர மித்தது. தற்போது இப்பகுதியில் சுமார் 80 சதவீதமான பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப் பற்றிவிட்டது. முழுப்பகுதியையும் கைப் பற்றும் வகையில் தீவிரமான டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றது.
41 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு தடை விதிக்க டிரம்ப் திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பல நாடுகளின் மீது அதிகப்படியான வரிகளையும் தடைகளையும் விதித்து வருவதன் ஒரு பகுதியாக தற்போது பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 41 நாடுகளைச் சேர்ந்த குடி மக்களுக்கு கடுமையான பயணத் தடைகள் விதிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய தடை குறித்த குறிப்பாணையில் மொத்தம் 41 நாடுகள் மூன்று தனித்தனி குழுக்களுக்காக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் குழுவில் ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா, கியூபா, வடகொரியா, லிபியா, சோமாலியா, சூடான், வெனிசுலா, ஏமன் ஆகிய 10 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்நாடுகளின் குடிமக்கள் விசா இடைநீக்கத்தை (visa suspension) முழுமையாக எதிர்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குழுவில் எரித்ரியா, ஹைதி, லாவோஸ். மியான்மர், தெற்கு சூடான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளின் குடிமக்கள் முழுமையான விசா இடைநிறுத்தத்தை எதிர்கொள்ள மாட்டார்கள்.
ஆனால் சுற்றுலா, மாணவர் விசா பிற புலம்பெயர்வு விசாக்களை இடைநிறுத்தப்படும் என கூறப்படுகின்றது. மூன்றாவது குழுவில் பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 26 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் 60 நாட்களுக்குள் குறைபாடுகளை சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இல்லை என்றால் அந்நாடு களின் குடிமக்களுக்கு விசா வழங்குவதும் நிறுத்தி வைக்கப்படும். அதற்கான நடைமுறைகளையும் பரிசீலித்து வருவதாக அந்தக் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தப் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் அல்ல எனவும் இதில் எந்த மாற்றங்கள் வேண்டுமானா லும் நடக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புதிய தடைகளுக்கு அமெரிக்க வெளி யுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபி அல்லது வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்த தடைகள் குடியேற்ற கட்டுப் பாடுகளின் ஒரு பகுதி என கூறப்படுகின்றது. இந்த புதிய தடைகளுக்கு முன் தேசிய பாது காப்பு என்ற பெயரில் அமெரிக்காவுக்கு வரு கின்ற எந்த ஒரு வெளிநாட்டினரையும் தீவிரமான பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஜன 20 அன்று நிர்வாக உத்தரவினை டிரம்ப் பிறப்பித்திருந்தார்.டிரம்ப் முதல் முறை ஜனாதிபதியாக இருந்த போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 7 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு தடை விதித்திருந்தார்.