அமெரிக்கா : பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுக்குள் கொண்டு வர , ஐக்கிய நாடுகளுக்கு வருடத்திற்குச் சராசரியாக நூறு பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார் .
அமெரிக்காவில் தற்போது 76வது ஐக்கிய நாடுகள் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதில் 193 உறுப்பு நாடுகள் கலந்துகொண்டுள்ளனர் . இந்த ஐ.நா சபை பொதுக்குழுக் கூட்டமானது ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை வகுக்கும் முக்கிய அமைப்பாகும் . இந்த கூட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது . அதில் , இன்று முதல் செப்டம்பர் 27 வரை தீர்மானங்களை இயற்றும் வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி , முதல் நாளான இன்று , உலகத்தில் முக்கிய பிரச்சனையாகக் கருதப்படும் காலநிலை மாற்றத்தைப் பற்றிக் கலந்துரையாடினர் . இதில் , கார்பன் உமிழ்வால் ஏற்படும் பாதிப்பை மனித வாழ்வாதாரத்துக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சிறப்பு ஆலோசகர் செல்வின் ஹார்ட் கூறினார் .
இதுகுறித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் , கார்பன் உமிழ்வைக் கட்டுக்குள் கொண்டுவர ஐக்கிய நாடுகளுக்கு வருடத்திற்கு நூறு பில்லியன் தேவைப்படுவதாகக் கூறினார் . மேலும் , அவர் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்படும் நிதி போதாது எனவும் , உலக நாடுகளிடம் இருந்து நன்கொடை தேவைப்படுகிறது எனவும் கூறியுள்ளார் .
இதனால் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு , பொருளாதாரத்தில் முன்னோக்கி இருக்கும் நாடுகள் , வருடத்திற்கு நூறு பில்லியன் டாலர்கள் நன்கொடையாகத் தருவதாக உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .