உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க், லுகான்ஸ்க், சப்பரோசியே மற்றும் கெர்சோன் ஆகிய நான்கு பிராந்தியங்களின் குடிமக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் ரஷ்யாவுடன் இணைய சமீபத்தில் தீர்மானித்தனர். உக்ரைன்-ரஷ்யப் போரில் இது முக்கிய திருப்புமுனை ஆகும். இதற்கான ஒப்பந்தம் அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளுக்கும் ரஷ்ய அரசுக்கும் இடையில் 2022 அக்டோபர் 5 அன்று கையெழுத்தான போது, ரஷ்ய ஜானதிபதி விளாடிமிர் புடின் ஒரு நீண்ட உரையை ஆற்றினார். அதன் சுருக்கமான மொழியாக்கம் கீழே தரப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் பின்னடைவுக்கு பின்னர் ரஷ்யா, முதலாளித்துவ மேற்குலகத்தின் ஒரு பகுதியாகவே இருக்க விரும்பியது; ஆனால் மேற்குலகமோ ரஷ்யாவைச் சிதைக்க முயன்றது. தமது சொந்த அனுபவத்தின் மூலம் ரஷ்ய அரசியல்வாதிகள் மேற்குலகத்தின் சூழ்ச்சிகளை உணர்ந்துள்ளனர். அதன் வெளிப்பாடாகவே புடினின் இந்த உரை அமைந்துள்ளது.
ரஷ்ய குடிமக்களே/ டோனட்ஸ்க், லுகான்ஸ்க், சப்பரோசியே மற்றும் கெர்சோன் பிரதேச குடி மக்களே! ரஷ்ய நாடாளுமன்றத்தின்உறுப்பினர்களே! டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் குடியரசு மக்களும் சப்பரோசியே மற்றும் கெர்சோன் பகுதி மக்களும் பொது வாக்கெடுப்பு மூலம் ரஷ்யாவுடன் இணைவது என முடிவெடுத்துள்ளனர். 90சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ரஷ்யாவுடன் இணைவது என மிகத்தெளிவான விருப்புரிமையை வெளிப்படுத்தியுள்ளனர். இது பல லட்சக்கணக்கான மக்களின் விருப்புரிமை! இன்று இந்த இரு குடி யரசுகளும் மற்றும் இரு பகுதிகளும் ரஷ்யாவுடன் இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ரஷ்ய நாடாளுமன்றமும் அரசியல் சட்டம் மூலம் இதனை ஆதரிக்கும் என நம்புகிறோம். இது அந்த மக்களின் பிரிக்க முடியாத உரிமை மட்டுமல்ல; சம உரிமை குறித்தும் மக்களின் சுய நிர்ணய உரிமைகுறித்தும் முன் வைக்கின்ற ஐ.நா.சபையின் முதல் விதிக்கு முற்றிலும்பொருந்தக்கூடியது.
பேச்சுவார்த்தைகளுக்கு தயார்!
கடந்த 8 ஆண்டு காலமாக டோன்பாஸ் மற்றும் சப்பரோசியே, கெர்சோன் பகுதி மக்கள் துப்பாக்கி குண்டுகளையும் தடைகளையும்; மேலும் இனப்படுகொலை யையும் சந்தித்தனர். உக்ரைன் ஆட்சியாளர்கள் ரஷ்யாவுக்கு எதிராக வெறுப்பை விதைக்க முயன்றனர். ரஷ்ய அம்சம் ஒவ்வொன்றையும் அழிப்பதற்கு முனைந்தனர். பொது வாக்கெடுப்பின் பொழுதும் இந்த பகுதிகளில் குண்டு மழை ஏவப்பட்டது. பள்ளி ஆசிரியர்களும் தேர்தல் பணியாளர்களும் கொல்லப்பட்டனர். தமது விருப்புரிமையை வெளிப்படுத்த முன்வந்த லட்சக்கணக்கான மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். எனினும் இந்த மிரட்டல்களையெல்லாம் மீறி டோனட்ஸ்க் லுகான்ஸ்க் குடியரசு மக்களும் சப்பரோசியே மற்றும் கெர்சோன் பகுதி மக்களும் பொது வாக்கெடுப்பில் தைரியமாக பங்கேற்று தமது முடிவைவெளிப்படுத்தியுள்ளனர். உக்ரைன் ஆட்சியாளர்களும் அவர்களை இயக்குகின்ற மேற்கத்திய எஜமானர்களும் நான் சொல்லும் இந்த செய்தியை கவனத்துடன் கேட்குமாறு கோருகிறேன்: டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் குடியரசு மக்களும் சப்பரோசியே மற்றும் கெர்சோன் பகுதி மக்களும் எங்களின் -அதாவது ரஷ்யாவின் குடி மக்களாக என்றென்றும் ஆகிவிட்டனர்.
உக்ரைன் ஆட்சியாளர்கள் 2014ஆம் ஆண்டிலிருந்து திணித்த போரை உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டும் என நான் வேண்டுகிறேன். நாங்கள் பேச்சு வார்த்தைக்கு தயார். ஆனால் டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் குடியரசுகள் மற்றும் சப்பரோசியே கெர்சோன் பகுதிகள் குறித்து நாங்கள் பேச மாட்டோம். அவர்கள் எங்களுடன் இணைந்து விட்டனர். அவர்களை ஒரு போதும் கைவிட மாட்டோம். இன்றைய உக்ரைன் ஆட்சியாளர்கள், இந்த மக்கள் வெளிப்படுத்திய விருப்புரிமையை மதிக்க வேண்டும். அது ஒன்றுதான் சமாதானத்துக்கு வழி. புதிதாக எங்களுடன் இணைந்துள்ள பகுதிகள் உட்பட எங்களது மண்ணை, எங்களிடம் உள்ள அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி காப்போம். எங்களது மக்களின் பாதுகாப்புக்காக சாத்தியமான அனைத்தையும் செய்வோம். போரில் அழிந்த அனைத்து நகரங்களையும் கிராமங்களையும் நாங்கள் நிச்சயமாக புனரமைப்போம். வீடுகள்/பள்ளிகள்/மருத்துவ மனைகள்/தொழிற்கூடங்கள்/உள்கட்டமைப்புகள் அனைத்தையும் புதிதாக உருவாக்குவோம். சமூக பாதுகாப்பு/ ஓய்வூதியம்/கல்வி முறைகள்/மருத்துவ பாதுகாப்பு மற்றும் ராணுவ பாதுகாப்பு என எல்லாவற்றையும் மீண்டும் உருவாக்குவோம். புதியதாக எங்களுடன் இணைந்த பகுதிகளுக்கு ரஷ்யா முழுமையுமே பக்கபலமாக நிற்கும்.
சிலிர்த்தெழுந்த ரஷ்யா
நமது எதிரிகள் எதற்காக நம்மை அழிக்க நினைக்கின்றனர் என்பதையும் இந்த போர் மற்றும் நெருக்கடியை பயன்படுத்தி கொள்ளை லாபம் எப்படி ஈட்டு கின்றனர் என்பது குறித்தும் பேச விரும்புகிறேன். உக்ரைனில் உள்ள நமது சக தேசபக்தர்களும் சகோதரர்களும் சகோதரி களும் மேற்கத்திய ஆட்சியாளர்கள் தங்களுக்கு விரோதமாக என்ன கொடும் செயல்கள் செய்தனர் என்பதை தமது சொந்த கண்களால் பார்த்தனர். இத னைத்தான் மனித குலம் அனைத்துக்குமே அவர்கள் செய்யத் துணிகின்றனர். அந்த மேற்கத்திய ஆட்சியாளர்கள் இங்கே உக்ரைனில் தமது முகமூடிகளைக் கழற்றிவிட்டு தமது கொடூரமான சுயரூபத்தை வெளிப்படுத்தினர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு நாம் அனைவரும் - ஒட்டுமொத்த உலகமும் தமது கட்டளைகளுக்கு கீழ் படிய வேண்டும் என மேற்கத்திய ஆட்சியாளர்கள் முடிவு செய்தனர். 1991க்கு பிறகு அந்த அதிர்ச்சியிலிருந்து ரஷ்யா ஒரு போதும் மீளாது எனவும் மேலும் மேலும் சிதறுண்டு போகும் எனவும் அவர்கள் எண்ணினர். கிட்டத்தட்ட அவர்கள் நினைத்தது போலவே நடந்தது. அந்த 90களின் கொடுமையை - வறுமை/ நம்பிக்கையின்மை/ நெருக்கடிகளை நாம் எப்படி மறக்க இயலும்? ஆனால் ரஷ்யா தன்னை புதுப்பித்துக்கொண்டது; சிலிர்த்தெழுந்தது; இந்த உலகில் தனக்கு உரித்தான இடத்தை மீண்டும்அடைந்தது. அதே சமயத்தில் மேற்குலகம் ரஷ்யாவை எப்படித் தாக்குவது; எப்படி பலவீனப்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்தியது. நம்மை வறுமையில் தள்ளி காணாமல் போகச்செய்வதற்கான கனவைக் கண்டது. பல இயற்கை வளங் களைக் கொண்ட ஒரு தேசம், மற்றவர்களின் கட்டளைக்கு அடிபணியாமல் வாழ வேண்டும் என நினைக்கும் மக்களைக் கொண்ட ஒரு தேசமாக ரஷ்யா நீடிக்கிறது என்பது மேற்கத்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு பெரிய நெருடலாகவே இருந்தது. அப்படி ஒரு தேசத்தை அவர்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.
நவீன காலனிய முறையைப் பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வதற்கு மேற்குலகம் தயாராக உள்ளது. தனது டாலர் மற்றும் தொழில்நுட்ப ஆளுமையை கருவியாகக் கொண்டு உலகைக் கொள்ளையடிக்க அவர்கள் தயங்குவது இல்லை. எனவேதான் சுயேச்சையாக இருக்க விரும்பும் அரசுகளை; தமது சொந்தப் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க விரும்பும் தேசங்களை தமது கட்டுப்பாடுக்குள் கொண்டு வர முயல்கின்றனர். நமது இறையாண்மையைக் கை விட்டு அமெரிக்காவிடம் சரணடைய வேண்டும் என அவர்கள்எதிர்பார்க்கின்றனர். சில தேசங்களின் மேல்தட்டு ஆளும் வர்க்கங்கள் அமெரிக்காவுக்கு அடிபணிய தாமாகவே முன்வருகின்றனர். மற்றும் சிலர் அச்சுறுத்தப்படுகின்றனர்; கையூட்டு தரப்படுகின்றனர். இது எதுவும் பலிக்கவில்லை எனில் அவர்கள் தேசங்களை அழிக்கவும் பேரழிவுகளை உருவாக்கவும் பயங்கரவாதிகளை உருவாக்கவும் தயங்குவது இல்லை. நவீன காலனிகளையும் அரைக்காலனிகளையும் ஏற்படுத்த வும் தயங்குவது இல்லை. தமது லாபக் கொள்ளை கிடைக்கும் வரை அவர்கள் இந்த தேசங்களில் என்ன கொடூரம் நடந்தாலும் கவலைப்படுவது இல்லை.
ஒப்பந்தங்களை மறுக்கும் மேற்குலகம்
மீண்டும் நான் அழுத்தமாக குறிப்பிட விரும்புகிறேன். இந்த ‘கூட்டு மேற்குலகின்’ பேராசை மற்றும் கட்டுப்பாடற்ற அதிகாரம் வேண்டும் எனும் ஆணவம்தான் ரஷ்யாவுக்கு எதிராக பல்முனை போரைத் திணித்துள்ளது. அவர்கள் நமது சுதந்திரத்தை விரும்பவில்லை; நம்மை காலனியாக ஆக்க முனைகின்றனர். சமமான ஒத்துழைப்பை அவர்கள் நாடவில்லை; ஆனால் நம்மிடமிருந்து அனைத்தையும் திருட முயல்கின்றனர். நம்மை ஒரு சுதந்திரமான சமூகமாக அவர்கள் பார்க்க விரும்பவில்லை; மாறாக ஆன்மாக்களை இழந்த அடிமைக் கூட்டமாகவே நம்மை பார்க்கின்றனர். அவர்களுக்கு நமது சிந்தனையும் தத்துவமும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவேதான் நமது தத்துவவாதிகளை அவர்கள் ஆக்கிரமிக்கின்றனர். நமது பண்பாடும் கலையும் அவர்களுக்கு ஆபத்தாக உள்ளது. எனவேதான் அவற்றை தடை செய்கின்றனர். நமது வளர்ச்சியும் வளமும் அவர்களை கிலி கொள்ளச் செய்கிறது. போட்டி வளர்கிறது. அவர்களுக்கு ரஷ்யா தேவை இல்லை. ஆனால் நமக்கு ரஷ்யா தேவைப்படுகிறது.
உலகை ஆள நினைத்த அவர்களது கனவை நமது மக்கள் துணிவுடனும் உறுதி யுடனும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தகர்த்துள்ளனர் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். ரஷ்யா எப்பொழுதும் ரஷ்யாவாகவே இருக்கும். நமது விழுமியங்களையும் தாய் மண்ணையும் பாதுகாப்பதை நாம் தொடர்வோம். தாங்கள் எந்த தவறு செய்தாலும் தம்மை எவரும் தண்டிக்க முடியாது எனும் ஆவணத்துடன் மேற்குலகம் நடந்து கொள்கிறது. உலகப் பாதுகாப்பு குறித்த முக்கியமான ஒப்பந்தங்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படுகின்றன. உயர்மட்ட தலைவர்களிடையே உருவான ஒப்பந்தங்கள் உண்மை அல்ல என அறிவிக்கப்படு கின்றன. நமது முந்தைய தலைவர்களை அவர்களது வழிக்கு கொண்டு வந்த பின்னர், ரஷ்யாவை நோக்கி நேட்டோ விரிவாக்கம் செய்யப்படாது என அளிக்கப்பட்ட வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. ஏவுகணைகளுக்கு எதிரான ஒப்பந்தங்கள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. சட்டவிதிகளுக்கு உட்பட்ட ஒரு சமூக முறைக்காகவே மேற்குலகம் நிற்கிறது என கூறப்படுகிறது. ஆனால் அந்த சட்டவிதிகள் என்ன? யார் அதனை உருவாக்கினார்கள்? யாரிடம் கருத்து கேட்கப்பட்டது? இது முற்றிலும் முட்டாள்தனமானது; ஏமாற்று வேலை; இரட்டை வேடம் கொண்டது. இது முட்டாள்களுக்காக உருவாக்கப்பட்டது. ரஷ்யா ஒரு மகத்தான நூற்றாண்டு சக்தி! ஒரு சிறந்த நாகரிகம் கொண்ட தேசம்! மேற்குலகின் பொய்யான, நியாயமற்ற விதிகளுக்கு உட்பட்டு ரஷ்யா செயல்படாது.
இந்தியா கொள்ளை அடிக்கப்பட்டது- சீனா மீது போதை திணிக்கப்பட்டது
இந்த மேற்குலகம்தான் எல்லைகளை மீறக்கூடாது எனும் கோட்பாட்டை காலில் போட்டு நசுக்கியது. எவருக்கு சுய நிர்ணய உரிமை உள்ளது; எவருக்கு இல்லை என அவர்கள் தீர்மானிக்கிறார்கள். எனவேதான் டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் குடியரசு மக்களும் சப்பரோசியே மற்றும் கெர்சோன் பகுதி மக்களும் முன்வைத்த சுய நிர்ணய உரிமை அவர்களுக்கு ஆத்திரத்தை உருவாக்குகிறது. இது பற்றிப் பேச அவர்களுக்கு எந்த அருகதையும் துளிகூட கிடையாது. மேற்கத்திய மேல் தட்டினர் தேசங்களின் சுயசார்புத்தன்மையையும் சர்வதேச சட்டங்களையும் மட்டும் மீறுவது இல்லை; அவர்களின் மேலாதிக்கம், சர்வாதிகார இன ஒதுக்கல் அணுகுமுறைகளைக் கொண்டது. உலகை தமது அடிவருடியாக மாற்ற அப்பட்டமாக அவர்கள் முயல்கின்றனர். அவர்களுடன் உடன்படாதவர்களை காட்டுமிராண்டிகள் எனவும் கொலைகாரர்கள் எனவும் முத்திரை குத்துகின்றனர். அவர்கள் எப்பொழுதும் காலனிய அடக்குமுறை எண்ணம் படைத்தவர்களாகவே உள்ளனர்.
இத்தகைய இன ஒதுக்கலை அல்லது மோசமான அரசியல் தேசியத்தை நாம் ஒரு போதும் ஏற்பது இல்லை. ரஷ்ய விழுமியங்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்படுகிறதே! அது இன ஒதுக்கல் இல்லாமல் வேறு என்ன? தமது நாகரிகமும் நவீன தாராளமய கலாச்சாரமும்தான் உலகுக்கு ஒரே மாடல் என மேற்குலகம் கூறுகிறது. இதனை ஏற்க முடியாது. மேற்குலகம் மத்திய காலத்தில் தனது காலனியக் கொள்கைகளை துவக்கியது. பின்னர் அடிமை வர்த்தகத்தை கைக்கொண்டது. அமெரிக்காவில் செவ்விந்திய பழங்குடியினரை இனப்படுகொலை செய்ததை மறக்க இயலுமா? இந்தியாவையும் ஆப்பிரிக்காவையும் கொள்ளை அடித்ததை மறக்க முடியுமா? சீனாவின் மீது “அபினி யுத்தங்களை” சுமத்தி அந்த மாபெரும் தேசத்தை போதை தேசமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவே, அதனை மறக்க முடியுமா? இவை அனைத்தும் மனிதகுலத்தின் நியாயத்துக்கு முரண்பட்டதல்லவா?அதே சமயத்தில் பல காலனி எதிர்ப்பு போராட்டங்களை ஆதரித்து ஜனநாயகம் மலரச்செய்தது நமது தேசம் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.
கிறித்துவம்/இஸ்லாம்/யூதம்/பவுத்தம்-அனைத்துக்கும் கதவுகளை திறந்தோம்
ரஷ்ய வெறுப்பு பரப்பப்பட்டிருப்பதற்கு பல காரணங்களில் ஒன்று, நாம் காலனியாதிக்கத்துக்கு உட்பட்டு நம்மைத் திருட மேற்கத்திய நாடுகளை அனுமதிக்கவில்லை என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். சம உரிமை அடிப்படையில் வர்த்தகம் செய்யுமாறு ஐரோப்பிய நாடுகளை நிர்ப்பந்தித்தோம். ஒரு மையப்படுத்தப்பட்ட அரசை உருவாக்கியதன் மூலம் இதனை சாதித்தோம். கிறித்துவம்/ இஸ்லாம்/ யூதம்/ பவுத்தம் ஆகியவை ரஷ்யப் பண்பாடுடன் இணை வதை அனுமதித்தோம். ரஷ்யத்தன்மை என்பது அனைத்துக்கும் கதவுகளைத், திறந்து வைத்தது. மேற்கத்திய நாடுகள் பல நூற்றாண்டுகளாக ஏனைய தேசங்களுக்கு சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கொண்டு வருவதாக கூறுகின்றன. ஆனால் அதற்கு நேர்மாறாக அடிமைத்தனத்தையும் வன்முறையையுமே அவர்கள் கொண்டுவந்தனர். ஒரு துருவ உலகம் இயற்கையிலேயே ஜனநாயக விரோதம் கொண்டது. அமெரிக்கா மட்டும்தான் வரலாறிலேயே இருமுறை அணு ஆயுதங் களை பயன்படுத்திய நாடு. இதே அமெரிக்காதான் பிரிட்டனுடன் இணைந்து இரண்டாம் உலகப் போரில் தேவையே இல்லாமல் ஜெர்மனியின் டிரெட்சன்/ ஹாம்பர்க்/ காலன்ஜ் போன்ற பல நகரங்களை அழித்தது. அணு ஆயுத தாக்குதல் மற்றும் ஜெர்மானிய நகரங்களை அழித்ததன் ஒரே நோக்கம்- மற்ற தேசங்களை அச்சுறுத்துவதுதான்! வியட்நாம் மற்றும் கொரிய மக்கள் மீது நாபாம் குண்டுகளை வீசியும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியும் படிநிலை குண்டுமழை பொழிந்தும் அமெரிக்கா அந்த மக்களின் நினைவில் உருவாக்கிய பயங்கரமான எண்ணத்தை மறந்துவிட முடியுமா?
அமெரிக்க மேல்தட்டினர் எந்த ஒரு சோகமான சூழலையும் தமது போட்டி தேசங்களை அழிக்க பயன்படுத்திக்கொள்கின்றனர். பிரான்ஸ்/ இத்தாலி/ ஸ்பெயின் போன்ற பழமையான வரலாறு கொண்ட தேசங்கள் உட்பட ஐரோப்பாவும் அமெரிக்காவின் இலக்குதான்! அமெரிக்கா மேலும் மேலும் ரஷ்யா மீது வர்த்தகத் தடைகளைக் கோருகிறது. பல ஐரோப்பிய அரசியல்வாதிகளும் பலவீனமாக இதனை ஏற்றுக்கொள்கின்ற னர். ரஷ்ய எரிபொருளைப் புறக்கணிப்பதன் மூலம் தமது தேசத்தின் தொழில்கள் அழியும் என்பது இவர்களுக்குத் தெரியும். ஐரோப்பியச் சந்தையை அமெரிக்கா கைப்பற்றும்; அது தமக்கு பெரும் நட்டம் என்பதும் இவர்களுக்குத் தெரியும். எனினும் இவர்கள் தமது மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு அமெரிக்காவுக்கு அடிபணிகின்றனர். கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்; அது அவர்கள்பாடு!
ஆனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு தடைகள் மட்டும் போதுமான தாக இல்லை. அவர்கள் சீர்குலைவுச் செயல்களில் ஈடுபடுகின்றனர். நம்ப முடியாததாக உள்ளது. ஆனாலும் உண்மை. “நார்டு ஸ்ட்ரீம்” எனப்படும் - கடலுக்கு அடியில் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருள் கொண்டு செல்வதற்கான பல பில்லியன் டாலர்கள் மதிப்பில் உருவாக்கப்பட்ட நீண்ட குழாய்கள் குண்டுகள் மூலம் தகர்க்கப்பட்டுள்ளன. இந்த சீர்குலைவு மூலம் யார் பலன் அடைவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். யார் பலன் அடைவார்களோ அவர்கள்தான் இதனை செய்துள்ளனர். அமெரிக்காவின் ஆதிக்கம் என்பது எப்பொழுதுமே மிருகத்தனமான அடிப்ப டையில்தான்! சில சமயங்களில் இந்த மிருகத்தனம் மறைந்திருக்கும்; சில சமயங் களில் பகிரங்கமாக வெளிப்படும். எவரெல்லாம் இவர்களுடன் இசைந்து செல்ல வில்லையோ அவர்கள் எல்லாம் தானாகவே அமெரிக்காவின் எதிரிகளாக ஆகி விடுகின்றனர். இந்த கொள்கைகளின் அடிப்படையில்தான் அமெரிக்கா மற்றும் நேட்டோவின் சித்தாந்தங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வார்த்தை ஜாலங்கள் மூலம் மறைத்து இவர்கள் மற்றவர்களை ஏமாற்ற முனைகின்றனர். சீனாவை/ ஈரானை/ரஷ்யாவை கட்டுப்படுத்த வேண்டும் எனும் கூக்குரல்களை நாம் ஏற்கெனவே கேட்டுள்ளோம். பல லத்தீன் அமெரிக்க/ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இதே நிலையை உருவாக்க அவர்கள் முயல்கின்றனர். ஏன், தனது கூட்டாளிகளைக் கூட, அவர்கள் முரண்பட்டால் இதே நிலைக்குத் தள்ள தயங்கமாட்டார்கள்.
ரஷ்யா மீது தடைகள்- யாருக்கு நட்டம்?
ரஷ்யா மீது மின்னல் வேகத்தில் தடைகள் போடுவதன் மூலம், உலகத்தை தான் சொல்வதைக் கேட்க வைக்க முடியும் என மேற்குலகம் நம்பியது. ஆனால் அது பகற்கனவாக ஆகிப் போனது. பல தேசங்கள் அமெரிக்காவின் நிலையை ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷ்யாவுடன் ஒத்துழைப்பு எனும் நியாயமான நிலையை அவர்கள் எடுத்தனர். தடைகள் மூலம் ரஷ்யாவை மண்டியிட வைக்க முடியும் என கணக்கு போட்டனர். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக ஐரோப்பிய நாடுகள்தான் எரிபொருள் இல்லாமல் திணறுகின்றன. டாலர்களை யும் யூரோக்களையும் அச்சிடுவதன் மூலம் மக்களின் பசியைப் போக்கிவிட முடியுமா? குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வெப்பத்தை உருவாக்க இயலுமா? எரிபொருளுக்கு இந்த தேசங்கள் என்ன செய்ய இயலும்? எனவே இந்த ஐரோப்பிய தேசங்களின் அரசியல்வாதிகள் தமது மக்களை, எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள் எனவும் உணவை குறைத்துக் கொள்ளுங்கள் எனவும் அறிவுரைகளை தருகின்றனர். இது ஏன் என கேள்வி கேட்கும் தமது சொந்த மக்களை உடனே எதிரிகள் என முத்திரை குத்துகின்றனர். தமது தவறான முடிவுகளுக்கு ரஷ்யாதான் காரணம் என நம் மீது அம்பை ஏவுகின்றனர்.
போர் இவர்களின் நெருக்கடியைத் தீர்க்கிறது
க்கும். 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான முரண்பாடுகளி லிருந்து மீள மேற்குலகம் முதல் உலகப்போரை பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்காவில் உருவான பொருளாதாரப் பெரு மந்தத்திலிருந்து மீள இரண்டாம் உலகப்போர் அமெரிக்காவுக்கு உதவியது. உலகின் முதல் பணக்கார தேசமாக அமெரிக்கா உருவாகியது. டாலரின் மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் உருவாக்கினர். 1980களில் உருவான நெருக்கடியை சோவியத் யூனியன் வீழ்ச்சி மூலம் தீர்த்துக் கொண்டனர் என்பதே உண்மை. இப்பொழுது உருவாகியுள்ள முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ள, தம்முடன் இசைந்து செல்லாத ரஷ்யா உட்பட பல தேசங்களை உடைத்து சீர்குலைக்க முனைகின்றனர். இந்த மக்களின் வளங்களை அபகரிக்க முயல்கின்றனர். இது நடக்கவில்லை எனில் ஒட்டுமொத்த உலக பொருளாதார சமூக முறையையே அவர்கள் அழிக்கவும் தயங்க மாட்டார்கள். ஆம்! “போர் நெருக்கடிகளைத் தீர்க்கிறது” எனும் அவர்களது சூத்திரத்தை பயன்படுத்த தீர்மானிப்பார்கள். இதனை கடவுள் அனுமதிக்காமல் இருக்கட்டும். உலக சமூகத்திற்கு தனக்குள்ள பொறுப்பை ரஷ்யா உணர்ந்துள்ளது. இத்தகைய வெறியர்களின் கொடூரத்தை தடுக்க தன்னாலான அனைத்தையும் ரஷ்யாசெய்யும்.
நவீன காலனியாதிக்கம் தோல்வியைச் சந்திக்கும் என்பது தெளிவு. ஆனால் மேற்குலகம் இந்த கோட்பாட்டை கடைசிவரைக்கும் கைவிடப்போவது இல்லை. உலக சமூகத்துக்கு தருவதற்கு அவர்களிடம் வேறு எதுவும் இல்லை. கொள்ளையும் திருட்டும்தான் அவர்களின் வழிமுறைகள்! உண்மையில் அவர்கள் கோடிக்கணக்கான மக்களின், பெரும்பான்மையான மக்களின் சுதந்திரம், நீதி மீதும்; தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் கோட்பாடு மீதும் இழிவான தாக்குதலை நடத்துகின்றனர். மேற்கத்திய மேல் தட்டினரின் சர்வாதிகாரம் என்பது அனைத்து சமூகங்களு க்கும் எதிரானது. அவர்களது சொந்த மக்களுக்கும் இது எதிரானது என்பதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன். இது ஒவ்வொருவருக்கும் விடப்பட்ட சவால். உலகில் பல புரட்சிகரமான மாற்றங்கள் உருவாகிக்கொண்டுள்ளன. புதிய வளர்ச்சி மையங்கள் தோன்றியுள்ளன. இவைதான் பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்து வப்படுத்துகின்றன. இந்த மக்களை அவை பாதுகாக்கின்றன. பல்துருவ உலகம் என்பது ஒவ்வொரு தேசத்துக்கும் தமது இறையாண்மையை பாதுகாத்துக் கொள்ளவும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகின்றது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உட்பட உலகின் பல தேசங்களில் நமது நிலைபாட்டை ஆதரிக்கும் மக்கள் உள்ளனர். ஒருதுருவ காலனிய ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக பல்துருவ சிந்தனைகள் உருவாகி வருகின்றன. இது மேலும் வலுவடையும். உலகின் எதிர்காலத்தை இந்த சக்திகள்தான் தீர்மானிக்கப் போகின்றன.
நண்பர்களே!
இன்று நியாயத்துக்காகவும் சுதந்திரத்துக்காகவும் நாம் போரிடுகிறோம். மற்ற தேசங்களின் பண்பாடுகளையும் மக்களையும் அடக்குவது என்பது அடிப்படை யிலேயே கிரிமினல் குற்றம் என்பதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்வர். இந்த வெட்ககரமான அத்தியாயத்தை நாம் அகற்ற வேண்டும். மேற்குலகின் மூர்க்கத்தனமான மேலாண்மை அழிய ஆரம்பித்துவிட்டது. இது மீண்டும் திரும்பப் போவது இல்லை. நான் மீண்டும் கூறுகிறேன்: முன்பைப் போல இப்பொழுது இருக்கப்போவது இல்லை.
தமிழில் : அ. அன்வர் உசேன்