world

img

வேலை நிறுத்த உரிமையைப் பறிக்கிறார்கள் வலதுசாரிகள்:பிரிட்டனில் அட்டூழியம்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வருவதன் மூலம் வேலை நிறுத்த உரிமையைப் பறிக்கும் முயற்சியில் அந்நாட்டு வலதுசாரி ஆட்சியாளர்கள் முயற்சித்துள்ளார்கள்.

பிரிட்டன் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. உக்ரைன் நெருக்கடியால் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. கிடைக்கும் ஊதியத்தை வைத்து வாழ்க்கையை ஓட்ட முடியாது என்ற நிலையில், ஊதிய உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து அனைத்துப் பிரிவினரும் போராடி வருகிறார்கள். வழக்கத்திற்கு மாறாக, தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஒற்றுமை கட்டப்பட்டிருக்கிறது.

போராட்டத்தின் வீச்சைத் தாங்க முடியாத ஆட்சியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துத் தடுக்க முயற்சித்துள்ளனர். தொழிலாளர்களின் ஒற்றுமை அந்த முயற்சிகளைத் தகர்த்து எறிந்துவிட்டது. இதனால் வேலை நிறுத்த உரிமையையே பறித்து விடலாம் என்று வலதுசாரி அரசு திட்டமிட்டது. நாடாளுமன்றத்தில் தங்களுக்கு உள்ள பெரும்பான்மையை வைத்து மக்கள் விரோத சட்டத்தை நிறைவேற்றி விடலாம் என்று அதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

மே 22 ஆம் தேதியன்று இந்த சட்டத்திற்கு ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது. குறைந்தபட்ச தரமுள்ள சேவைச் சட்டம் என்பது ஏற்கனவே ஒரு முறை நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்தகைய சட்டம்தான் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தக் குறைந்தபட்ச சேவை என்பதை அரசு நிர்ணயம் செய்யலாம் என்று சட்டம் அனுமதி தந்திருக்கிறது. இந்தச் சட்டத்தால் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடும் தொழிற்சங்கங்களுக்கு நெருக்கடி ஏற்படும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வேலை நிறுத்தத்தால் முதலாளிக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிந்தால், அந்த வேலை நிறுத்தத்தின் கடும் நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. அச்சுறுத்தல் என்ன என்பதையும் நிர்வாகம் முடிவு செய்யும். வேலை நிறுத்தங்களை முடக்குவதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என்றும், ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடையவே செய்யும் என்றும் தொழிற்சங்கங்கள் எச்சரித்திருக்கின்றன.

சர்வதேச அளவிலான உரிமை

தொழிற்சங்கம் அமைப்பது, அதில் உறுப்பினராக இணைந்து கொள்வது மற்றும் கூட்டாகப் பேரம் பேசுவது ஆகியவை சர்வதேச தொழிலாளர்கள் சட்டங்களில் இடம் பெற்றுள்ளவையாகும். இத்தகைய அம்சங்களில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் பிரிட்டனும் ஒன்றாகும். இத்தகைய அம்சங்களை நீக்கும் எந்தவித மசோதாவையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது என்று தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. பிரிட்டனின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் தொழிலாளர்கள் உரிமைகளை பறிப்பதில் கொண்டு போய் முடியும் என்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

மருத்துவர்கள் போர்க்கொடி

நிர்வாகத்துடன் ஊதிய உயர்வு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதால், ஜூன் மாதத்தில் வேலை நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக உதவி மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். 1906 ஆம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த உரிமையைப் பறிபோக அனுமதிக்க மாட்டோம் என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன. அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்தால் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் தீயணைப்பு ஆகிய துறைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;