ஹவானா, அக்.22- சோசலிச நாடுகளான வியட்நாம் மற்றும் கியூபா நாடுகளுக்கிடையிலான உறவில், சர்வதேச அளவில் இரு நாட்டு இளைஞர்களும் ஒருமித்த கருத்தோடு செயலாற்றுவது என்ற முடிவு எட்டப்பட்டிருக்கிறது.
சர்வதேச அரங்கில் அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணியின் நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது. இந்த நிர்ப்பந்தத்தால் அமெரிக்கா எடுக்கும் முடிவுகளைப் பல்வேறு நாடுகள் அப்படியே நடைமுறைப்படுத்துகின்றன. இதனால், அந்நாடுகளே கடும் நெருக்கடியில் சிக்கிக் கொள்கின்றன. அதோடு, ஏழை நாடுகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால், அமெரிக்க ராணுவக் கூட்டணிக்கு வெளியே உள்ள நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சோசலிச நாடுகளை தனிமைப்படுத்தும் முயற்சிகளையும் அமெரிக்கா எடுக்கிறது. கியூபா மீதான பொருளாதாரத்தடை சர்வதேசக் கருத்தை மீறித் தொடர்கிறது. ஓரிரண்டு நாடுகளைத் தவிர, உலகின் அனைத்து நாடுகளும் கியூபா மீதான தடைகளை நீக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்து வருகின்றன. இந்நிலையில் வியட்நாம் மற்றும் கியூபா நாடுகளில் உள்ள இளைஞர் அமைப்புகளின் சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
கியூபாவின் தலைநகரில் நடைபெற்ற சந்திப்பில், ஹோசிமின் கம்யூனிஸ்ட் வாலிபர் ஒன்றிய மத்தியக்குழுச் செயலாளரும், வியட்நாம் வாலிபர் ஒன்றியத்தின் தலைவருமான குயென் கோக் லுவாங்கும், கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுச் செயலாளர் ரோஜெலியோ போலன்கோ ஃப்யூன்டெசும் பங்கேற்றனர். கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டுத்துறையின் தலைமைப் பொறுப்பிலும் ஃப்யூன்டெஸ் இருக்கிறார். கோட்பாடுகள் மற்றும் கலாச்சாரத்துறைகளின் முக்கியத்துவம் பற்றி விவாதித்தபோது, இரண்டு இரண்டு துறைகளிலும் இருநாட்டு இளைஞர் அமைப்புகள் ஒன்றுபட்டு செயல்படுவதைப் பலப்படுத்த வேண்டும் என்று ஃப்யூன்டெஸ் குறிப்பிட்டார்.
வியட்நாம் விடுதலை பெற்ற பிறகு, கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவருமான பிடல் காஸ்ட்ரோ அந்நாட்டுக்கு வருகை புரிந்தார். 1973ஆம் ஆண்டில் நடந்த அந்த வருகையின் 50ஆவது ஆண்டை இரு நாட்டு இளைஞர் அமைப்புகளும் கொண்டாட முடிவெடுத்துள்ளன. இதையொட்டி தலைமுறை, தலைமுறையாக பாதுகாக்கப்பட்டுள்ள பாரம்பரியமான உறவை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று இருதரப்பும் பேச்சுவார்த்தையின்போது வெளிப்படுத்தின.
புதிய செயல்திட்டம்
இந்தப் பேச்சுவார்த்தையில் பின்னர் இணைந்து கொண்ட கியூபா இளம் கம்யூனிஸ்டுகளின் தேசியக்குழுச் செயலாளர் அய்லின் ஆல்வரஸ் கார்சியாவிடம், புதிய பல திட்டங்களை லுவாங் முன்வைத்தார். புதிய செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி இருதரப்பும் அதில் கையெழுத்திடலாம் என்ற ஆலோசனையும் அதில் இருந்தது. உயர் தொழில்நுட்பம், சுற்றுலா, உயிரிதொழில்நுட்பம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதும் இந்தப் புதிய செயல்திட்டத்தில் இடம் பெறும்.
சர்வதேச அரங்கில்
சர்வதேச அமைப்புகளில் இரண்டு இளைஞர் அமைப்புகளும் ஒருவரையொருவர் ஆதரிப்பது அவசியம் என்று லுவாங் குறிப்பிட்டார். முக்கியமான பிரச்சனையில் இரு தரப்பும் ஒன்றுபட்டு ஒரே நிலைப்பாட்டை எடுப்பது சர்வதேச ஒற்றுமையைக் கட்டவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த கார்சியா, மேலும் விவாதங்கள் நடக்கும் என்றார். புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கியூபாவுக்கு, கணினிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வியட்நாம் குழு அளித்தது.