world

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஹைட்டி பிரதமர்  மருத்துவமனையில் அனுமதி 

ஹைட்டி நாட்டின் புதிய பிரதமர் கேரி கோனில் உடல் நிலைக் குறை பாட்டின் காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் சீராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் அலு வலகம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் அவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் தீவிர சிகிச்சை கொடுக்க வேண்டும்  என்பதால் வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்படலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. 

சீனா கார்களுக்கு  அதிக இறக்குமதி வரி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 40 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என துருக்கி வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் குறைந்த பட்சம் ஒரு வாகனத்திற்கு கூடுதல் கட்டணமாக 5 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் (7,000 டாலர்கள்) வரை  நிர்ணயிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை ஜூலை 7 முதல் அமலாகும் என அதிகாரப்பூர்வமாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

66 சதவீத இளைஞர்கள் பெற்றோர்களை சார்ந்து உள்ளனர்

தென்கொரியாவில் அதிகரித்து வரும்  வேலையின்மை, உயரும் வாழ்வாதார செலவுகள் காரணமாக 25 முதல்  34 வயதுடைய 66 சதவீத இளைஞர்கள் பெற் றோர்களின் வருமானத்தை மட்டுமே சார்ந்து  வாழ்ந்து வருகின்றனர். அவர்களை “கங்காரு குழந்தைகள்” என்று  குறிப்பிடுகின்றனர். 2012 முதல் வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை 60 சதவீதத்தை  விட குறைய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் வெள்ள நிவாரணம்; தைவான் உதவி 

பிரேசில் நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் 150 க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப் பட்டு நிவாரண முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.  இந்நிலையில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஆதரவாக தைவான்  அரசு 1 கோடியே 56 லட்சம் ரூபாய்  நன்கொடையாக வழங்கியுள்ளது. பிரேசிலுக்கான தைவான் தூதர்  பெனிட்டோ லியாவோ பிரேசில் தலைநக ரில்  இந்த தொகையை ஒப்படைத்துள்ளார். 

காட்டுத்தீ புகையின் காரணமாக 52,000 பேர் மரணம் 

காட்டுத்தீ புகையின் காரணமாக அமெரிக்கா கலிபோர்னியாவில் 52,000 பேர் மரணமடைந்துள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2008 முதல் 2018 வரை காட்டுத்தீயால் உருவான சாம்பலின் நுண்ணிய துகள்கள் உள்ளிட்ட மாசுபாட்டால் 52,480 முதல் 55,710  பேர் இயல்பான மரண வயதிற்கு முன்பாகவே மரணமடைந்துள்ளனர். இதன் காரணமாக  43,200 கோடி டாலர்கள் முதல் 45,600 டாலர்கள் வரை  பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;