world

63 லட்சம் மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை இலங்கையில் உணவு நெருக்கடி: ஐ.நா.சபை

கொழும்பு, செப்.13- கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில் சுமார் 63 இலட்சம் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவு பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என உணவு விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு பருவங்களில் மோசமான விளைச்சல் காரணமாக உற்பத்தி 50 சதவிகிதம் குறைந்துள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் 25 மாவட்டங்களுக்குச் சென்று விவசாய உற்பத்தி அளவை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டது. நிதி நெருக்கடியால், 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், உணவு உண்பதைக் குறைத்து, விலை குறைந்த, சத்து குறைந்த உணவுகளுக்குப் பழகி விட்டன. நிதி நெருக்கடி காரணமாக பள்ளிக் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான சத்துணவுத் திட்டங்களில் இருந்து அரசு விலகியுள்ளதாகவும் ஆய்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மேலும் வீழ்ச்சி அடையாத வகையிலும், விவசாய உற்பத்தியை மீட்டெடுக்கும் வகையிலும் சிறு விவசாயிகளின் மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

;