world

img

மேற்கு ஆசியாவில் அமெரிக்க அணுஆயுத போர் விமானங்கள்

வாஷிங்டன், செப்.16- மேற்கு ஆசியப்பகுதிக்கு தனது பி-52 ரகப் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளதால், அப்பகுதியில் பதற்றம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியப்பகுதியில் பல்வேறு நாடுகளுக்கிடையில் மோதல்கள் நடந்தவண்ணம் உள்ளன. போர் நிறுத்தத்தை மீறி ஏமன் மீது சவூதி அரேபியப் படைகள் குண்டுகளை வீசிக் கொண்டிருக்கின்றன. தனது ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேலின் அத்துமீறல்களுக்குப் பஞ்சமில்லை. சிரியாவின் மீது தாக்குதல்களை நடத்துவதோடு நிறுத்தாமல், அங்குள்ள எண்ணெய் வளத்தை அமெரிக்கா கொள்ளையடித்துச் செல்கிறது. லிபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் யார் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாத நிலையற்ற நிலைமை உள்ளது. அனைத்து அரசுகளும் அமெரிக்காவின் ஆணைகளைக் கேட்டு செயல்படும் நிலையில், சுதந்திரமாக இயங்கும் மிகச்சில நாடுகளில் ஈரானும் ஒன்றாக உள்ளது. அதன் அணுசக்தித் தொழில்நுட்பம் குறித்து வளர்ந்த நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. அந்த உடன்பாட்டில் இருந்து டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, தன்னிச்சையாக அமெரிக்க அரசு வெளியேறியது. மீண்டும் உடன்பாட்டை மேற்கொள்ள பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

அமெரிக்கா முரண்டு

ஆனால், அந்த உடன்பாடு வந்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா முனைந்து நிற்கிறது. உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா வெளியேறி, பல்வேறு தடைகளையும் ஈரான் மீது விதித்தது. அந்தத் தடைகள் பெரும் பாதிப்பை ஈரானுக்கு ஏற்படுத்தவில்லை. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்தே உள்ளது. இந்நிலையில், ஈரானை மிரட்டும் வகையில் மேற்கு ஆசியப் பகுதிக்கு தனது பி-52 ரகப் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியிருக்கிறது. அணுஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் வசதிகள் இந்தப் போர் விமானங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். பி-52 ரகப் போர் விமானங்கள் மேற்கு ஆசியப் பகுதிக்கு அனுப்பப்பட்டதை அமெரிக்க ராணுவம் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் ஃபேர்போர்டு விமானத்தளத்தில் இருந்து கிளம்பிய இரண்டு விமானங்கள் மேற்கு ஆசியப் பகுதியில் உள்ள பல்வேறு நாடுகளின் வான்வெளியில் பறந்துள்ளன. இந்த இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களோடு குவைத் மற்றும் சவூதி அரேபியாவின் போர் விமானங்களும் பறந்துள்ளன.  பதற்றத்தை அதிகரிக்கும் இந்த நடவடிக்கைகள் “பாதுகாப்பிற்காகவே மேற்கொள்ளப்பட்டன” என்று மேற்கு ஆசியாவுக்கான அமெரிக்கப் படைத்தளபதி ஜெனரல் ஃபிராங்க் மக்கென்சி சமாளிக்க முயற்சித்திருக்கிறார். “இந்தப் பகுதியில் எப்போது தேவை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க எப்போதும் தயாராக இருப்போம் என்ற செய்தியை அனுப்புவதே இந்தப் போர் விமானங்கள் வட்டமிட்டதற்குக் காரணம்” என்று துணைத் தளபதிகளில் ஒருவரான அலெக்சஸ் கிரின்கெவிச் கூறியுள்ளார். போர் விமானங்கள் மேற்கு ஆசியப் பகுதியில் பறந்தது பற்றி அதிகாரப்பூர்வ அறிக்கையை அமெரிக்க ராணுவம் வெளியிட்டாலும், இஸ்ரேல் போர் விமானங்களும் அதில் பங்கேற்றன என்பதை விட்டுவிட்டார்கள். சவூதி அரேபியா மற்றும் குவைத் போர் விமானங்கள் பங்கேற்றதைக் குறிப்பிட்ட அமெரிக்கா, இஸ்ரேல் பங்கேற்றதை விட்டுவிட்டது. ஆனால், இஸ்ரேல் ராணுவம் தனியாக வெளியிட்ட அறிக்கையில், தங்கள் பங்கேற்பைக் குறிப்பிட்டு அமெரிக்காவை அம்பலப்படுத்தியுள்ளது.
 

;