world

முற்றுகையைக் கைவிடுங்கள் கியூபாவுக்கு ஆதரவுக்குரல்

ஹவானா, செப்.22- கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடைகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள முற்றுகை ஆகியவற்றைக் கைவிட வேண்டும் என்று லத்தீன் அமெரிக்க நாடுகள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை பொது அவையின் 77-ஆவது  கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்றுள்ள லத்தீன் அமெரிக்க நாடுகள் கியூபா வுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளன. 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா போட்டுள்ள பொருளாதார, வர்த்தக மற்றும் நிதி ரீதியான முற்றுகை யைக் கைவிடும்படி அர்ஜெண்டினாவின் ஆல்பெர்ட்டோ  பெர்னாண்டஸ், ஹோண்டுராசின் சியாமரா காஸ்ட்ரோ மற்றும் பொலிவியாவின் லூயிஸ் அர்ஸ் ஆகியோர் தங்களது உரையின்போது வலியுறுத்தினார்கள். ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் பேசுகையில், “அமைதி மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக தனது முடிவுகளை நடைமுறைப்படுத்த பாதுகாப்பு கவுன்சில் போடும் தடைகள் மட்டுமே சட்டப்பூர்வமானவையாகும். கியூபா மீது போடப்பட்டுள்ள சட்டவிரோதத் தடைகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அர்ஜெண்டினாவும் இணைந்து கொள்கிறது. மேலும் இது போன்ற நெருக்கடியில் தள்ளப்பட்டு சிரமப்பட்டு வரும் வெனிசுலா போன்ற நாடுகளுக்கு ஆதரவாகவும் எங்கள் குரல் எழும்” என்று குறிப்பிட்டார். இதற்கு ஆதரவாகப் பேசிய பொலிவிய ஜனாதிபதி  லூயிஸ் அர்ஸ், “கியூபா மீதான தடைகளை நீக்கா மல் இருப்பது மிக மோசமான எடுத்துக்காட்டாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. பொது அவையில் தடை களை நீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஆனால், அது சில நாடுகளால் நடைமுறைக்கு வராமல் போய் விடுகிறது. இந்த அவையின் முடிவுகள்  நடைமுறைக்கு வராமல் போவது வருத்தத்திற்குரிய தாகும்” என்று தெரிவித்தார்.  இந்த விவாதத்தில் பங்கேற்ற கியூபாவின் வெளி யுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிகஸ், சிறு  நாடுகளின் சுயாட்சி மற்றும் அரசியல் வேறுபாடு களுக்கு மரியாதை ஆகியவற்றை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கோரினார்.

;