ஆஸ்திரியா மத்திய ஐரோப்பாவில் தெற்கு ஆல்ப்ஸ் எல்லையில் உள்ள ஒரு நாடு. வலதுசாரி அரசியலில் ஆழமாக வேரூன்றிய நாடு. பழமைவாத ஆஸ்திரிய மக்கள் கட்சி மற்றும் தீவிர வலதுசாரி ஆஸ்திரிய சுதந்திரக் கட்சி ஆகியவை சமீபத்தில் ஆஸ்திரிய அரசியலைக் கட்டுப்படுத்தியுள்ளன. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரிய கம்யூனிஸ்ட் கட்சி பெயரளவிலான செல்வாக்கை மட்டுமே கொண்டுள்ளது. (ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகள்). ஆயினும் கம்யூனிஸ்ட் மேயர் நவம்பர் 17 அன்று தெற்கு ஆஸ்திரிய நகரமான கிராஸில் ஆட்சிக்கு வந்தார்.
தலைநகரான வியன்னாவுக்குப் பிறகு, மிகப்பெரிய நகரம் கிராஸ். இது ஸ்டெரியா மாநிலத்தின் தலைநகராகும். மூர் ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ள இந்த நகரத்தில் 3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 2016-17 இல் துணை மேயராக இருந்த 60 வயதான எல்கா கர் மேயராகப் பொறுப்பேற்றார். கர் ஆஸ்திரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இவர் 30 ஆண்டுகளாக கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 16 வருடங்களாக நகரசபை உறுப்பினராக இருந்துள்ளார்.
ஆஸ்திரியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு குறைவாக இருந்தாலும், ஸ்டீரியா வில் அது மோசமான செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை. கடந்த தேர்தலில், ஐந்து சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றது. ஸ்டெரியா கீழ்சபை இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. செப்டம்பர் 26 அன்று நடந்த மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி 28.84 சதவிகிதம் வாக்குகள் மற்றும் 15 இடங்களைப் பெற்று மிகப்பெரிய தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
கடந்த தேர்தலை விட 8.56 சதவிகித வாக்குகள் மற்றும் ஐந்து இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளது. 48 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் பெரும்பான்மைக்கு 25 இடங்கள் தேவைப்படும். ஒன்பது இடங்களைப் பெற்ற பசுமைக் கட்சியுடனும், நான்கு இடங்களைக் கொண்ட சமூக ஜனநாயகக் கட்சியுடனும் கூட்டணி அமைத்து மேயர் பதவியை ஆஸ்திரிய கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது. வாக்களித்த 46 பேரில் 28 வாக்குகளைப் பெற்று கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியையடுத்து, ஆஸ்திரிய கம்யூனிஸ்ட் கட்சி சரிவின் விளிம்பில் இருந்தது, ஆனால் ஸ்டெரியா மாநிலத்தில் அதன் இருப்பு நிலைத்திருந்தது. எர்னஸ்ட் கால்டேனஜர் போன்ற தலைவர்கள் மக்களு டன் தொடர்பு வைத்து, கட்சியை கிராஸ் மற்றும் பிற பகுதிகளுக்கு விரிவு படுத்தினர்.
கிராசில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது எப்படி?
எர்னஸ்ட் கால்டேனஜர் கட்சியின் பலவீன மான அடித்தளத்தை மாற்ற “அன்றாட வாழ்க்கையில் உதவும் கட்சி” என்கிற நிலைக்கு உயர்த்தினார். ரியல் எஸ்டேட் மாபியாக்கள் வாடகைதாரர்களை மொத்தமாக வெளியேற்றி கட்டிடங்களை கையகப்படுத்த முயன்றபோது, அது முறியடிக்கப்பட்டு வாடகைதாரர்களின் பக்கம் நின்றது கட்சி. இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டது. அவர் களுக்கு தேவையான சட்ட உதவிகளும் இலவச மாக வழங்கப்பட்டன. இது இயல்பாகவே கட்சிக்கு செல்வாக்கைக் கொடுத்தது.
கட்சியால் முன்னெடுக்கப்பட்ட மற்றொரு பிரச்சினை, அதிக வாடகைக்கு எதிரான போராட்டம். ஆஸ்திரியாவில் மட்டுமல்ல, அனைத்து ஐரோப்பிய நகரங்களிலும் வாழ்வத ற்கு ஒரு வீடு என்பது ஒரு பெரிய போராட்டம். வருமானத்தில் 55-60 சதவிகிதம் வாடகைக்கு செலவிடப்படுகிறது. கல்வி மற்றும் மருத்துவச் செலவு அதிகம். எனவே, வாடகை செலுத்திய பின், பட்டினி இல்லாமல் சாப்பிடும் அளவுக் கான தொகை மட்டுமே மிச்சமாகும். இந்த உயர் வாடகையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கம்யூனிஸ்ட் கட்சி கிராஸில் போராட்டக் கொடியை உயர்த்திய போது, பெரும் மக்கள் ஆதரவைப் பெற்றது. கவுன்சில் உறுப்பினர் எர்னஸ்ட் கால்டெனேஜர் வாடகையில் 30 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும் என்று ஒரு மசோதாவை அறிமுகப் படுத்தினார். ஆனால் ஆஸ்திரிய மக்கள் கட்சி யால் அது தோற்கடிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கப்பட்டு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
அதன்பிறகு, மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டபோது, எந்த அரசியல் கட்சி யாலும் எதிர்க்க முடியவில்லை. அதன்பிறகு முதன்முறையாக கம்யூனிஸ்ட் கட்சி மூன்று சதவிகித வாக்குகளைப் பெற்றது. 1998ல் இது 7.9 சதவிகிதமாக உயர்ந்தது. தேர்தலில் வெற்றி பெற்று வீட்டுவசதித் துறையின் தலைவராகப் பதவியேற்ற எர்னஸ்ட் கால்டெனேஜர் சிறப்பாகச் செயல்பட்டார். இயல்பாகவே, 2003 தேர்தலில், கட்சி சுமார் 20 சதவிகித வாக்கு களைப் பெற்றது.
இந்த நிலையிலேயே அரசாங்கத்தின் கீழ் உள்ள பொது வீடுகளை தனியார்மயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகப் போராடியது. இதன் விளைவாக, வாக்கெடுப்பு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 96 சத விகிதம் பேர் பொது இல்லத்தை தனியார்மய மாக்குவதற்கு எதிராக வாக்களித்தனர். இதன் மூலம், கம்யூனிஸ்ட் கட்சி அடிமட்டத்தில் சந்தே கத்திற்கு இடமில்லாத சக்தியாக மாறியது.
கடந்த நகர சபையின் சாலைப் போக்கு வரத்துப் பிரிவின் தலைவராக எல்கா கர் இருந்தார். சுகாதாரத் துறையின் தலை வர் ராபர்ட் கிராட்சர், கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு உறுப்பினர். சைக்கிள் ஓட்டுபவர் களுக்கான சிறப்புப் பாதைகள், டிராம் மற்றும் பேருந்து சேவைகளை அதிகரித்தல் மற்றும் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நகர மக்களின் அன்பை பெற முடிந்தது.
இந்த காலகட்டத்தில் சுகாதாரத் துறை பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. வயதா னவர்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு முறை யை மேம்படுத்துவது முக்கியம். கவுன்சில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு வழங்கப்படும், 6,000 யூரோ சம்பளத்தில் 4,000 யூரோ ஏழைகளின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. இது கம்யூனிஸ்ட் கட்சியல்ல அறப்போர் (சாரிட்டரி) கட்சி என்ற குற்றச்சாட்டிற்கு கம்யூ னிஸ்ட் கட்சியின் பதில், முப்பது ஆண்டு களுக்குள் 20,000 பேருக்கு அதன் மூலம உதவ முடிந்தது என்பதாகும். அதாவது, கிராசில் வேரூன்றியதற்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுடன் இணைந்து பணியாற்றுவதுதான்.
தேசாபிமானி இணைய பதிப்பில்
வி.பி.பரமேஸ்வரன்
தமிழில் : சி.முருகேசன்