world

img

இது ஒரு புதிய விளையாட்டு.... அமெரிக்காவினுடையது அல்ல... ஆப்கனுடையது...

காபூல்/தோகா/மாஸ்கோ:
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்த பின்னணியில், அந்த வாய்ப்பை துரிதமாக பயன்படுத்திக் கொண்டு தலிபான்கள் அந்நாட்டின் பல பகுதிகளை தாக்குதல் நடத்தி ஆயுத முனையில் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், அங்கு மீண்டும் ஒரு பயங்கர உள்நாட்டுப் போரும், ரத்த ஆறும் உருவாவதைத் தடுக்கும் பொருட்டு அமைதி முயற்சிகள் துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக தலிபான்களுடன் ஆப்கன்அரசு பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளது. முதல் கட்ட பேச்சுவார்த்தை ஞாயிறன்று கத்தார் தலைநகர் தோகாவில் நடந்திருக்கிறது.

ஆப்கனில் உள்நாட்டு யுத்தத்தை தவிர்த்து அங்கு அமைதியையும், அதைத் தொடர்ந்து வளர்ச்சியையும் கொண்டு வருவதற்கு மற்றொரு புறத்தில்ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முயற்சிகளைத் துவங்கியிருக்கிறது. இந்த முயற்சிகளின் பின்னணியில் மக்கள் சீனமும், ரஷ்யாவும் இருக்கின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, உடனடியாக போரைத் தவிர்த்து பேச்சுவார்த்தை நடத்துங்கள்என்று ஆப்கன் அரசை கேட்டுக் கொண்டதைத்தொடர்ந்து, பேச்சுவார்த்தை பாதையில் ஆப்கன் அரசும், தலிபான்களும் இறங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் அட்டூழியம்
2001ஆம் ஆண்டில் ஒசாமா பின்லேடனையும் அவரது தலைமையிலான அல்கொய்தா பயங்கரவாத அமைப்பையும் தலிபான்களையும் ஒழித்துக்கட்டபோகிறோம் என்று கூறி ஆப்கானிஸ் தானிற்குள் அமெரிக்கா நுழைந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவப் படைகள் ஆப்கனில் கடந்த20 ஆண்டு காலமாக நடத்தாத அட்டூழியம் இல்லை. செய்யாத படுகொலைகள் இல்லை. பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், முதியவர் கள் உள்ளிட்ட அப்பாவிகள் கொல்லப் பட்டார்கள். ஆனால் அமெரிக்கா தலைமையிலான படைகளால் அங்கு எந்தவிதமான அமைதியையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்த நிலையில், அமெரிக்காவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் அரசு ஆப்கனில் இருந்து படைகளை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கடந்த வாரம் அறிவித்தது.

எல்லைகள் தலிபான் வசம்
இந்த அறிவிப்பு வெளியானவுடனே தலிபான்கள் மிகுந்த ஊக்கமடைந்து தங்களது படைகளைத் திரட்டி அரசுப்படைகளுக்கு எதிராக சரமாரியான தாக்குதல் தொடுக்கத் துவங்கினர். தற்போதைய நிலையில் தலிபான்கள்ஆப்கானிஸ்தானின் அனைத்து எல்லைகளையும் தங்கள் வசப்படுத்திவிட்டார்கள் எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக தஜிகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், ஈரான், துர்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளுடனான ஆப்கனின் எல்லைகள்தலிபான்கள் வசம் சிக்கியுள்ளன. பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்துடனான எல்லைப்பகுதியான ஸ்பின் போல்டாக் பகுதியையும் தலிபான்கள் கையகப்படுத்திவிட்டார்கள் என தகவல்கள் உறுதி செய்கின்றன. இந்தப் பகுதி கைபர் கணவாய்க்கு மிக அருகில் உள்ள பகுதியாகும். சர்வதேச ஊடகங்களின் தகவல்கள்படி ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 400 மாவட்டங்கள் தலிபான்களின் வசம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், பாகிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமாபாத் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் உறுதி செய்யப்பட்ட தகவல்களின்படி தலிபான்கள் வசம் 185 மாவட்டங்கள் சென்றுள்ளன. ஆப்கன் அரசின் வசம் 77 மாவட்டங்கள் உள்ளன. 136 மாவட்டங்களில் மோதல் நடந்து கொண்டிருக்கிறது எனத் தெரியவந்துள்ளது. தலிபான்கள் தவிர, ஆப்கனின் இனக்குழுக்களான தஜிக்குகள், பஸ்தூன்கள், ஹசராக்கள், உஸ்பெக்குகள், துர்க்மென்கள், பலூச், நூரிஸ்தானிகள், பஸல்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் இனக்குழு படைகளும் அவரவர் பகுதிகளை தங்கள் வசப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்ற விபரங்களையும் இஸ்லாமாபாத் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் விபரம் தெரிவிக்கிறது. 

பேச்சுவார்த்தையே தீர்வு
ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகள் பலவீனமாகியுள்ள சூழலில் ராணுவ ரீதியாக மோதல் நடவடிக்கைகளை தொடர்ந்தால் அந்நாடு நிரந்தரமான இரத்த ஆறு ஓடும் பூமியாக மாறும் பெரும் ஆபத்து இருக்கிறது. இதை அந்நாட்டு அரசும் மக்களும் உணர்ந்தே இருக்கிறார்கள். இந்நிலையில் ஆப்கனை, தீராத உள்நாட்டுக் கலகத்திற்குள் சென்றுவிடாமல் பாதுகாப்பதற்கு, அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர வேறு பொருத்தமான தீர்வு இல்லை என்று ஆப்கன் அரசுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முன்மொழிந் தது. ஏற்கெனவே அமெரிக்கப் படைகள்அங்கு இருந்த போதே அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. எனினும் அந்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முறிந்துகொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் நிரந்தரமாக பேச்சுவார்த்தை நின்று போனது. இந்நிலையில் மீண்டும் இருதரப்பு பேச்சுவார்த்தை துவக்குவதே சரியானது என்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முன்மொழிவினை ஆப்கன் அரசு ஏற்றுக் கொண்டது. இந்தப் பின்னணியில்தான், கத்தார் அரசின் ஒத்துழைப்புடன் தோகா மாநகரில் ஞாயிறன்று இருதரப்பு பேச்சுவார்த்தை துவங்கியது.

தலிபான்களின் இலக்கு
இந்தப் பேச்சுவார்த்தையில் ஆப்கன் அரசுத் தரப்பில் முன்னாள் ஜனாதிபதி ஹமீது கர்சாய், தேசிய மறுசீரமைப்புக் கவுன்சில் தலைவர் அப்துல்லா அப்துல்லா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும், தலிபான்கள் தரப்பில் அதன் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஜதா  உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தி வெளியிட்டதலிபான் தலைவர் ஹிபத்துல்லா, “நாங்கள் ராணுவ ரீதியாக பெருவாரியான இடங்களை கைப்பற்றிய நிலையில், ஓர் அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்காக கத்தார் அரசு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தோகாவிற்கு வந்துள்ளோம்” எனத் தெரிவித்தார். “ஆப்கனில் அமைதியான, பாதுகாப்பான இஸ்லாமிய அரசுக் கட்டமைப்பு உருவாவதற்கான  அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்” என்று அவர் தெரிவித்தார். அவரது பேட்டியிலிருந்து, ஆப்கனை ஒரு இஸ்லாமிய மத அடிப்படைவாத நாடாக மாற்றுவதுதான் தலிபான்களின் இலக்கு என்பதை பகிரங்க மாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று உணர முடிகிறது. தலிபான்களின் இலக்கு எதுவாக இருந்தாலும் ஆப்கன் அரசின் உடனடி நோக்கம் அங்கு உள்நாட்டுப் போர் ஏற்படாமல் தவிர்ப்பது என்பதாகவே அமைந்துள்ளது. 

உதவிதான்... மத்தியஸ்தம் அல்ல!
ஆப்கன் அரசுக்கு இத்தகைய வழிகாட்டுதலை வழங்கியுள்ள சீனா மற்றும் ரஷ்யா தலைமையிலான ஒத்துழைப்பு அமைப்பு, ஆப்கனில் எந்தவொரு முடிவு ஏற்பட்டாலும் அது ஆப்கனே எடுத்த முடிவாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, வெளியிலிருந்து திணிக்கப்பட்ட முடிவாக இருக்கக்கூடாது; மேலும், அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஓர் இடைக்கால அரசு அமைவதை நோக்கி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்; அதுவும் அங்கு உள்ள அரசியல் இயக்கங்களே கூடி முடிவு செய்ய வேண்டும்; அத்தகைய முயற்சிக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உதவிசெய்யும்; ஆனால் ஒரு போதும் மத்தியஸ்தம் செய்யாது என்று அறிவித்துள்ளது. 

மூன்று வழிமுறைகள்
இதனிடையே தஜிகிஸ்தான் தலைநகரான துஷான்பேயில்  சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரஷ்யவெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரவ், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது ஹனீப் அத்மர் மற்றும் தஜிகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சிரோஜிதீன் முஹீருதீன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது மூன்று முக்கிய அம்சங்களை ஆப்கன் அரசுக்கு ரஷ்ய மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்:

1. ஆப்கானிஸ்தானில் ஒரு தேசிய மறுநிர்மாணத்தை உருவாக்கும் விதத்தில் அங்குள்ள அனைத்து குழுக்களுடனும் முழுமையான பேச்சு வார்த்தை நடத்துவது; அதன்மூலம் ஒரு நிலையான அரசியல் தீர்வை உருவாக்குவது; இந்த வழிமுறையில் அங்கு உள்நாட்டுப் போர் ஏற்படுவதை முற்றாக தடுப்பது. இத்தகைய பேச்சுவார்த்தைக்கு உதவி செய்ய சீனா தயாராக இருக்கிறது. 

2. அதேவேளையில் ஆப்கா னிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும் நடத்தியாக வேண்டும். உண்மையில் அங்கு இப்போது அல்கொய்தா அமைப்பின் பல்வேறு சிறு குழுக்கள் தாக்குதல்களை ஆங்காங்கே நடத்துகின்றனர்; மேலும், ஐஎஸ் பயங்கரவாதிகள் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி கொடிய தாக்குதல்களை அரங்கேற்றும் முயற்சியில் உள்ளனர்; இவர்களோடு கிழக்கு தர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் (இடிஐஎம்) எனும் அமைப்பு உருவாகி அது ஐஎஸ் பயங்கரவாதிகளுடனும் அல்கொய்தாவுடனும் இணைந்து கொண்டு ஆப்கனில் இயங்கி வருகிறது. அந்த அமைப்பு ஆப்கனை ஒட்டியுள்ள மேற்கு சீன மாகாணமான ஜின்ஜியாங்கில் உய்கர் இன மக்களிடையே பயங்கரவாதத்தை கொண்டுசெல்லும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது. எனவே இந்த மூன்று அமைப்புகளின் பயங்கரவாதத்தை உறுதியோடு எதிர்கொள்ள வேண்டிய நிலை ஆப்கன் அரசுக்கு உள்ளது. அந்தப் போராட்டத்தை ஆப்கன் அரசு நடத்த வேண்டும்.

3. தலிபான்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்தான். தற்போது அவர்கள் வசம் நாட்டின் கணிசமான பகுதி சிக்கியுள்ள நிலையில் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதைத்தவிர வேறு வழியில்லை. அதேவேளை யில் பேச்சுவார்த்தைகளின்போது, ஓர் இடைக்கால அரசு உருவாக்கும் பொருட்டு, தலிபான்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் பிற பயங்கரவாத அமைப்புகளோடு உள்ள தொடர்பை முற்றாக துண்டித்து க்கொள்ள வேண்டுமென்றும் ஒப்பந்தம் மேற்கொள்ள நிர்ப்பந்தத்தை செலுத்த வேண்டும். 

“முற்றிலும் ஆப்கானியர்கள் தலைமையில் ஆப்கானியர்களுக்கான தீர்வு”  என்ற இத்தகைய அணுகுமுறையை ஏற்றுக் கொள்வதாக துஷான்பே சந்திப்பின்போது ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முகமது ஹனீப் அத்மர் 
ஒப்புக் கொண்டுள்ளார். இந்தத் திட்டம்கத்தார் வாயிலாக தலிபான்களுக்கும் சொல்லப்பட்டு, அவர்கள் பேச்சுவா ர்த்தைக்குவர ஒப்புக்கொண்டனர்.

இந்தப் பின்னணியிலேயே தோகாவில் ஆப்கன் அரசுக்கும் தலிபான்களு க்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் துவங்கியுள்ளது. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று தெரிகிறது. 20 ஆண்டு காலம் அமெரிக்காவின் பிடியில் சிக்கி கொடிய துயரத்தை அனுபவித்த ஆப்கானிய மக்கள் அமைதியை நோக்கி பயணிக்க ஓர் அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதும் சீர்குலைப்பதும் இப்போது தலிபான்களின் கைகளில் இருக்கிறது.

 ஆசியா டைம்ஸ், அல்ஜசீரா, பிரஸ் டிவி செய்திகளிலிருந்து...

;